பெண் குழந்தைகளுக்குக் கல்வி இலவசம்!
கர்நாடகத்தில் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசு சார்பில் ‘தொலைநோக்கு பார்வை-2025’ என்ற புத்தக வெளியீட்டு விழா பெங்களூருவில் நேற்று (மார்ச் 3) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் சித்தராமையா சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “எதிர்கால திட்டங்களை வகுக்காமல் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்ல முடியாது. அதற்காகவே ‘தொலைநோக்கு பார்வை 2025’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, விரைவான வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி என்ற நோக்கத்தில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, மக்களுக்கு அளித்த 165 வாக்குறுதிகளில் 155 நிறைவேற்றப்பட்டுள்ளன.
உலகிலேயே ஒரே இடத்தில் 2 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் கர்நாடகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் ஏக்கரில் ரூ.12 ஆயிரம் கோடி செலவில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூருவில் மூன்றாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 260 கிலோமீட்டர் நீளத்துக்குப் பாதை அமைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும்.
கர்நாடகத்தில் அடிக்கடி வறட்சி ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கர்நாடகத்தில் 36 ஆயிரம் ஏரிகளில் நீர் நிரப்ப ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 லட்சம் இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 13 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்கள் சொந்த தொழில் செய்ய வங்கிகளில் ரூ.190 கோடி வரை மானிய வட்டியில் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் இந்தக் கடனுக்கு உத்தரவாதமும் மாநில அரசு அளிக்கிறது.
அன்ன பாக்கிய திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 4 கோடி பேர் பயன்பெறுகின்றனர். ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் பொது சுகாதார காப்பீட்டு திட்டம் மூலம், 1.43 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும். தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் இனி ஒரு பைசாகூடக் கல்வி கட்டணம் செலுத்த தேவை இல்லை.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் தொலைநோக்கு பார்வை குறித்து பள்ளி கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா பரிசு வழங்கிப் பாராட்டினார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ஜெயச்சந்திரா, கிருஷ்ண பைரே கவுடா, பிரியங்க் கார்கே, தன்வீர்சேட், வினய்குமார், தலைமை செயலாளர் ரத்ன பிரபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தைகளுக்குக் கல்வி இலவசம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:56:00
Rating:
No comments: