வெள்ளம்புத்தூர் தாக்குதல்: சிபிஐ விசாரணை வேண்டும்!
விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கொல்லப்பட்ட தலித் சிறுவன் சமையன் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த திருமாவளவன் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆராயி என்ற பெண்ணின் குடும்பத்தினர் மீது கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஆராயியின் 8 வயது மகன் சமையன் மரணமடைந்தார். ஆராயி மற்றும் அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கொடூர தாக்கல் சம்பவத்துக்கு அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று(மார்ச் 3) ஜிப்மர் மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் ஆராயி மற்றும் தனத்தை சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
முன்னதாக, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக்கோரிப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வெள்ளம்புத்தூர் சென்ற திருமாவளவன் சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். சிறுவனின் இல்லத்துக்குச் சென்ற அவர் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதையடுத்து, காவல்துறையினருடன் திருமாவளவன் ஆலோசனையும் நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த சம்பவம் மிகுந்து வேதனை அளிக்கிறது. அதே கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேப்போன்று தாக்குதல் நடந்துள்ளது. அதில், வெவ்வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஒரே கும்பல் தாக்குதல் நடத்துகிறதா, அல்லது வெவ்வேறு கும்பல்கள் தாக்குதல் நடத்துகின்றனவா என்பது குறித்து விரிவான, ஆழமான விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆராயி மற்றும் தனம் விரைவில் குணம் பெறுவார்கள் என நம்புகிறேன்.
தலித்துகள் பாதிக்கப்படுகின்ற பல சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க இயலாத நிலை இருப்பது வேதனை அளிக்கிறது. இதில், தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் ” என்று வலியுறுத்தினார்.
வெள்ளம்புத்தூர் தாக்குதல்: சிபிஐ விசாரணை வேண்டும்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:59:00
Rating:
No comments: