பெரியார் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு விரோதம்?
வினிதா கோவிந்தராஜன்
தமிழ்நாட்டில் உள்ள சமூகச் சீர்திருத்தவாதியான பெரியாரின் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று அச்சுறுத்தல் திராவிட சித்தாந்தத்தை ஆதரிக்கும் பல்வேறு அரசியல் கட்சியினரிடையே ஆவேசத்தைக் கிளப்பியுள்ளது.
திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு ரஷ்ய கம்யூனிஸத் தலைவர் லெனினின் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு ஒருநாள்கூட நிறைவடையாத நிலையில், வேலூர் அருகில் உள்ள திருப்பத்தூரில் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் சிலையை அவமதித்த குற்றத்துக்காக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இவர்கள் இருவரும் சிலை மீது கல்லெறிந்தனர் எனக் குற்றம்சாட்டப்பட்டனர்.
அன்று கட்சியின் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, திரிபுராவில் லெனின் சிலை தரைமட்டமாக்கப்பட்ட பிறகு அடுத்த இலக்கு, தமிழ்நாட்டில் முதல் திராவிடக்கழகத்தைத் தொடங்கிய பெரியாரின் சிலைகளை நோக்கி இருக்கும் என்று கூறியதிலிருந்து பாரதிய ஜனதா கட்சி மற்றுமொரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டது.
இதைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகம், ராஜா மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகத் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்களை அறிவித்தது என தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குண்டர் சட்டத்தின் கீழ் ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்று கோரினார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ, “பெரியாரின் சிலையை யார் தொட்டாலும் அவர்கள் கை வெட்டப்படும்” என்று எச்சரித்தார்.
ராஜா தன் ஃபேஸ்புக் போஸ்ட்டை நீக்கிவிட்டார். ராஜா தன் சொந்தக் கருத்தை வெளியிட்டார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறிப்பிட்டார்.
ஆனால், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயண் திரிபாதி, இந்துத்துவ அமைப்புகள் பெரியார் சிலைகள் நீக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிவருகின்றன என்று நியூஸ் 18 சேனல் ஊடகத்திடம் கூறினார்.
ஈ.வே.ரா. யார்?
ஆவணப்படுத்தப்பட்ட பெரியாரின் புகைப்படங்கள், வெண் தாடிப் பறக்க வட்டமான ரிம் வைத்த கண்ணாடி, நேசமான புன்னகையுடன் இருக்கும் ஒரு முதியவரைச் சித்திரிக்கின்றன. எளிமையாகத் தோற்றமளிக்கும் இந்த மனிதரின் தீவிரமான தத்துவங்கள்தான் தமிழ்நாட்டு அரசியலில் பகுத்தறிவுவாதம் மற்றும் சமூகச் சமத்துவத்துக்கான கொள்கைகளுக்கு அடித்தளமிட்டன. இதுதான் பல்வேறு திராவிடக் கட்சிகள் பாரதிய ஜனதா கட்சித் தலைவரின் அறிக்கைக்கு எதிராகப் போராட்டங்களையும் தூண்டிவிட்டுள்ளன.
1879இல் பிறந்த ஈ.வே.ரா, தான் பிறந்த ஈரோடு நகராட்சியில் தான் வகித்துவந்த பல்வேறு பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அக்கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்க முன்வரவில்லை என்று கருதி அவர் ஒரு சில ஆண்டுகளில் கட்சியை விட்டு விலகினார்.
சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருந்த சமூகக் கட்டமைப்பை ஒழித்துக்கட்டி, சமூக மற்றும் பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவந்த சுய மரியாதை இயக்கத்தில் அவர் சேர்ந்தார். பின்னர் ஆற்றல் வாய்ந்த மேல் சாதியினர் செல்வாக்கு செலுத்திவந்த அரசியல் மற்றும் சமூகச் சூழலில் பிராமணரல்லாத சாதிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக 1916இல் தொடங்கப்பட்ட நீதிக் கட்சிக்குத் தலைமையேற்று நடத்தினார். அவர் அக்கட்சியைத் தேர்தல் அரசியலிலிருந்து விலக்கிச் சமூகச் சீர்திருத்த அமைப்பாக மாற்றியமைத்தார். நீதிக் கட்சியை திராவிடர் கழகமாக மாற்றினார். அக்கட்சி பகுத்தறிவு, பெண்கள் உரிமை, சாதி ஒழிப்புக் கோட்பாடுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
இன்று மாநிலத்தின் மிகவும் செல்வாக்குப் படைத்த அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இரண்டு அரசியல் கட்சிகள், பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் எனப் பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தாய் அமைப்பாகவும் திராவிடர் கழகம் திகழ்கிறது.
சித்தாந்த வேறுபாடுகள்
பெரியார் தீவிரமான நாத்திகவாதி. மதத்தையும் மத நம்பிக்கைகளையும் ஒழித்துக்கட்டுவதுதான் அவரது பிரதான குறிக்கோள்களில் ஒன்று, ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கண்டுபிடித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்புகிறவன் மோசடிப் பேர்வழி, கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி’ என ஒரு சமயம் அவர் குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதா கட்சியினருக்கும் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்கும் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதற்கு இது ஒரு முக்கியக் காரணம் என எழுத்தாளரும் மனித உரிமை ஆர்வலருமான அ.மார்க்ஸ் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியினரும் பெரியாரைப் பின்பற்றுபவர்களும் இயற்கையாகவே விரோதிகள் என அவர் குறிப்பிட்டார்.
இந்துத்துவச் சார்பு கட்சியான பாரதிய ஜனதா, இந்துத்துவத்தை முன்னிறுத்தும் நிலையில் பெரியாரைப் பின்பற்றுபவர்கள் மதச்சார்பற்ற அரசுக்காகக் குரல் கொடுக்கின்றனர். இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை திராவிடர் கழகம் கண்டித்துள்ளது. சாதி அடுக்கு முறையைப் பாதுகாப்பதன் மூலம் தீண்டாமையை ஆதரிப்பதாகக் கூறி, இந்திய அரசியல் அமைப்பு நகலை 1957இல் எரித்ததற்காகப் பெரியாரும் திராவிடக் கழகத் தொண்டர்கள் 3,000 பேரும் கைது செய்யப்பட்டனர். “சாதி, மதம் ஆகியன அரசியல் அமைப்புச் சட்டத்தில் நீக்கப்படவில்லை என்பதால் அவர் அதிருப்தி அடைந்திருந்தார். மத உணர்வுகளை வெளிப்படுத்தச் சிலரை அனுமதித்தால் சிலர் சாதி அடிப்படையில் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவார்கள் எனப் பெரியார் கருதினார்” என்று அ.மார்க்ஸ் கூறினார்.
இந்துத்துவ சக்திகள் முழக்கமிடும் தேசியவாதத்துக்கு எதிரான, சாதி சமய வேறுபாடற்ற திராவிட நாடு என்ற தனிநாடு அமைக்கும் சிந்தனையை பெரியார் ஆதரித்தார். “தேசப்பற்று இல்லாததாலோ, போராட்ட மோகத்தாலோ தனிநாடு (திராவிடஸ்தான்) கோரவில்லை. எங்கள் சுயபாதுகாப்புக்காகவும் சுயமரியாதைக்காகவும்தான் கோருகிறோம்” என அவர் கூறினார்.
தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத சித்தாந்தங்களையும் ஆட்சியாளர்களையும் கொண்டுள்ள இந்திய அரசையும் தேசத்தையும் பெரியார் நிராகரித்தார். தேசியவாதம் என்பதை அரசியல் சார்ந்த பார்ப்பனியம் என்பதுடன்தான் அவர் எப்போதுமே அடையாளப்படுத்திப் பார்த்துவந்தார். தேசியவாதத்தை அவர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆனால், இந்த அளவுக்குச் சித்தாந்த வேறுபாடுகள் இருந்தாலும், பாரதிய ஜனதாவின் மற்ற தலைவர்கள் இப்படிப்பட்ட சர்ச்சைகளைக் கிளப்பிவிட எப்போதும் முயற்சி செய்ததில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த எழுத்தாளர் ரவிக்குமார் கூறினார். பாஜகவில் உள்ள பலர் தங்கள் திராவிட அடையாளத்தைத் தழுவிக்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். “ஆனால், ஹெச்.ராஜா, விஜய் போன்ற நடிகர்கள் முதல் வைரமுத்து போன்ற கவிஞர்கள் வரை அனைவரையும் சீண்டியிருக்கிறார். வன்முறையைத் தூண்டுவதன் மூலம் தனக்கென அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ள முயற்சி செய்கிறார்” என்று ரவிகுமார் மேலும் கூறினார். “தமிழ்நாட்டில் உள்ள எந்தத் தலைவரும் இவரைப் போல வெறுப்பையும் வன்முறையையும் தூண்டும்வகையில் பேசவில்லை. இது தமிழக அரசியலில் மிகவும் அசாதாரணமானது” என்றும் ரவிக்குமார் கூறினார்.
நன்றி: https://scroll.in/article/871063/what-explains-the-bjps-animosity-towards-periyar-and-his-statues
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்
பெரியார் மீது பாஜகவுக்கு ஏன் இவ்வளவு விரோதம்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:39:00
Rating:
No comments: