ஆள்கடத்தல் வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு!
தனக்கு எதிரான ஆள்கடத்தல் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி தடா ரஹீம் தாக்கல் செய்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்க காவல் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், தென்காசியில் 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் தன்னை கடத்தி, பணம் கேட்டுத் துன்புறுத்தியதாகத் திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த சையது முகமது புகாரி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் தடா ரஹீமைத் திருவல்லிக்கேணி காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் தடா ரஹீமை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. குண்டு வெடிப்பு வழக்கில் 1998 முதல் 2010 வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 2007இல் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாகப் பதிவு செய்யப்பட்ட இந்தப் பொய் வழக்கைத் திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் விசாரித்தால் நியாயமாக இருக்காது. அதனால், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி தடா ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நேற்று (மார்ச் 20) விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.
ஆள்கடத்தல் வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:56:00
Rating:
No comments: