’’‘திருநங்கை’னு எங்களுக்கான கம்பீர அடையாளம் தந்தவர் கலைஞர்!’’ - உருகும் கிரேஸ் பானு
இந்திய ஜனநாயகம் பாலினப் புரிதலற்று இயங்குகையில், அதன் காதில் மாற்றுப்பாலினத்தோரின் சமூக நீதியை ஓங்கி ஒலித்தவர் நீங்கள்..." - கிரேஸ் பானு
தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மறைவு, அனைவரையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மலர்களையே சூடிக்கொண்டிருந்த பெண்கள், தங்களுடைய பெயருக்குப் பின்னால் பட்டங்களைச் சூடிக்கொண்டதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர். பெண்களுக்காகப் பல நலத்திட்டங்களைச் செய்தவர். இன்றும், `கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' மூலமாகப் பலன் பெற்றவர்கள் ஏராளம். ஆண், பெண் மட்டுமன்றி, மாற்றுப்பாலினத்தவர்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் தொடங்கிவைத்தவர். அவருடைய இழப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்கிறார், முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானு.
``திருநங்கைகள் நலவாரியம், திருநங்கைகள் வரலாறு என்றால், அதன் தொடக்கப்புள்ளி, கலைஞர் கருணாநிதி மட்டுமே. இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கென முதன்முதலாக நலவாரியம் அமைத்து, அந்த நலவாரியத்தின் மூலமாக எண்ணற்ற நலத்திட்டங்களை உருவாக்கியவர். நான் முதல் பொறியியல் பட்டதாரியாகப்போகும் செய்தியை அறிந்ததும், என்னை வாழ்த்திய முதல் அரசியல் தலைவர் அவர்தான். போராடி பொறியில் பட்டப்படிப்பில் சேர இடம் கிடைத்ததும், முரசொலி பத்திரிகையில், `கிரேஸ் பானு என்ற திருநங்கை பிளஸ் டூ முடித்த நேரத்தில், பெற்றோர்களால் கைவிடப்பட்ட போதிலும் பல சிரமங்களைக் கடந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கவுன்சிலிங்கில் தேர்ச்சிபெற்று, முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாகிறார். அவருக்கு என் வாழ்த்துகள்!" எனப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பினேன். நான் அவரை நேரில் சந்தித்ததில்லை. கடிதங்கள் மூலமே பலமுறை உரையாடினோம். அவருடைய வைர விழாவினைச் சிறப்பு செய்யும் பொருட்டு, ஒரு வாழ்த்து மடல் அனுப்பினேன். அந்த மடலில்,
`பெருமதிப்புக்கும் பாசத்துக்கும் உரிய மகத்தான அரசியலாளர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு...
2017 ஜூன் 3 தங்களின் 94 அகவையில் 60 ஆண்டு சட்டமன்ற பணி வைர விழா ஏற்பாட்டைக் கேள்வியுற்று மகிழ்வடைகிறேன். தமிழரின் வரலாற்றில் தங்களின் மகத்தான அரசியல் வாழ்வு முக்கனியில் இனிய சாறாகப் புதைந்து அதி ருசியூட்டுவதாக இன்றும் என்றும் இருக்கும். தாங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை எண்ணி பேரின்பம் கொள்கிறேன். விளிம்புநிலைச் சமூகமான மாற்றுப்பாலின சமூகத்தின் கொடிய, நுண்ணிய வேதனைகளை கூர் அறிவாற்றலால் உணர்ந்து, மாற்றத்துக்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தவர் நீங்கள். எங்கள் பாலினத்தின் தற்போதைய முன்னேற்றத்தில் பெறும் பங்கு தங்களுடையது என்பதை திருநங்கைச் சமூகமான என் சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது.
`ஒம்போது', `அலி', `பொட்டை' என்றெல்லாம் கேவலமாக விளிக்கப்பட்டு, கொடூரமாக இழிவு செய்யப்பட்ட என் சமூகத்தை, `மாற்றுப்பாலினத்தோர்', `திருநங்கையர்' எனப் பெயரிட்டு பெரும் மேடைகளிலும், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களிலும் இப்பெயரைப் பிரசுரித்து எங்கள் இழி துடைக்க தாங்கள் அரும்பாடுபட்டதையும், இந்தியாவிலேயே முதலாய் எங்கள் பாலினத்துக்குத் தனியாக நலவாரியம் அமைத்து எங்கள் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்தியதையும் வைர விழாவில் பாசத்தோடும், பணிவோடும் நினைவு கூர்கிறோம். இந்திய ஜனநாயகம் பாலினப் புரிதலற்று இயங்குகையில், அதன் காதில் மாற்றுப்பாலினத்தோரின் சமூக நீதியை ஓங்கி ஒலித்தவர் நீங்கள். உங்களின் கருத்துகளாலும் கட்டளைகளாலும் வழிநடத்தப்பட்ட திரு.திருச்சி சிவா அவர்களின் தனி நபர் மசோதா, இந்திய ஜனநாயகத்தின் முன்னால் மட்டுமல்ல, உலக ஜனநாயகத்தின் முன்னும் மாற்றுப்பாலினத்தோரின் நியாயங்களை முன்வைத்து சமூக நீதி காத்தது. 2014-ம் ஆண்டில், இந்தியாவிலேயே திருநங்கை எனும் பாலின சுய அடையாளத்துடன் நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அதற்காக மறுநாள் முரசொலியில் நீங்கள் என்னை வாழ்த்தியபோது ஒட்டுமொத்த ஆனந்தத்தை அன்றே பருகியதாக உணர்ந்தேன். என்னை வாழ்த்திய மகத்தான வாழ்த்துரையாளருக்கு, என் சமூகத்தின் விடுதலைக்காக உழைக்கும் மகத்தான அரசியலாளருக்கு, என் சார்பிலும் என் சமூகத்தின் சார்பிலும் இதயபூர்வ வாழ்த்துகளைப் பரிசளிக்கிறேன்.
மகத்தான அரசியலாளரே,
நீரும் உம் சமூக நீதியும் என்றென்றும் நீடூடி வாழியவே!
- மதிப்பிற்குரிய மங்கை பானு
எனக் குறிப்பிட்டிருந்தேன். இந்த மடலை, அவருடைய முரசொலி பத்திரிகையில் பதிவேற்றியிருந்தார். உலகத்தில் அத்தனை சந்தோஷத்தையும் அந்தத் தருணத்தில் உணர்ந்தேன். கிராமத்தில் `உஸ்'னு கூப்பிட்டு இருந்தவங்க, இப்போ திருநங்கைன்னு கூப்பிடும்போது பெருமையா இருக்குது. நிறைய பேர் `திருநங்கை' என்கிற வார்த்தைக்குத் தவறான அர்த்தம் நினைக்கிறாங்க. உண்மையாவே அதன் பொருள், மதிப்புக்குரிய நங்கை என்பது. எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, சமூகத்தில் எங்களுக்கென மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர், கலைஞர் அய்யாதான். இப்போ அவர் இல்லைங்கிறதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியலை'' எனக் கண் கலங்கினார் கிரேஸ் பானு.
’’‘திருநங்கை’னு எங்களுக்கான கம்பீர அடையாளம் தந்தவர் கலைஞர்!’’ - உருகும் கிரேஸ் பானு
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:28:00
Rating:
No comments: