ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்?
உத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவை தொகுத்களுக்கான இடைத்தேர்தல் வாக்குப் பதிவு 40 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தபோதே, முடிவுகள் எப்படி வரும் என்பதை யூகிக்க முடிந்தது. இடைத்தேர்தல் வரலாறுகளை (சமீபத்திய) எடுத்துக்கொண்டால், குறைந்தபட்சம் 65 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகும். ஆளும் அரசுகள் தங்களுடைய கவுரப்பிரச்னையாக ஒவ்வொரு இடைத்தேர்தலையும் கருதி, கீழே இறங்கி பணியாற்றும். பணவிநியோகம், அதிகாரத்தை பயன்படுத்துதல் போன்றவை சர்வசாதாரணமாக இருக்கும். ஆளும் கட்சியின் அத்தனை தலைவர்களும் தொகுதியில் முகாமிடுவார்கள். உ.பி. இடைத்தேர்தல், ஆளும் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு மிக மிக முக்கியமானது. ஆதித்யநாத் தொடர்ந்து ஐந்து முறை வெற்றி கண்ட தொகுதி அது. 1989 முதல் பாஜகவின் கீழ் உள்ள தொகுதி. கடந்த தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ஆதித்யநாத் வென்றார்.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 73 தொகுதிகளில் பாஜக வெற்றி கண்டது. மோடி தலைமையிலான பாஜக அரசு அமைய, உ.பி. யின் வெற்றி மிக முக்கியமானது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதைக் கோடிட்டு காட்டுவதாக உ.பி. முடிவுகள் அமையும். அந்த வகையிலும் மாநில முதலமைச்சர் எம்.பி. ஆக இருக்கும் ஆதித்யநாத்தின் தொகுதி, துணை முதல்வரின் தொகுதி என்ற முறையிலும் கோரக்பூர் தொகுதியிலும் புல்பூர் தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலை நாடே உற்று நோக்கியது. பாஜகவும் முக்கியத்தை உணர்ந்தேதான் களம் கண்டது.
ஆனால், ஏன் பாஜக தோற்றது? உ.பியைப் பொறுத்தவரை பாஜக=ஆதித்யநாத், அந்த வகையில் ஆதித்யநாத் ஏன் தோற்றார்? எதிர் எதிராக நின்ற அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்கட்சியும் கைக்கோர்த்ததே அதித்யநாத்தின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியே இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றது. பகுஜன் சமாஜ்கட்சி போட்டியிடவில்லை. ஆனால், முழு ஆதரவு தந்தது. இந்திய அளவிலும்கூட இந்தக் கூட்டணி பலரை புருவம் உயர்த்தச் செய்தது. ஐந்தரை லட்சம் தலித் வாக்குகள், ஒன்றரை லட்சம் மீனவ சமூகத்தின் வாக்குகள், இஸ்லாமிய சமூக வாக்குகள் என வாக்கு பிரிந்து போகாமல், சமாஜ்வாதி கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு தொகுதிகளிலும் பாஜக தோற்றிருக்கிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது, மூன்றாமிடத்தை பிடித்திருக்கிறது. அந்த வாக்குகளும் பிரிந்து போகாமல் இருந்திருக்குமானால் வாக்குவித்தியாசம் அதிகமாக இருந்திருக்கும். காங்கிரஸ் தன்னுடைய பலத்தை உணர்ந்து பலம் வாய்ந்த மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமானால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், தங்களுடைய கோட்டையிலேயே தோல்வி என்பதை பாஜக மிக கூர்ந்து கவனிக்கும். தேர்தல் திட்டமிடலை கவனத்துடன் செய்யும்.
ஆதித்யா நாத்தின் தோல்விக்கு என்ன காரணம்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:57:00
Rating:
No comments: