தர்மம் செய்து வாழ்! - வி.களத்தூர் எம்.பாரூக்
தஸதகா (தர்மம் கொடுப்பது) எனும் வார்த்தை சதகா (உண்மையைச் சொல்வது, உண்மையாளராய் இருப்பது) எனும் அரபிக் பதத்திலிருந்து உருவானதாகும். தர்மம் கொடுப்பது குறித்து இஸ்லாம் பல இடங்களில் பேசுகிறது. நரகத்தை விட்டு பாதுகாக்கும் வல்லமை தர்மத்திற்கு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் "பேரிச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்" என நபிகள் நாயகம் நவின்றுள்ளார்கள்.
யாசகம் கேட்டு வருபவர்களிடம் சில சில்லறைகளை போட்டு தனது கடமையை? நிறைவேற்றியதாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் . தர்மம் செய்வது தனது பொருளாதாரத்தில் சேதாரத்தை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் நிலை பலரிடமும் இருக்கிறது. அந்த அச்சம் தேவையற்றது. மற்றவர்களுக்கு கொடுத்து உதவுவதின் மூலம் உமது பொருளாதாரம் மேம்படுத்தப்படும் என்று (நீ செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன்!!) இறைவன் உறுதியளிக்கிறான்.
தான் சேமித்துவைத்த அல்லது தான் சம்பாதிக்கிற அனைத்தையும் தர்மம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. அதேபோல் எங்கேயோ தேடிப்போய் வேறு யாரிடமோதான் தர்மம் செய்யவேண்டும் என்ற அவசியமும் இல்லை. தேடி வருபவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்களில் இயலாதவர்களுக்கும் தர்மம் செய்வதில் முன்னுரிமை வழங்கவேண்டும். "தேவைபோக எஞ்சியத்தைத் தர்மம் கொடுப்பதே சிறந்ததாகும். மேலும் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக" என நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள்.
இஸ்லாம் எளியமுறையிலான தர்மத்தைக் கற்றுத்தருகிறது. இதன்மூலம் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் மட்டுமல்ல, மிகவும் பின்தங்கியவர்களும் தர்மம் செய்து அதற்கான நற்கூலியைப் பெற்றிடலாம். ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ, மனிதனோ, பிராணியோ பயன்பெற்றால் அதன் காரணத்தால் தர்மம் செய்ததற்கான பிரதிபலனை அவர் அடைகிறார் என்று இஸ்லாம் கூறுகின்றது. ஒரு நல்லச் செயலைச் செய்யத்தூண்டி நன்மையின் பக்கம் அழைப்பதும், தீமைச் செயலை செய்யாமற் தடுப்பதும்கூட ஒர் தர்மமே.
சாதாரணமாக நடக்கக்கூடிய பாதைகளில் முள், கம்பி, கற்கள் போன்ற ஊறுவிளைவிக்கக்கூடிய பொருளொன்றை நடைபாதைகளிலிருந்து அப்புறப்படுத்துவதற்கும் தர்மம் செய்ததற்கான நற்கூலி வழங்கப்படுகிறது. அதனால் பலருக்கு தீங்கு வருவதும் தடுக்கப்படுகிறது. அதுமாத்திரமல்ல நபிகள் நாயகம் சொல்லியதுபோல் சக மனிதனை சிரித்த முகத்துடன் சந்திப்பதுகூட தர்மமாகும்.
தர்மம் செய்வதின் மூலம் பலருக்கு ஆறுதலாக, அரவணைப்பாக இருக்க முடியும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகிற சூழலில் பிறருக்கு உதவுவதும், வாழ்விழந்தவர்களுக்கு வாழ்வளிப் பதும் அனைவரும் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்றாகும். அது தர்மம் செய்வதின்மூலமே சாத்தியமாகும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : தின இதழ்
தர்மம் செய்து வாழ்! - வி.களத்தூர் எம்.பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:10:00
Rating:
No comments: