தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக விவசாயம்!
தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளற்ற ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பாசனத்துக்கு போதுமான தண்ணீர் கிடைக்காமல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதேபோல காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் காவிரியில் போதிய தண்ணீர் இல்லாமல் லட்சம் ஏக்கரிலான நெற்பயிர்கள் வறட்சியில் சிக்கியுள்ளன. இதனால் இந்த ஆண்டுக்கான உணவு தானிய உற்பத்தி இலக்கான 100 லட்சம் மெட்ரிக் டன்னை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்குப் போதிய தண்ணீர் வராததால் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கான தண்ணீர் திறக்கப்படுவதும் ஜனவரி 28ஆம் தேதி நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் லால்குடி தாலுகாவில் உள்ள புள்ளம்பாடி கிராம விவசாயிகள் உடனடியாக காவிரியிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “டெல்டா விவசாயிகள் தண்ணீர் தொட்டிகளில் நீரைச் சேமித்து விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர். மழை பெய்தால்தான் பயிர்களைக் காக்க இயலும். கடந்த ஆறு ஆண்டுகளில் மகசூல் ஏக்கர் ஒன்றுக்குத் தோராயமாக 1,680 கிலோவாகக் குறைந்துள்ளது” என்றார்.
கடந்த ஆண்டில் கர்நாடகாவிலிருந்து தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையிலிருந்தும் டெல்டா பகுதி விவசாயத்துக்குத் தாமதமாகவே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு சம்பா மற்றும் தாளடி பருவங்களில் அறுவடை தாமதமாகியுள்ளது. மேலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு உற்பத்தி குறைந்துள்ளது என்பதும் அரசு அறிக்கைகளின் மூலம் உறுதியாகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெறுவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசு ஒருங்கிணைத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிரதமரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரையில் பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 3) சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் 90 சதவிகிதப் பயிர்களும், சிவகங்கையில் 70 சதவிகித பயிர்களும் தண்ணீரின்றி அழியும் நிலையில் இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். மேலும், திருவாடனை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி தாலுகாக்களில் அரசின் உதவியோடு மணல் கொள்ளை நடைபெற்று வருவதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தண்ணீரின்றித் தவிக்கும் தமிழக விவசாயம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:13:00
Rating:
No comments: