தமிழகத்திலும் ரெட் அலர்ட்

தமிழகத்திலும் ரெட் அலர்ட்

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதியன்று மிகப் பெருமழை இருக்கும் என ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கையை இன்று (அக்டோபர் 4) விடுத்துள்ளது இந்திய வானிலை மையம் .
தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு பெருமழை மற்றும் அதிகப் பெருமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிகப் பெருமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் வரும் 7ஆம் தேதி முதல் மிகப் பெருமழை முதல் மிக மிகப் பெருமழை இருக்கும். வரும் 5ஆம் தேதியன்று தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும். அது வலுவடைந்து, தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் புயலாக மாறும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, கேரளாவில் 3 மாவட்டங்களில் தற்போது ரெட் அலர்ட் அறிவித்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அக்டோபர் 7ஆம் தேதியன்று 25 செ.மீட்டருக்கும் மேல் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியாளர்களுக்குப் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பெருமழை காரணமாக ஏற்படும் பேரிடர்களைச் சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் காலங்களைக் கையாள தமிழகத்தில் சுமார் 1,275 இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு அக்டோபர் 7ஆம் தேதியன்று ரெட் அலர்ட் விடுத்திருப்பதாக, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குனர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.
வானிலை மைய இயக்குநர் பேட்டி
இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. அரபிக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக மாறவுள்ளது. அரபிக்கடலில் உருவாகும் புயலானது ஓமன் வளைகுடா நோக்கி நகரும்.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை பரவலாக மழைபெய்யும். அக்டோபர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை ஆழ்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் அதிக அளவாக 12 செ.மீ. மழை பெய்துள்ளது. இன்னும் வடகிழக்குப் பருவமழை தொடங்கவில்லை” என்று தெரிவித்தார்.
தமிழகத்திலும் ரெட் அலர்ட் தமிழகத்திலும் ரெட் அலர்ட் Reviewed by நமதூர் செய்திகள் on 04:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.