வினாத்தாள் கசிவு: 11 பேர் மீது வழக்கு!
எஸ்எஸ்சி தேர்வின் வரலாறு (history),அரசியல் அறிவியல் (Political Science) வினாத்தாள் (part 1) வெளியானது தொடர்பாக ஆசிரியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை அந்தேரி பகுதியில் உள்ள எம்விஎம் ஸ்வாமி முக்தானந்த் உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் (மார்ச் 19) தேர்வு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த 3 மாணவர்கள் தங்களின் செல்பேசிகளையும், புத்தகங்களையும் தொடர்ச்சியாக ஆராய்ந்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்து கொண்டிருந்த தேர்வு கண்காணிப்பாளர் சந்தியா பவார் 3 மாணவர்களில் ஒரு மாணவருடைய செல்பேசியை சோதனை செய்தார். அப்போது, வரலாறு, அரசியல் அறிவியல் வினாத்தாள் செல்பேசியில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக தேர்வு மையத்தில் இருந்த மூத்த அதிகாரிகளிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
தேர்வு காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த சம்பவம் தேர்வுக்கு முன்னதாக நடைபெற்றது. எனினும், 3 மாணவர்களும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு முடிந்ததும், மாணவர்கள் 3 பேரையும் அம்போலி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் மகாராஷ்டிரா பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் 8 மாணவர்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காவல் துறை ஆய்வாளர் ரவிந்த்ரா சவான்கே மற்றும் துணை ஆய்வாளர் தயா நயக் பத்து மணி நேரத்திற்குள் வழக்கு விசாரணையை முடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்த பயிற்சி வகுப்பு ஆசிரியர் ஃபிரோஸ் கான்(49), மும்பையைச் சேர்ந்த இம்ரான் ஷேக் (45) மற்றும் அன்வருல் ஹாசன் (21) ஆகியோரைக் கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட இவர்கள் வினாத்தாளை வெளியிட ரூ. 100 முதல் ரூ. 2000 வரை பணம் பெற்றுள்ளதும், இந்த 3 மாணவர்கள் தவிர மேலும், 5 மாணவர்களுக்கு வினாத்தாளை அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களைச் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மார்ச் 23ஆம் தேதி வரை காவலில் வைக்கப்படவுள்ளனர்.
அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள 12,000 முதல் 40,000 காலியிடங்களை நிரப்ப எஸ்எஸ்சி (மத்திய பணியாளர் தேர்வாணையம்) சார்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ‘ஜிஜிஎல் டயர் 2’ தேர்வு நடத்தப்பட்டது. தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகத் தேர்வெழுதிய மாணவர்கள் டெல்லி எஸ்எஸ்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய எஸ்எஸ்சி தலைவர் அசிம் குரானா மார்ச் 4ஆம் தேதி பரிந்துரை செய்தார்.
வினாத்தாள் கசிவு: 11 பேர் மீது வழக்கு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:52:00
Rating:
No comments: