பிரதமர் ஊழல்வாதி: ராகுல்
ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது தெளிவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, பிரதமர் மோடியை ஊழல்வாதி என்றும் விமர்சித்துள்ளார்.
டெல்லியில் இன்று (அக்டோபர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தைக் கூட்டாளியாகத் தேர்ந்தெடுத்தோம் என்று டசால்ட் நிறுவனத்தின் துணை சிஇஓ கூறியதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அனில் அம்பானி எந்த விமானத்தையும் உருவாக்கியதில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை உருவாக்கினார். அனில் அம்பானியின் பாக்கெட்டில் ரூ. 30 ஆயிரம் கோடியைப் பிரதமர் மோடி கொடுத்துள்ளார். அவர் இந்தியாவின் பிரதமர் கிடையாது அம்பானியின் பிரதமர். பிரதமர் ஊழல்வாதி” என்று விமர்சித்துள்ளார்.
பிரான்ஸ் ஊடகத்தின் செய்திக்கு டசால்ட் மறுப்பு தெரிவித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட ராகுல், டசால்ட் நிறுவனம் அழுத்தத்தில் உள்ளதாகவும் இந்திய அரசாங்கம் விரும்புவதை அந்நிறுவனம் கூறுவதாகவும் தெரிவித்தார்.
நிர்மலா திடீர் பயணம் ஏன்?
மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவசர அவசரமாக பிரான்ஸ் சென்றிருப்பது ஏன் என்றும் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென பிரான்ஸுக்குச் சென்றுள்ளார். டசால்ட் நிறுவனத்தைப் பார்ப்பதற்கு. இதற்கான அவசரம் என்னவென்று வியப்பு ஏற்படுகிறது. டசால்ட் நிறுவனத்திற்கு மிகப் பெரிய ஒப்பந்தம் கிடைத்துள்ளது. எனவே, இந்திய அரசு விரும்புவதைத்தான் அந்நிறுவனமும் கூறும். ஆனால், டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களைப் பார்க்கும்போது, எந்த நடந்தது என்பது தெளிவாகிறது” என்று கூறியுள்ளார்.
இதேபோல், “ரஃபேல் ஒப்பந்தத்தை மூடி மறைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. ஒப்பந்தம் சட்டபூர்வமானது என்பதைப் போன்று காட்டிக்கொள்ள பிரான்ஸ் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இடையே நடைபெற்றது போன்ற கற்பனையான சந்திப்பை பாதுகாப்பு அமைச்சர் உருவாக்க வேண்டும். மேலும், இரு தரப்பும் பொதுவான கதையை உருவாக்கி ஊடகங்களிடம் சொல்ல வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் பதிவிட்டுள்ளார்.
ரஃபேல் சர்ச்சை
ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டிவருகிறது. பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, “ரஃபேல் ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை இந்திய அரசு, அனில் அம்பானியின் நிறுவனத்துடன் மட்டும்தான் கூட்டு சேர்ந்து பணிகள் செய்யச் சொன்னது. எங்களுக்கு வேறு எந்த நிறுவனம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை” என்று அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த பேட்டி காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்த்தது.
இந்நிலையில்தான், பிரான்ஸின் மீடியா பார்ட் ஊடகம், டசால்ட் நிறுவனத்தின் ஆவணங்களின்படி ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் ரிலையன்ஸ் குழுமம் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியிட்டது. இதற்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளபோதிலும், எதிர்க்கட்சிகள் இதனை வைத்து ரஃபேல் விவகாரத்தில் புயலைக் கிளப்பிவருகின்றன.
பிரதமர் ஊழல்வாதி: ராகுல்
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:33:00
Rating:
No comments: