இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி: 62 பேர் பலி!

இந்தோனேசியாவில்  மீண்டும் சுனாமி: 62 பேர் பலி!

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிபேரலைகளை நினைவுபடுத்தும் விதமாக தற்போது இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி தாக்கியுள்ளது. இதில் 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள எரிமலை நள்ளிரவில் திடீரென வெடித்ததுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சுமத்ரா தீவு, ஜாவா கடற்கரைக்கு இடையே, செராங், பன்டேகிளாங், சவுத் லாம்பங் ஆகிய இடங்களில் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 62 போ் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி 400க்கும் மேற்பட்ட வீடுகள், 10 ஹோட்டல்கள், மீனவ படகுகளும் சேதமடைந்துள்ளன. அங்கு மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கும், பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைத்து வருகின்றனர். எனினும் தற்போது வரை சுனாமிக்கான காரணம் குறித்து முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை. இந்தோனேசியா நிலவியல் மற்றும் வானிலை மையத்தின் ஆய்வாளர்கள் கூறுகையில், “அனாக் கிராகட்டு பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்ததன் காரணமாகவும், கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
சுனாமி தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன. ஜாவா கடற்கரை பகுதியில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நார்வே சுற்றுலா பயணி ஒருவர், ”கடற்கரை அருகில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தேன், திடீரென 15 முதல் 20 அடி வரை கடல் அலைகள் உயர்ந்தன. ஹோட்டலுக்குள் தண்ணீர் புகுந்ததும் அலறி அடித்து ஓடினேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமியில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது மீண்டும் சுனாமி ஏற்பட்டுள்ளது.
2004ஆம் ஆண்டு டிசம்பா் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில் சிக்கி லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். 26ஆம் தேதிக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில் அதனை நினைவுபடுத்தும் விதமாக தற்போது ஏற்பட்டுள்ள சுனாமி பேரலைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
https://minnambalam.com/k/2018/12/23/34
இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி: 62 பேர் பலி! இந்தோனேசியாவில் மீண்டும் சுனாமி: 62 பேர் பலி! Reviewed by நமதூர் செய்திகள் on 04:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.