தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு!
புதுச்சேரி அருகே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலில் நுழையக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் கோயிலைப் பூட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், திருக்கனூரை அடுத்த கூனிச்சம்பட்டு என்னும் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உள்ளே செல்ல தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அந்தக் கிராமத்தை சேர்ந்த தலித் பெண் ஒருவர் கோயிலின் உள்ளே நுழைய முயன்றபோது, மற்ற சமூகத்தை சேர்ந்த சிலர், அவரைத் தடுத்து நிறுத்தி, கோயிலுக்குள் நுழையக் கூடாது என மிரட்டி அனுப்பியுள்ளனர்.
தீண்டாமை ஒழிப்பு இயக்கம் மற்றும் அமைப்பைச் சார்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோயிலுக்குள் அனுமதிக்க மறுத்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் எனவும், அனைத்துச் சமூகத்தை சேர்ந்த மக்களும் கோயிலின் உள்ளே சென்று வழிபடவும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இரு சமூகத்தினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு எட்டவில்லை.
இதையடுத்து, அந்தக் கிராமத்தை சேர்ந்த தலித் மக்கள் மற்றும் சில தலித் அமைப்புகள் இணைந்து இன்று (ஆகஸ்ட் 3) ஆடிபெருக்கை ஒட்டி, கோவிலில் பொங்கல் வைத்து வழிபட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற சமூகத்தை சேர்ந்த மக்கள் தலித் மக்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதற்காக இன்று காலையிலே கோயிலைப் பூட்டி, கோயிலின் முன்னே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவுக்கு வராத நிலையில், கோயிலின் முன்பே குடியிருந்த மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்தனர். இருப்பினும் அங்குப் பதற்றமான சூழல் நிலவிவருவதால், அங்குக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தலித் மக்கள் கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:02:00
Rating:
No comments: