தமிழ் ஊடகத் துறையின் தலைமகனே போய் வா!
தனியன்
பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் அது தர்பார் மண்டபம். பிரிட்டிஷ் அரசு இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியதும் அதில் தமிழ்நாட்டுக்கென்று முதன்முதலில் அமைந்த இந்திய / தமிழக சுயாட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் அதுவே தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றமாக உருவெடுத்தது.
பிற்காலத்தில் தமிழகம் கண்ட தலைசிறந்த பொதுப்பணித் துறை அமைச்சர்களில் ஒருவரும் நீதிக்கட்சியின் வழித்தோன்றலான திராவிடர் இயக்கத்தின் பேராளுமையுமான கலைஞர் அந்தக் கட்டடத்தைப் பலமுறை புனரமைத்தார். புதுப் பொலிவூட்டினார்.
அதன் பின்புறத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகத்தை அடிக்கல் நாட்டி இரவு பகல் பார்த்துப் பார்த்து கட்டி முடித்தவரும் அதே கலைஞர்தான்.
ஒருபக்கம் பழைமையின் நீட்சியாகக் கம்பீரமாய் நிற்கும் ராஜாஜி மண்டபம். அதன் அருகில் புதுமையின் எழுச்சியாய்ப் புத்தம்புதுத் தலைமைச் செயலகம். இரண்டையும் இணைக்கும் கண்ணியாய் கலைஞர்.
நீதிக்கட்சியை நேரில் கண்ட திராவிடர் இயக்கத்தின் கடைசித் தலைவரும் அவரே. இப்படிப் பழைமைக்கும் புதுமைக்குமான இணைப்புக் கண்ணியாக இருந்த கலைஞர், தான் பார்த்துப் பார்த்து பராமரித்த ராஜாஜி மண்டபத்தின் முகப்பில் நேற்று கொலுவீற்றிருந்தார். ஆம், அவர் இறந்து படுக்கவில்லை. தர்பார் மண்டபத்தில் தரிசனம் தரும் கோமகனாக கொலுவீற்றிருந்தார். அனந்த சயனக் கோலத்தில்.
கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம். அங்கே வீசும் காற்றுகூட உணர்ச்சிகளால் தளும்பி நிற்கிறது. கண்ணீரும் ஆனந்தமும் போட்டிபோடும் விசித்திரம். இறப்பின் ஆற்றாமையும் வாழ்ந்து முடிந்த ஒரு பெருவாழ்வின் பெருமையும் ஒருசேர அங்கே விண்ணதிரும் கோஷங்களாக, அழுகையாக நொடிக்கொருமுறை அங்கே எழும்பி எழும்பி அடங்குகின்றன. அருகில் இருக்கும் வங்கக்கடல் அலைகளைப்போல. சாரிசாரியாக மக்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள்.
அவர் பொதுவாழ்வில் கண்ட மூன்றாம் தலைமுறை ஊடகவியலாளன் நான். எனக்குப் பின் இரு தலைமுறை ஊடகவியலாளர்களை ஆகர்ஷித்த ஆளுமை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அதிமூத்த ஊடகவியலாளரே அவர்தான்.
அதனால்தானோ என்னவோ என் மகன் / மகள் வயதொத்த தமிழ்நாட்டு இளம் தலைமுறை ஊடகவியலாளர்கள் பலர் கையில் மலர் வளையங்களோடு வரிசையில் வந்து தம் அஞ்சலியைச் செலுத்தியவண்ணம் இருந்தனர்.
முப்பதாண்டுக் காலம் செய்தியாளனாக அவரை நேரில் பார்த்து, பேட்டி கண்டு, ஆதரித்தும் விமர்சித்தும் எழுதி, பாராட்டுகளையும் அர்ச்சனைகளையும் வாங்கிய நாட்கள் இனி இனிய நினைவுகளாகவே மட்டுமே எஞ்சி நிற்கும். செய்தியாளனாக அவரைப் பின்தொடர்ந்த தேர்தல் பிரச்சாரச் சுற்றுப் பயணங்கள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஒவ்வொன்றும் தனிக்கதைகள். என்றும் நினைத்து நினைத்து மகிழத்தக்கவை.
எல்லாவற்றுக்கும் சேர்த்து நேரில் பார்த்து அவருக்கொரு நன்றி கூறி விடையனுப்பி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நேரம் பார்த்து அவர் நிரந்தரத் துயில் கொள்ள அவரது அறிவாசான் அண்ணாவின் சமாதி வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த செய்தியும் வந்து சேர்ந்தது. அறுபதாண்டுகளாக அவரது நிரந்தர ஊக்க மருந்தாக இருந்து அவரை ஓய்வின்றி, சோர்வின்றி இயக்கிய “கலைஞர் வாழ்க” கோஷம் விண்ணதிர ஓங்கி ஒலித்தது.
அங்கிருந்து அகல்வதற்கு முன் அவர் முகத்தை மீண்டும் ஒருமுறை இறுதியாகக் கூர்ந்து பார்த்தேன்.
அவருக்கே உரிய அந்த மந்தகாசப் புன்னகை தோன்றி மறைந்ததைப் போன்றதொரு பிரமை.
ஒருவேளை தனக்கான நிரந்தர உறங்குமிடத்தையும் தானே போராடிப் பெற்ற மகிழ்ச்சிதான் புன்சிரிப்பாய் பூத்து மறைந்ததோ?
போய்வாரும் முதுபெரும் ஊடகவியலாளனே.
கையெழுத்துப் பிரதியில் தொடங்கி டிஜிட்டல் யுகம் வரை நீராண்ட ஊடக வடிவங்கள் ஏராளம். அவை ஒவ்வொன்றிலும் நீர் பதித்த தனி முத்திரைகளோ தாராளம்.
எமர்ஜென்ஸியின்போது உன் முரசொலி கார்ட்டூன் உலக அளவில் பேசப்பட்டது. உன் முகநூல் பக்கத்தில் நீ காட்டிய ஜனநாயகப் பண்பு ஊடக உலகில் இன்றளவும் போற்றப்படுகிறது.
இனி நீராள இவ்வுலகில் ஊடகம் எதுவும் பாக்கி இல்லை.
நீர் நிரூபிக்கத்தேவையான வெற்றிகள் எவையும் மிச்சமும் இல்லை.
நிறைவாழ்வு வாழ்ந்தவரே.
உளமார்ந்த நன்றிகள் உமக்கு.
ஊடகத் துறைக்கும் துறையினருக்கும் நீர் நீட்டிய நேசக்கரங்களுக்கும் ஆதூரம் நிறைந்த அரவணைப்புக்கும்.
உம் மறைவால் ஏற்படும் பல்வேறு வெற்றிடங்களைப் பற்றி என் சக ஊடகத் துறையினர் பலரும் விழுந்து விழுந்து விவாதிக்கிறார்கள். உண்மையில் உம் மறைவால் உருவான ஆனப் பெரிய வெற்றிடம் தமிழ்நாட்டு ஊடகத் துறைக்கே என்பது புரியாமல்.
உன் இமாலய இருப்பை நாங்கள் என்று சரியாய் புரிந்துகொண்டோம்? அதன் ஈடு செய்ய முடியா இழப்பை இன்று உணர்ந்துகொள்ள?
தமிழ் ஊடகத் துறையின் தலைமகனே போய் வா!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:01:00
Rating:
No comments: