அமித் ஷா பாதுகாப்பு செலவு விவரம்: வெளியிட மறுப்பு!
பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு தொடர்பான செலவின விவரங்களை வெளியிடக் கோரி ஆர்டிஐ மூலம் அளிக்கப்பட்ட மனுவுக்குப் பதில் அளிக்க முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவராக அமித் ஷா பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பதவியில் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.
இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு தீபக் ஜூனைஜா மத்திய தகவல் ஆணையத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக மனு அளித்தார். அதில், அரசியல் சாசனப்படி எந்த விதமான அரசுப் பதவிகளும் வகிக்காத ஒருவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிப்பது எந்த விதத்தில் சரியாகும். ஒரு கட்சியின் தலைவரான அமித் ஷாவின் பாதுகாப்புக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை எவ்வளவு என்பது குறித்தும், இதேபோல் எத்தனைப் பேருக்கு மத்திய அரசு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. அவர்களுக்கு மத்திய அரசு செலவு செய்த தொகை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இந்த மனு தொடர்பாக மத்திய உள் துறை அமைச்சகத்திடம் மத்திய தகவல் ஆணையம் விளக்கம் கேட்டது. அதற்கு, உள் துறை அமைச்சகம், இந்த விவரங்கள் அனைத்தும் தனிப்பட்ட நபர்கள் சார்ந்தவை. இந்தத் தகவலை வெளியிட்டால், பாதுகாப்பு அளிக்கப்பட்டுவரும் நபரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் அல்லது தாக்குதலுக்கு ஆளாகலாம். இது தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 8(1)ஜி பிரிவின் விலக்கு அளிக்கப்பட்டதாகும் எனத் தெரிவித்தது.
இதை எதிர்த்து, தனக்கு விவரங்களை வழங்கிட கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தீபக் ஜூனைஜா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விபு பகுரு, மனுதாரர் கேட்கும் விவரங்கள் தகவல் உரிமைச்சட்டம் பிரிவு 8இன் கீழ் விலக்குப் பெறப்பட்டதா என்று ஆய்வு செய்து, இல்லாவிட்டால் அளிக்கலாம் என தகவல் ஆணையத்துக்கு உத்தரவுப் பிறப்பித்தார்.
இந்த மனுவை மறுபடியும் ஆய்வு செய்த மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையர் யசோவர்தன் ஆசாத், இந்த மனு தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 8(1)இன்கீழ் வருவதால், மனுதாரர் கேட்டும் விவரங்களை வெளியிட முடியாது என மறுத்துவிட்டார்.
இது குறித்து தீபக் ஜூனைஜா கூறுகையில், கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில் பாஜக என்ற ஒரு கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளித்து வருகிறது. அமித் ஷா எந்தவிதமான அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் பதவியும் வகிக்கவில்லை, அரசு பதவிகளும் இல்லை. அப்படி இருக்கையில் மக்களுடைய பணம் வீணாகச் செலவு செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் சிறப்பு இயக்குநர் ஆசாத் கூறுகையில், ‘‘பாதுகாப்பு அளிக்கப்படக்கூடியவருக்கு ஏற்கெனவே உச்சக்கட்ட அச்சுறுத்தல் இருப்பதால்தான் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பு விவரங்களை வெளியிடுவது அவர்களின் உயிருக்கும், உடல்ரீதியான பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும்.
மேலும், அரசுப் பதவி வகிப்பவர்கள் மட்டுமல்லாது தனிநபர்களும் சிலர் இசட் ப்ளஸ் பாதுகாப்பு பெற்று வருகின்றனர். அவர்களின் விவரங்களையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்க முடியாது’’ எனத் தெரிவித்தார்.
அமித் ஷா பாதுகாப்பு செலவு விவரம்: வெளியிட மறுப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:47:00
Rating:
No comments: