மாநில காங்கிரஸில் இளம் தலைவர்கள்?
கடந்த வாரம் டெல்லியில் நடந்த தேசிய மாநாட்டில், தலைமைப்பொறுப்பை ஏற்க இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று கூறினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. இதனை ஏற்று கோவா, உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
டெல்லியிலுள்ள இந்திரா காந்தி மைதானத்தில், கடந்த 17, 18ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் முன்னாள் கட்சித்தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள், தற்போதைய நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சித்தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் மேடையின் எதிரே உட்கார வைக்கப்பட்டனர்.
மாநாடு நடக்கும்போது, ஒவ்வொரு இடைவேளையின்போதும் ஒவ்வொரு பிரிவாக தலைவர்கள் மேடை ஏறுவது வழக்கம். இது, காங்கிரஸ் மாநாட்டில் பின்பற்றப்படவில்லை. மாறாக, மேடையில் ஒருவர் நின்று பேசுவதற்கு மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
தேசிய மாநாடு நிறைவடையும்போது பேசிய ராகுல், இளம் தலைவர்களுக்குக் கட்சியில் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனைப் பயன்படுத்தி அவர்கள் கட்சியை வழிநடத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். ராகுல் சொன்ன அடுத்த நாளே, தனது பதவியை ராஜினாமா செய்தார் கோவா மாநில காங்கிரஸ் தலைவர் சாந்தாராம் நாயக். இது தொடர்பாக, நேற்று (மார்ச் 20) அவர் கட்சித்தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
”இளம் தலைவர்களுக்கு வழிவிடுவதற்காகவே, நான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். தேசிய மாநாட்டில், ராகுலின் பேச்சு என்னைக் கவர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இளைஞர்கள் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த மேடை காலியாக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிவித்தார் ராகுல். சோனியா போன்றவர்களே, கீழே வரிசையில் அமர்ந்து அதனை ரசித்தனர்” என்று தெரிவித்துள்ளார் சாந்தாராம்.
புதிய தலைவர்கள் குறைந்தது பத்து ஆண்டுகள் பதவியில் இருந்து கட்சியை வலுப்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் கூறினார்.
சாந்தாராம் நாயக்கைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பரும் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், இவரது ராஜினாமாவை காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொண்டது பற்றி இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இளம் தலைவர்களை உருவாக்க வேண்டுமென்ற ராகுலின் பேச்சை அடுத்து, ராஜ் பாப்பர் பதவி விலகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்வியினால் ராஜ் பாப்பர் இந்த முடிவுக்கு வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும், மொத்தம் பதிவான வாக்குகளில் 2 சதவீதத்தை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ராஜ் பாப்பருக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொறுப்பை ஏற்பவர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பார் என்றும், உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் பாஜக ஆட்சிக்கு எதிராக அரசியல் செய்யும் நோக்கில் இந்த தேர்வு அமையும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்துப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், மூத்த மற்றும் இளம் தலைவர்களிடமுள்ள நல்லம்சங்களின் துணையோடு கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டுமென்றே ராகுல் கூறியதாகத் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு வெளியாகும்வரை, முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வரவேண்டாமென்றும் கூறியுள்ளார்.
தென்னிந்தியாவில், கர்நாடகா தவிர மற்ற மாநிலங்களில் புதிய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மாநாட்டின் முதல் நாளன்று தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் விருந்து அளித்தார்.
இரண்டு மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்த விவகாரத்தினால், அவர் அளித்த விருந்து குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகிறது.
மாநில காங்கிரஸில் இளம் தலைவர்கள்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:51:00
Rating:
No comments: