ஸ்டெர்லைட்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தல்!

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதனையடுத்து எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான், உச்ச நீதிமன்றம் அல்ல அரசாணை எங்கே போனாலும் செல்லும். ஐநா சபைக்கே சென்றாலும் இனி ஆலையைத் திறக்க முடியாது” என்பது போன்ற கருத்துகளை முதல்வர் உள்பட அமைச்சர்கள் கூறிவந்தனர்.
ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் நிர்வாகம் (வேதாந்தா) தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என நேற்று (டிசம்பர் 15) உத்தரவிட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தீர்ப்பு தொடர்பான அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் பின்வருமாறு...
திமுக தலைவர், மு.க.ஸ்டாலின்
“ஸ்டெர்லைட் ஆலையை மூடிய அரசாணையை தமிழக அரசின் கொள்கை முடிவு என்று ஏற்றுக்கொள்ள முடியாது” என்று நெற்றியில் அடித்ததைப் போல் சுட்டிக்காட்டி ஆலையைத் திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்திருக்கும் 40 பக்கத் தீர்ப்பு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுக அரசின் கன்னத்தில் ஓங்கி விடப்பட்ட அறையாகவே அமைந்திருக்கிறது.
உயர் நீதிமன்றமும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் எடுத்து வைத்த வாதத்தை ஏதோ உள்நோக்கத்துடன் ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதமாக நடந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தூத்துக்குடி மக்களிடம் மட்டுமல்ல - சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களிடமும், உயிரிழந்த குடும்பங்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். “மேல்முறையீடு செய்வோம்” என்று வழக்கமான பல்லவியைப் பாடிக் கொண்டிருக்காமல், உடனடியாக தமிழக அரசே முன்னின்று ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுற்றுப்புறச்சூழல் ஆபத்து தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரிக்க வேண்டும். சேகரித்து, அந்த ஆலை தொடருவது “சீர் செய்யவே முடியாத மாசு ஏற்படுத்தும்” (IRREVERSIBLE POLLUTION) என்பதை உறுதி செய்யும் வகையில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழக அமைச்சரவை கூடி ஒரு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர், வைகோ
மக்கள் கொந்தளிப்பு எரிமலையாகும் என அஞ்சி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஆலையை மூடுவதாக தமிழ்நாடு அரசு கண்துடைப்பு நாடகம் நடத்தியது. பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் எனச் செயல்படும் அதிமுக அரசு, ஸ்டெர்லைட் பிரச்சினையில் கொள்கை முடிவு எடுக்கவில்லை. அதையே சுட்டிக்காட்டி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையை வைத்து ஆலையை மூட முடியாது என்றும் தீர்ப்பாய நீதிபதி கோயல் குறிப்பிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலை என்பது தூத்துக்குடி மக்களுக்கு உயிர் குடிக்கும் எமனாகும். தீர்ப்பாயம் தந்த தீர்ப்பை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் செல்வேன். ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியிலிருந்து அகற்றப்படுவதை வருகிற காலம் காணத்தான் போகிறது.
தேமுதிக பொதுச் செயலாளர், விஜயகாந்த்
ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பையும் மீறி மீண்டும் இந்த ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு உடனடியாக இதை கவனத்தில்கொண்டு, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாத அளவுக்கு, நல்ல தீர்வை மக்களுக்குத் தர வேண்டும்.
மேலும் மக்களுக்கும், நாட்டுக்கும் எந்தவிதத்திலும் பாதிக்காத மாசுக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக, நோய் நொடிகள் வராத ஆலைகள் வரும்போது, அதை நாம் முழுமையாக வரவேற்கலாம். மாசுக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, மக்கள் வரவேற்கக்கூடிய எந்த ஓர் ஆலை வந்தாலும் அதை வரவேற்பது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை. மக்களின் எதிர்ப்பு பெற்ற இந்த ஆலையை மீண்டும் திறக்க தேமுதிகவுக்கு உடன்பாடு இல்லை. எனவே தேமுதிக சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறேன்.
பாமக நிறுவனர், ராமதாஸ்
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை: செய்தி - என்ன நடக்கும் என்று நினைத்தோமோ, அது தான் நடந்திருக்கிறது. உலக நீதிமன்றத்துக்குச் சென்றாலும் திறக்க முடியாது என்றவர்கள் இப்போது என்ன செய்யப் போகிறார்கள்? இனியாவது சட்டம் இயற்ற வேண்டும்.
அமமுக துணைப் பொதுச் செயலாளர், தினகரன்
தமிழக மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டப்போராட்டங்களில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்துள்ள பழனிசாமி அரசு, இப்போதாவது தூத்துக்குடி மக்களின் நலன் கருதி சட்டமன்றத்தைக் கூட்டி தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம் என்ற கொள்கை முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்ற முன்வர வேண்டும்.
சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர், கே.பாலகிருஷ்ணன்
ஆலையைத் திறக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருப்பது அப்பட்டமாக வேதாந்தா குழுமத்துக்கு சாதகமாக எடுக்கப்பட்ட நிலைபாடே. இந்தப் பின்னணியில் ஆலை மூடலை தொடர்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டுமென்றும், பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்துகிறோம். தூத்துக்குடி மக்கள் நலனுக்காக அரசியல் வித்தியாசமில்லாமல் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் போராட முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, மக்களைத் திரட்டி தொடர்ச்சியான களப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கும்.
சிபிஐ மாநிலச் செயலாளர், முத்தரசன்
வேதாந்தா நிறுவனத்தின் நிலைபாட்டுக்கு மட்டுமே மதிப்பளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் அளிப்பதுடன், ஆலையே வேண்டாம் எனப் போராடிய மக்களின் உணர்வுகளின் மீதான தாக்குதலாகவே இதைக் கருதுகிறோம். மேலும் இத்தகைய தீர்ப்பு மக்களின் கோப ஆவேசங்களையும், கொந்தளிப்புகளையும் அதிகரிக்கவே செய்யும். எனவே, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
விசிக தலைவர், திருமாவளவன்
தூத்துக்குடி மக்கள் மீது தமிழக அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பமாக இருக்குமானால் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உடனடியாகத் தடையாணை பெற வேண்டும். அது மட்டுமின்றி அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாகத் தமிழக அரசு இருக்கும் என்று அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
https://minnambalam.com/k/2018/12/16/23
ஸ்டெர்லைட்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தல்! ஸ்டெர்லைட்: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வலியுறுத்தல்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.