அழிக்க முடியாத சுவடுகள்!
களந்தை பீர் முகம்மது
யாரிடம் பொறாமைப்பட வேண்டும் என்கிற மனச்சிக்கல் ஏதுமில்லாமல் நான் கலைஞர் கருணாநிதியிடம் பொறாமை கொண்டிருந்தேன். அவர் வாழ்நாளோடு முடிவடைந்து போகிற பொறாமையும் அன்று இது. இன்னும் நீடிக்கக்கூடியது.
அந்தப் பொறாமை அவரது இடையறா உழைப்பின் மீதானது. அவருடைய எழுத்தின் மீதும் அதற்காக அவர் மேற்கொண்ட சிரத்தைகளின் மீதுமானது. அவர் முதல்வராக இருந்தபோது தன் வரலாற்றை எழுதினார்; திரைக்கதை, வசனம் எழுதினார்; நாவல் எழுதினார்; நீண்ட கட்டுரைகள் எழுதினார்: திரைப்படம் பார்த்தார்; பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்; புத்தக விழாக்களைத் தேடித் தேடிச் சென்றார்; புத்தகத்தின் முக்கிய அத்தியாயங்களை மனம் தனக்குள் படமெடுத்துக்கொண்டிருக்கும் நிலையில் உரையாற்றுவார்; எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் கைப்படவே அவர் சில வருடங்களுக்கு முன்பு வரையிலும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருந்தார்.
ஒரு மனிதனுக்கு எத்தனை வேலைகள் சாத்தியம் என்பதை அவரிடமிருந்தே உணர்ந்துகொள்ள முடிந்தது. அவர் முதல்வராக இல்லாதிருந்த காலத்தும் அவர் பெருந்தலைவரே! முதல்வராக இருப்பினும் கட்சித் தலைவராக இருப்பினும் அவரின் வேலைகளுக்கும் வாசிப்புக்கும் எழுத்துக்கும் காலம் வளைந்து வளைந்து அவருக்கு இடமளித்தது. கலைஞரின் அளவற்ற பணிச் சுமைகளுக்கு, மன உலைவுகளுக்கு மத்தியில் இத்தனை நாள் வாழ்க்கை சாத்தியமாகியிருப்பதைக் கவனிப்போம். காலம் ஒவ்வொரு நொடிக்கும் அவர் முன்னே கைகட்டிச் சேவகம் செய்தது என்ற உண்மையை அறிவோம்.
மலைக்கவைத்த ஈர்ப்பு
கலைஞரின் மீதான ஈர்ப்பிலிருந்து நான் 1971ஆம் ஆண்டே விடைபெற்றாகிவிட்டது. எம்ஜிஆரின் மீதான அளவற்ற பற்று அந்த இடைவெளியை உருவாக்கியது. கசப்பும் வெறுப்பும் ஏராளமாக மண்டிக் கிடந்த காலம் அது. எம்ஜிஆர் உண்டாக்கிய சலசலப்பில் கலைஞர் எல்லோராலும் வெறுக்கப்படும் ஆளுமை என்று எண்ணினேன். 1976ஆம் ஆண்டின் மத்திவாக்கில் வேலையின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது என் நினைப்பு முழுவதும் கலைந்தது. சென்னையைப் பொறுத்தமட்டில் கலைஞர்தான் “எங்கள் வீட்டுப் பிள்ளை.” சேரியிலிருந்து எழுந்த ஈர்ப்பு, வர்க்க நிலைகளைத் தாண்டி உயர்மட்ட அரசு அதிகாரி வரைக்கும், மாளிகைவாசி வரைக்கும் நீக்கமறப் பரவிக் கிடந்ததை நேரடியாகக் கண்டு மலைப்புற்றேன். ‘கலைஞர்’ என்ற சொல்லுக்கு மறுசொல் கிடையாது.
தம் வியர்வையிலும் குருதியிலும் கலைஞர் என்று எழுதிக்கொண்டிருந்த உழைப்பாளிகள் எம்ஜிஆர் என்ற கவர்ச்சியிலிருந்து எப்படி விலகி நின்றார்கள் என்பது பெரும் ஆய்வுக்குரிய விஷயம். ஏனெனில் தென்மாவட்டங்கள் முழுவதும் எம்ஜிஆர் வசம்; அதிலும் குறிப்பாகத் தென்மாவட்ட முஸ்லிம்கள் எம்ஜிஆரை எந்த அளவுக்கு நேசித்தார்களெனில், தம்முடைய சொந்த முஸ்லிம் சகோதரராகவே அவரைப் பாவிக்கும் அளவில் நேசிப்பு இருந்தது. எம்ஜிஆர்தான் தென்னக நடிகர்களிலேயே அதிக அளவில் முஸ்லிம் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இனி திமுக என்பதே கிடையாது என்பது 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவு தந்த அனுமானம். அதிமுகவுக்கு அடுத்து காங்கிரஸ்தான் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தது. திமுக லட்சத்திற்கும் குறைவான வாக்குகளில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தது. அப்போது கை நிறைந்த அதிகாரத்துடன் கருணாநிதியே முதல்வராக இருந்தார் என்பது கவனத்திற்குரிய செய்தி. இச்செய்தியை முதன்மையாக வைத்துக்கொண்டு இன்று கலைஞர் கருணாநிதி பெற்றிருக்கும் இடத்தைச் சற்றே அவதானித்தால் இந்நாளின் உச்சம் அவருக்கு எப்படி கிடைத்தது என்கிற மலைப்பு வரலாற்றை உற்றுநோக்கும் அனைவருக்கும் உண்டாகும்.
சோதனை வரலாறு
தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும் கழகம் சந்தித்த சோதனைகளை இன்னொரு கட்சி சந்தித்திருக்காது. 1967ஆம் ஆண்டின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய பின்னர்தான் திமுக முப்பெரும் சோதனைகளைத் தாங்கியது. இந்தச் சோதனைகளை, கருணாநிதிக்குரிய நேரடியான சோதனைகள் என்றும் வர்ணிக்கலாம். எம்ஜிஆரின் கலகக் கொடி, இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை, வைகோவின் பேரலை. இம்மூன்றையும் தாங்கி நின்று கட்சியை மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்தெழுப்பிய தள நாயகர் கருணாநிதி.
அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகம் ஒருவரின் கையில் பூமாலையாகச் சிக்கிவிட்டது, இனி அவ்வளவுதான் என்ற கருத்தோட்டமே எங்கும் நிலவியது. நெடுஞ்செழியன் புறக்கணிக்கப்பட்டது பலருக்கும் வருத்தத்தைத் தந்தது. ஒருவேளை நெடுஞ்செழியன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தால் அவரால் கட்சி இத்தனை சோதனைகளையும் தாங்கியிருக்குமா என்று எவராலும் அறுதியிட்டுக் கூற இயலாது. கருணாநிதி கட்சியின் இமயமானார் என்பதே உண்மை.
கலைஞரின் பேச்சாற்றலுக்குத் துணை புரிந்தது அந்தக் கரகரத்த குரல். கரகரத்த குரலை இனிமையான குரலாக அவர் மாற்றிய ரசவாத வித்தை என்னவென்று தெரியவில்லை. அந்தக் குரல் அவரின் இயல்பான குரலாக இல்லாமல் அவர் வலிந்து உருவாக்கியதாகத் தோன்றுகிறது. நாளடைவில் அதுவே இயல்பாகியிருக்கலாமோ? மேடையில் அவர் பேச ஆரம்பிக்கும்போது உண்டாகும் நிசப்தத்தை நாம் ஒரு மாபெரும் கூட்டத்தில் உணர முடிவதை என்னவென்று சொல்லிப் புளகாங்கிதப்படுவது? கலைஞரின் கீழே ஒவ்வொரு தொண்டனும் எப்படித் திரண்டார் என்பதற்கு அந்த மேடைப்பேச்சு ஓர் உதாரணம்.
இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை அவர் கழக மேடைகளில் பேச ஆரம்பித்தால் கையில் எவ்விதக் குறிப்புமின்றி மேடையில் அமர்ந்திருக்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட முடியும். இதில் ஒவ்வொருவரும் பெருமிதம் அடைந்தார்கள். அதாவது தன்னைத் தன் பெயரால் அறிந்துகொண்ட தலைவர் என்று கலைஞரை உள்ளத்தில் ஏற்றினார்கள். கடந்த இருபது ஆண்டுகளிலும் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கூட்ட விளம்பரத் தாளைக் கையில் வைத்துக்கொண்டு அப்போதும் ஒவ்வொருவரையும் பெயர் கூறிக் கூட்டத்தினரின் கவனத்திற்குக் கொண்டுபோனார். ஓர் ஏழ்மைப்பட்ட தொண்டனுக்கோ, சாதாரண வட்ட, கிளைக் கழகச் செயலாளருக்கோ வேறென்ன இன்பம் வேண்டும். இதனால்தான் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு அருகிப்போன கழகத்தவரை நோக்கி, போட்டியிடத்தான் இடமில்லையே தவிர என் நெஞ்சத்தில் எப்போதும் இடம் உண்டு என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். தொண்டர்களும் அதையே தாம் பெற்ற பெரிய பேறு என்று நாளதுவரை எண்ணித் தம் வாழ்நாளை மகிமை செய்துகொண்டார்கள். கட்சி குலையாமல் நிற்பதற்கு இதுவே சாட்சியமாகும்.
நெருக்கடி நிலை தந்த நெருக்கடி
எம்ஜிஆரால் கருணாநிதிக்கு ஏற்பட்ட நெருக்கடி தொடரும் சமயத்தில்தான் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலைமையும் அமலாகியது. இரு பெரும் தாக்குதல்களையும் அச்சமயத்தில் கருணாநிதியால் தாங்கிக்கொண்டிருக்க வழியில்லை. மக்களின் ஆதரவு குறைவான காலம். நெருக்கடி நிலையின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பி வடமாநிலத் தலைவர்கள் கருணாநிதியின் அரவணைப்பு கிடைக்கும் என்ற திடமான நம்பிக்கையில் தமிழகம் வந்து பதுங்கினர். கருணாநிதி அவர்களின் கவசமானார். நெருக்கடி நிலையையும் ஏற்க மறுத்தார். பின் கட்சியினர் பெரும் இன்னலுக்குள்ளாக்கப்பட்டனர். ஆட்சி கலைக்கப்பட்டது. அதிகாரம் அற்றுப்போனது. மிசா சட்டத்தின் கீழே திமுகவினர் பெருவாரியாகக் கைது செய்யப்பட்டனர். கொடுமையான சிறைவாசம்.
தலைவர்களென்று கணக்கிடப்பட்டால் அநேகமாக கருணாநிதி மட்டுமே சிறைக்குச் செல்லாமல் எஞ்சினார். அவரை எவரும் சந்திக்க முடியவில்லை; அவராலும் எவரையும் சந்திக்க வாய்ப்பில்லை. ஆலோசிக்கவோ, கலந்துரையாடவோ எவருமில்லை. பொதுக்கூட்டங்களில் பேச முடியாது. அதற்கு அனுமதி தர மறுத்தது ஆளுநர் ஆட்சி. இன்னல்கள் தாங்காமல் திமுகவின் நகர, கிராமப்புற நிர்வாகிகளெல்லாம் கட்சியை விட்டு விலகி ஓடினர். அதிலும் சும்மா ஓடவில்லை. பலப்பல நாளிதழ்களில் தம் புகைப்படத்துடன் விளம்பரம் கொடுத்துத் தமக்கும் திமுகவுக்கும் இனி யாதொரு சம்பந்தமும் கிடையாது என்று அறிவித்துவிட்டு ஓடினார்கள். கட்சிக்கொடி பறக்கவோ, கழக வாசக சாலை திறக்கவோ வழியில்லை. தனியே, தன்னந்தனியே தானே எல்லா வியூகங்களையும் வகுத்தார்.
லட்சக்கணக்கான தொண்டர்களைப் பறிகொடுத்த தலைவர் ஆயிரக்கணக்கான தொண்டர்களின் உருக்கு உள்ளத்தைப் பற்றுக்கோலாகக் கொண்டு தமிழகம் முழுவதும் மின்னல்போல் சுழன்றார். பொதுக்கூட்டம் போனால் என்ன, இதோ மண்டபக் கூட்டங்கள் என்று உத்தியை மாற்றினார். மண்டபக் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி இருந்ததா? இல்லை. தலைவனைக் காக்கக் கருதி உயிரையும் கொடுக்கச் சித்தமான தொண்டர்கள் தம் இல்லத்தின் திருமண விழாக்களை, பூப்புனித நீராட்டல்களை, திருமண நாளின் வெள்ளி விழாக்களை நடத்தினர். அங்கெல்லாம் கலைஞர் அழைக்கப்பட்டார்; மண வீடு கழகப் பிரச்சார மேடையானது. அனல் தெறிக்கப் பேசினார். உள்ளம் உருகும் வகையில் பேசினார். தான் பேசியதையே மறுநாள் முரசொலியின் தலைப்புச் செய்தியாக மாற்றினார்.
அனைத்து நாளிதழ்களும் நெருக்கடி நிலைக்கு அஞ்சி கருணாநிதியின் உரைகளைக்கூட பிரசுரிக்காத நிலையில் கலைஞர் பேசுவது என்னென்ன என அறிய வேண்டுமானால் ஒவ்வொருவரும் முரசொலியைத்தான் வாங்கியாக வேண்டும். இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டதால் அதை எழுத்தாயுதமாகக் கலைஞரால் உடனடியாக மாற்ற முடிந்தது.
தொண்டர்களின் உயிர் மூச்சாக ஓர் இதழ்
அந்தக் காலச் சென்னையைத் தம் கண்களின் முன்னே காண விரும்பும் ஒவ்வொருவரும் ஓர் அசாத்தியமான நடப்பைக் கவனத்தில் கொண்டிருக்கக் கூடும். சவாரிக்காகக் காத்திருக்கும் ஒரு ரிக்ஷா தொழிலாளியின் கையில் முரசொலி இருக்கும். சவாரி வரும்வரைக்கும் முரசொலியில் கலைஞரின் உரையை எழுத்துக்கூட்டி வாசிக்கும் அந்தத் தொழிலாளியைக் காணாமல் எவரும் நகர்ந்திருக்க முடியாது. வியர்வை வழிந்தோடும் அந்த நெற்றியின் மீது கலைஞரின் உரை தந்த வெற்றிப் பெருமிதமும் கலந்தோடிக் கொண்டிருக்கும். அரசுப் பணிக்கோ, தனியார் நிறுவனத்தின் கௌரவமான பணிக்கோ அவசரம் அவசரமாகச் செல்லும் ஓர் ஊழியர், தம் கையில் முரசொலியைச் சுருட்டி வைத்துக்கொண்டு போவதைக் காணலாம். மின்சார ரயிலின் பயண நேரம் முழுவதுமே முரசொலி வாசிப்புக்கென ஒதுக்கியிருந்தவர்கள் உண்டு. கழகத் தொண்டர்கள் தம் உயிர் மூச்சை முரசொலியில் பதுக்கிக்கொண்டார்கள். இதுபோல உத்வேகமிக்க தொண்டர்களை எந்த முதலாளித்துவக் கட்சியும் உலக வரலாற்றில் பெற்றிருக்க வாய்ப்பில்லை.
கட்சி இன்றும் உயிர்த்திருக்கும் வரலாற்றை ஒருவர் உணர்ந்தறிய வேண்டுமானால் கட்சியின் தொடக்கக் காலச் சாதனைகளை விட, நெருக்கடி நிலைக் கால அவலங்களையே பொருட்படுத்திப் பேச வேண்டும். அது கழகத்தின் எழுச்சியல்ல; கலைஞரின் எழுச்சி.
கலைஞரின் மீது எவ்வளவு பற்றின்மை கொண்டாலும் வரலாற்றுக்கு மரியாதை செலுத்த விரும்பினால் நாம் இந்தக் காலகட்டத்தையே பொருட்படுத்த வேண்டும். அவர் எம்ஜிஆர் இருந்த நாள் வரைக்கும் ஆட்சிப் பீடத்தில் அமராமல் இருந்திருக்கலாம். ஆனால் கழகத்தின் வரலாற்றை அவ்வாறான நிலையிலிருந்து மட்டுமே கவனிக்கலாகாது. ஒரு கட்டத்தில் கட்சியின் முதுகெலும்பே உருவப்பட்டுவிட்டதோ என்கிற ஐயம் இருந்தது. அப்படிப்பட்ட மாபெரும் பிரமையை உடைத்துக் கட்சியை எழுந்து நிற்கும்படிச் செய்தார். அதற்குத்தான் அவர் எப்போதும் பேசினார்; எழுதினார்; வாசித்தார். 24 மணி நேர தினசரி வாழ்க்கையை 48 மணி நேரமாக வசப்படுத்திக்கொண்டார்.
சாதனைகள், சறுக்கல்கள்
கலைஞரின் ஆட்சிக்காலச் சாதனைகள் பலவும் தமிழகம் வீறு கொண்டெழக் காரணமாக இருந்தன. இந்திய அரசியல் களத்தில் பகுத்தறிவு, சமூக நீதி, சாதிய எதிர்ப்பு மனோபாவத்தைப் பெருமளவுக்கும் பின்பற்றியவர் அவரே. அவருடைய சாதனைகளாக இன்னும் பல உருவாகியிருக்க வேண்டும். அவர் எதிர்கொள்ள நேர்ந்த அரசியல் சூழல்கள் அவரை 1976க்குப் பின் அலைக்கழித்தன. உறுதியான ஆதரவாளர் - உறுதியான எதிர்ப்பாளர் என்கிற தன்மையை அவர் எப்போதும் கொண்டிருந்தார். நெருக்கடி நிலைக் காலக் கொடுமைகளை அவர் மறந்து இந்திரா காந்தியுடன் அரசியல் உறவை ஏற்படுத்த முனைந்ததிலிருந்து சறுக்கல்கள் பல இயல்பாயின. எம்ஜிஆரின் அரசியல் நகர்வு எதுவோ அதன் எதிர்நிலையே தன் அரசியல் செயல்பாடு என்று அவரும் மாறிமாறிச் செயல்பட்டார். பின் ஜெயலலிதாவின் அரசியலை எதிர்கொள்ள நேர்ந்தபோதும் அவர் அதே நிலையில் செயல்பட வேண்டியவராகவே ஆனார்.
பாஜகவுடன் அவர் கொள்ள நேர்ந்த உறவு இப்படியான அபத்த நிலைகளில் ஒன்று. அதில் முஸ்லிம்களின் ஆதரவில் தொய்வு ஏற்பட்டாலும் கலைஞரையே தம் உற்ற துணையாகக் கருதிக்கொண்டிருக்கிறது முஸ்லிம் சமுதாயம். இன்று பெரும்போக்கான நிலையில் இந்திய அரசியல் பீடம் தமக்கு எதிராகச் செயல்படுவதில் மருட்சிகொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு இது பெரும் பேரிழப்பே. ஏற்பட்ட வெற்றிடத்தைக் கழகம் வருங்காலத்தில் ஈடுசெய்யுமா என்ற கவலை பலரிடமும் தோன்றியிருக்கிறது.
கலைஞரின் எழுத்துகளிலிருந்தே கழகம் அத்தகைய வெற்றிடத்தை நிரப்பும் என்று நம்புவதே ஒரே வழி.
அழிக்க முடியாத சுவடுகள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:03:00
Rating:
No comments: