கண்காணிக்கும் கேமரா (சிறுகதை) - மு.உமர் முக்தார்


கேமரா பொருத்த போகிறார்கள் என்ற செய்தி தீயாக பரவியது. கூடவே பரபரப்பும் பற்றிக்கொண்டது. எல்லோர் பேச்சிலும் அதுவே பிரதானமாக இருந்தது. கடைவீதியில் எப்போதும் விட மக்கள் குழுமிக்கொண்டு பேசிக்கொண்டனர். காவல்துறை சார்பில் ஊரில் பல இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் வேலைகள் துவங்கி நடைபெற்றன. எல்லோரும் ஆச்சரியமாக வந்து கேமரா பொருத்துவதை பார்ப்பதும் செல்வதுமாக இருந்தனர். ஊருக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும் என்று பலரும் மகிழ்வு கொண்டனர். தூரத்தில் நிற்பவரை கூட தெளிவாக அடையாளம் காட்டியது அந்த கேமரா. "யப்பா அவ்வளவு தூரம் தெளிவா தெரிதுடா" இளைஞர்கள் தங்களுக்குள் ஆச்சரியமாக பேசிக்கொண்டனர்.  ஊரின் முக்கியமான பல பகுதிகளில் கேமரா அமைக்கப்பட்டது. இவைகள் மட்டுமே  பரபரப்பிற்கு காரணம் அல்ல.

ஊரின் முக்கியமான தெருவில் கேமரா அமைக்க நடைபெற்ற முயற்சிதான் காரணம். அதுதான் ஊரையே பேசும்பொருளாக வைத்திருந்தது. அந்த தெருவில்தான் முஸ்லிம்களுடைய முக்கியமான பள்ளிவாசல் இருக்கிறது. முஸ்லிம்கள் அதிகம் பயன்படுத்தும் தெருவும் அதுதான். அங்கு தான் கூட்டம் கூடி ஊர் சம்மந்தமாக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். ஊரிலேயே முக்கியத்துவம் வாய்ந்த தெருவாக அந்த பள்ளிவாசல் தெரு இருக்கிறது.

இதனால் முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். ஊர் தலைவர்களான ஜமாத்தார்கள் எஸ்.பி இடம் மனு கொடுத்து தங்கள் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை நாங்கள் விரும்பவில்லை என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஜமாத்தார்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கேமரா அமைக்கப்படாது என்றே பலரும் எண்ணினர். " பரவாயில்ல ஜமாஅத் துரிதமாக செயல்பட்டிருக்கிறது" பலர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  ஆனால் அவர்களின் குரல் மதிக்கப்படவில்லை என்பதை பின்வரும் நாட்கள் தெளிவுபடுத்தின. ஜமாத்தார்களும், ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரிந்தும் கேமரா அமைப்பதில் காவல்துறை மும்முரமாக இருந்தது. இதுவே பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பகுதி மக்கள் விரும்பாமலும் ஏன் வலுக்கட்டாயமாக கேமரா வைக்க வேகம் காட்டுகிறார்கள் சந்தேகம் கிளம்பிற்று.

பள்ளிவாசல் தெருவில் கேமரா பொறுத்த உறுதியுடன் செயல்பட்டனர் காவல்துறையினர். அதற்கு காரணம் மேலிடத்து உத்தரவாக இருந்திருக்க வேண்டும் அல்லது இங்குள்ள அதிகாரிகளின் தூண்டுதலாக இருந்திருக்க வேண்டும். லோக்கல் அதிகாரிகளுக்கு முஸ்லிம்கள்மீது சில விஷயங்களில் முன்பே வருத்தங்கள் இருந்துவந்தன. அதனால்கூட அந்த இடத்தில கேமரா பொருத்த அவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டிருக்கலாம். கேமரா பொருத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது. நீளமான கம்பம் நடப்பட்டது. கேமரா விற்கு ,இணைப்பு கொடுக்க ஒயர் இழுக்கப்பட்டன. எல்லா வேலையும் முடிந்துவிட்டது. கேமரா பொருத்துவது மட்டும்தான் பாக்கி. அப்போதே காவல்துறையிடம் சில இளைஞர்கள்மல்லுக்கட்டினர். ஒவ்வொரு வேலையாக முடியும்போதும் அப்பகுதியினர் அச்சத்துடனே கவனித்து வந்தனர். தாங்கள் விளையாடுவதையும், அரட்டையடிப்பதையும் கூட கண்காணிப்பார்களோ என்ற அய்யம் பலருக்கு ஏற்பட்டது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பல இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்கும் போக்கு இருந்து வருகிறது. அதைபோல நம்ம ஊர்லயும் செய்ய போகிறார்கள் கவலையோடு சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அடிக்கடி பிரச்னை ஏற்படும் நம்ம ஊரில் அதுவும் ஊர்வலம் போகும் தெருவுல கேமரா மூலம் கண்காணித்தால் நல்லது தானே பிரச்சனைகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்ல என்றும் ஏன் அதான் ஊர்வலம் போகும்போது கேமரா புடிக்கிறாங்கல்ல அப்புறமென்ன நிரந்தரமா வேற வைக்கணுமா ஒவ்வொருவரும் பலவாறு பேசிக்கொண்டார்கள்.

கேமரா பொறுத்த காவல்துறை சற்று தயங்குவதுபோல் தெரிந்தது. ஊரின் பல இடங்களிலும் உடனே பொருத்தப்பட்ட கேமரா இங்கு பொருத்த சில நாட்கள் பிடித்தன. இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத போது கேமரா அமைத்துவிடலாம் என்று அவர்கள் எண்ணினார்கள். அதற்காக நன்னிரவிலும் விழித்திருந்து காத்திருந்தனர். கடைவீதியை சுற்றியே வந்தனர். இந்த செய்தி காற்றில் கசிந்து சென்றதால் அப்பகுதி இளைஞர்கள் இரவு நேரங்களில் உறங்காமல் விழித்துக்கொண்டு இருந்தனர். காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவை பொருத்தினால் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்பதால். அதற்கான பலனும் இருந்தது.

ஆட்களின் நடமாட்டம் இருந்ததால் காவல்துறையும் பின்வாங்கியது. கேமரா பொருத்தும் நபர் ஏமாற்றத்துடன் ஊரில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றுவிட்டார். இடைப்பட்ட நேரங்களில் அப்பகுதி இளைஞர்கள் வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கேமரா பொருத்த காவல்துறையினர் வந்தால் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டினர். நாளை கேமரா அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை செய்தனர். வீடு வீடாக சென்று பெண்களிடமும் எடுத்துக்கூறினர். அவர்களும் கேமரா பொறுத்த எதிர்க்க துணிந்தனர். கேமரா பொருத்தினால் பாதிக்கப்பட போவதும் அவர்கள்தான். 

விடிந்தது. சூரியன் தனது வெப்பத்தை கக்கிக்கொண்டு இருந்தது. வியாபார நேரம். பலரும் தங்களது கடைகளில் பிசியாக இருந்தனர். அந்த நேரத்தை தேர்ந்தெடுத்து காவல்துறையினர் ஒரு படையுடன் பள்ளிவாசல் தெருவிற்கு நுழைந்தது. அவர்களும்  எவ்வளவு நாள்தான் காத்திருப்பார்கள். மேலதிகாரிகளின் பிரசர் வேறு. கேமரா பொருத்துவதற்கான பணிகளில் ஈடுபடலாயினர். திடீரென்று எப்படி இத்தனை பேர் கூடினார்கள். காவல்துறைக்கே வியப்பாகத்தான்  இருந்திருக்கும். இளைஞர்களும், பெரியோர்களும், பெண்களும் திரண்டிருந்தனர். எங்கள் தெருவில் கேமரா பொருத்த அனுமதிக்க மாட்டோம் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் பெண்கள் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். பெண்கள் தங்களது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும் என அஞ்சினர். தண்ணீர் பிடிக்க, காய்கறி வாங்க, பால் வாங்க இன்னும் பிற வேலைகளுக்கு வீட்டைவிட்டு தெருவிற்கு வர வேண்டி இருப்பதால் கேமரா அமைக்கப்பட்டால் தங்களை வேறு ஒரு நபர் பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் அதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் எஸ்.ஐ. மேலதிகாரியான இன்ஸ்பெக்டர் இடம் தகவலை போனில் கூறினார். நாங்கள் கேமரா அமைக்க முயன்றபோது இந்த மக்கள் எதிர்க்கிறார்கள். நீங்கள் உடனே வாங்க மேடம். சிறிது நேரத்திற்குள்ளாகவே போலீஸ் வாகனம் ஒன்று வந்து நின்றது.அதிலிருந்து  இன்ஸ்பெக்டர் இறங்கினார்.  பிரச்சனை, நிலவரம் பற்றி அருகிலிருந்த லோக்கல் எஸ்.ஐ. இடம் கேட்டுக்கொண்டார். இளைஞர்களை அழைத்தார். அனைவரும் இன்ஸ்பெக்டரை சுற்றி சூழ்ந்துகொண்டனர். 

"என்னப்பா ஏன் கேமரா வைக்கிறத எதிர்க்குறீங்க"
"கேமரா வைக்கிறத நாங்க எதிர்க்கிற மேடம். கடைவீதில கூட நாலஞ்சு கேமரா வச்சிருக்காங்க. அத நாங்க எதிர்க்களையே. எங்க தெருவுல வைக்கிறத தான் எதிர்க்கிறோம். அதுவும் பள்ளிவாசல் தெருவ மட்டும் ஏன் தேர்ந்தெடுத்து வைக்கிறீங்க"
"கேமரா வைக்கிறது உங்க பாதுகாப்புக்கு தாம்பா. திருட்டு பிரச்னை இனி இருக்காதுல்ல" 
"மேடம் என்னிக்கு இங்கு திருட்டு நடந்துச்சு. அப்படியே பார்த்தாலும் ஏன் மத்த தெருவுல திருட்டு நடக்காதா. அங்கெல்லா ஏன் நீங்க வைக்கல"
"என்னப்பா எப்படி பேசுறீங்க. நீங்க ஏன் கேமரா வைக்க பயப்படுறீங்க"
"பயப்படல மேடம், பல சமூக மக்கள் வாழுற இந்த ஊர்ல முஸ்லிம்கள் வசிக்கிற குறிப்பிட்ட இந்த தெருவுல மட்டும் கேமரா வைக்கிறத நாங்க விரும்பல மேடம்"
"சரி அப்ப திருட்டு நடந்தா போலீஸ் கிட்ட வரமாட்டியா" பக்கத்தில் நின்றிருந்த சிஐடி கோபத்துடன் கத்தினார். 
"எல்லா ஊர்லேயும் கேமரா வைக்கிறாங்கப்பா, நீங்க மட்டும்தான் இப்படி ஆப்போசிட்டா பேசுறீங்க" 
"சரிங்க மேடம் போலீஸ் ஸ்டேசன்ல கேமரா வைக்க சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிச்சி. அங்கெல்லாம் வச்சிட்டீங்களா மேடம்"
"அதுபா இன்னும் ஃபண்ட் வரலப்பா. வந்துச்சுனா கண்டிப்பா வச்சுடுவோம்" 
"உங்க ஸ்டேசன்லேயே இன்னும் வைக்கல எங்க தெருவுல ஏங்க மேடம் வைக்கணும்னு கட்டாயப்படுத்துறீங்க"
உச்சி வெய்யில் தலைக்கேறியது. அங்கு குழுமிருந்த பெண்களும், பெரியோர்களும் கடும் சிரத்தை அனுபவித்தனர்.
"இன்னும் ஏம்பா பேசிட்டுருக்கீங்க கேமரா வைக்க கூடாதுன்னு சொல்லிப்புட்டு வாங்கப்பா" சில பெரியோர்கள் செல்ல சண்டை போட்டனர். இளைஞர்களும் திரும்பி வந்தனர். நிழல் இருக்கும் பகுதிகளில் அனைவரும் தஞ்சம் புகுந்தனர்.

இதற்குமேல் இன்ஸ்பெக்டரும் எதுவும் பேசவில்லை. போனில் மேலதிகாரியிடம் நிலவரத்தை எடுத்துரைத்தார். எஸ்.ஐ. அழைத்து பேசினார்.  எஸ்.ஐ. அந்த இளைஞர்களிடம் வந்து "சரி நாங்க கேமரா வைக்கல. நீங்க அஞ்சு பேரு ஸ்டேசனுக்கு வந்து எழுதிக்கொடுத்திட்டு போங்க" என்றார். 
இதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
"அஞ்சு பேர்லாம் வரமுடியாது. நாங்க எல்லோரும்தான் எதிர்க்கிறோம். நாங்க எல்லோரும்தான் வந்து எழுதிக்கொடுப்போம்" என்றார்கள். 

காவல்துறையினர் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டனர். சி.ஐ.டி வந்து இளைஞர்களிடம் பேசினார். "சரிங்க நாங்க கேமரா வைக்கல. நீங்க ஸ்டேசன் வந்து மனு எழுதிக்கொடுத்திட்டு போங்க" என்றார். காவல்துறையினர் முகத்தில் கடுமை கூடி இருந்தது. இதை அவர்கள் தோல்வியாக நினைத்திருக்க வேண்டும். காவல்துறையினர் திரும்பி சென்றனர். போலீஸ்காரங்க பேச்ச நம்ப முடியுமா சிலருக்கு சந்தேகமாக இருந்தது. "அதெல்லாம் ஒன்னும் இல்ல அவங்க சொன்னாப்ல மனு கொடுப்போம்" என்றார்கள் இளைஞர்கள். 
"இவ்ளோ பிரச்சனை நடக்குது ஜமாத்காரங்க ஏன் எட்டிக்கூட பாக்கல" விரக்தி குரலும் எதிரொலித்தது.

எல்லோரும் ஆலோசித்தனர். மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பேப்பர் வாங்கி வந்து மனு எழுதப்பட்டது. அங்கு குழுமி இருந்த அனைவரும் கையழுத்திட்டனர். வெப்பத்தை தாங்க இயலாத சிலர் வீட்டிற்கு நடையை கட்டினர். ஸ்டேசன் செல்வதற்கு வாகனம் ஏற்பாடானது. வாகனம்  போதவில்லை.மேலும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அனைவரும் திரண்டு சென்றார்கள். கேமரா வைக்கும் முடிவை காவல்துறை திரும்ப பெற்றது. கேமரா இல்லாமல் கம்பம் மட்டும் தனிமையில் எல்லோரையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறது.

- மு.உமர் முக்தார்
கண்காணிக்கும் கேமரா (சிறுகதை) - மு.உமர் முக்தார் கண்காணிக்கும் கேமரா (சிறுகதை) - மு.உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 00:28:00 Rating: 5

No comments:

Powered by Blogger.