எந்தத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்!
நீட் தேர்வு உள்பட தேசிய அளவிலான எந்தத் தேர்வுக்கும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 7) உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் உள்ள தகவல்களின் அடிப்படையில், சுய விவரத்தைப் பதிவுசெய்ய வேண்டும். ஆதார் தகவல்களும், பள்ளி விவரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். அதன் பின், பள்ளியில் உள்ள விவரங்களை ஆதார் எண் அடிப்படையில் மாற்றிக்கொள்ள வேண்டும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து குஜராத்தைச் சேர்ந்த அபித் அலி படேல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ‘2018ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை. இந்த விதியை அமல்படுத்துமாறு நாங்கள் சிபிஎஸ்இக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. தேர்வாளர்கள் மற்ற அடையாள அட்டையை சமர்ப்பிக்கலாம்’ எனக் கூறினார்.
நீட் தேர்வு உள்பட தேசிய அளவிலான எந்தத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை என்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், நீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை என்பதை சிபிஎஸ்இ தனது வலைதளத்தில் பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ஆம் தேதி நடைபெறும். நீட் தேர்வுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மார்ச் 9 ஆகும்.
எந்தத் தேர்வுக்கும் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:03:00
Rating:
No comments: