பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசம்? - வி.களத்தூர் எம்.பாரூக்
"இரவில் எப்போது ஒருபெண் தனியாக நடந்து செல்ல முடிகிறதோ அன்றுதான் உண்மையான சுதந்திரம்" என மகாத்மா காந்தி குறிப்பிட்டார்கள். அவரின் உண்மையான சுதந்திரம் என்ற அந்த கனவு நிறைவேறா கனவாக நிலைத்துவிடும்போல் தெரிகிறது.
பெண்கள் இந்நாட்டின் கண்கள் என்று போற்றப்படுகிறார்கள். இந்தியாவின் எல்லா நதிகளுக்கு பெண்களின் பெயரே சூட்டப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 பெண்கள் எவ்வாறு மாண்போடும், சமமான வகையில் பொது இடங்களில் மதித்து நடத்தப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
தற்போதும் பெண்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வுகள் அதிகரித்து வருகிறது. பெண்கள் தாங்கள் பாதிக்கப்படும் சமயங்களில் மௌனியாக நில்லாமல் துணிந்து வெளியே சொல்கிறார்கள். பெண்கள் வேலைகளுக்கு செல்வதிலும், பல்வேறு துறைகளில் பங்காற்றுவதிலும் பெரும் முன்னேற்றம் காணப்படுகிறது என்பது ஒருபக்கம் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.
ஆனால் மறுபக்கம் இந்த தேசம் பெண்கள் வாழ தகுதியற்றதாக உருமாறிவிடுமோ என்ற அச்சம் மனதில் நிறைந்து நிற்கிறது. ஹரியானா மாநிலம் ரேவரியில் சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பெற்ற 19 வயது மாணவி கடந்த 12.09.2018 அன்று கடத்தப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்வு தேசத்தை பேரதிர்ச்சியில் தள்ளிருக்கிறது . இதில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது கூடுதல் அதிர்ச்சியை தருவிக்கிறது. அதே மாநிலத்தில் ஜிந்த் மாவட்டத்தில் 15 வயது சிறுமியின் நிர்வாண உடல் கண்டெடுக்கப்பட்டது. அவளது பிறப்புறுப்பு கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக உடல் கூராய்வு அறிக்கை தெரிவிக்கிறது. இக்கொடுஞ்செயலை செய்தவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தத்தக்கது. இதுபோல் சொல்லிக்கொண்டே போகலாம்.
பீகார் மாநிலத்திலுள்ள பெண்கள் காப்பகத்தில் 30 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது இந்தியாவில் காப்பகங்களில்கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உறுதியாகிருக்கிறது. உத்திரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்.எல்.ஏ. உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பலால் மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். காஸ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி ஆசிபாவை மனித மிருகங்கள் கூட்டு பலாத்காரம் செய்து கொன்றது. தேசமே அச்சிறுமியின் பக்கம் நின்று குரல் எழுப்பியது. ஆனால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசிய கொடியை ஏந்திக்கொண்டு காவி கயவர்கள் நின்றது இந்த தேசத்தை அவர்கள் எந்த திசையில் அழைத்து செல்ல முற்படுகிறார்கள் என்பதை பறைசாற்றிற்று.
சிலமாதங்களுக்கு முன் சென்னையில் 12 வயது சிறுமியை 17 கயவர்கள் சேர்ந்து சீரழித்ததை அறிந்து தமிழ்நாடே கொந்தளித்தது. இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக்கூட விட்டுவைப்பதில்லை. திருவண்ணாமலையில் உள்ள விடுதியில் ரஷ்யாவைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் நான்கு கொடூரர்களால் கற்பழித்துக் கொல்லப்பட்டார். தமிழகத்தில் தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களை தாக்கி கொல்வதும்,
கொள்ளையடிப்பதும் இன்று அன்றாட நிகழ்வாகிவிட்டன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளடைவில் அதிகரித்துக்கொண்டே செல்வது இந்த தேசம் பேரபாயத்தில் இருப்பதை அறிவிக்கின்றது. கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 34% அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. 2016 ம் ஆண்டு மட்டுமே பெண்களுக்கு எதிராக 3,38,954 குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சொல்கிறது.
ஒருமணிநேரத்திற்கு நான்கு பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் சரிபாதியாக பெண்கள் இருக்கிறார்கள். மொத்த பெண்களில் 35% பேர் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகிறார்கள். 46% பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருவதாக பல்வேறு அறிக்கையில் சுட்டுகின்றன. பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலங்களில் மஹாராஷ்டிரா, டெல்லி, உத்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் போன்றவை முன்னிலை வகிக்கின்றன. இதில் தமிழகம் ஒன்றும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,637 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களுக்கு எதிராக 37,577 குற்றங்கள் இங்கு இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ளன.
"உலகிலேயே பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா" என்று தாம்ஸ்ன் ராய்ட்டர்ஸ் பவுண்டேசன் என்ற நிறுவனம் மூன்று மாதங்களுக்கு முன் ஆய்வறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில் 'பெண்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்குரிய மரியாதையை அளிக்க மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது. கற்பழிப்பு, திருமண கற்பழிப்புகள், பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசுக்கொலை ஆகியவை குறையாமல் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளிவந்த உடனேயே தேசிய மகளிர் ஆணையம் மறுப்பு சொன்னது. "இந்தியா போன்ற மிகப்பெரிய ஒரு நாட்டில் இந்த ஆய்வுக்காக எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது" என அதில் தெரிவித்தது. ஆனால் நடக்கின்ற நிகழ்வுகளை பார்க்கின்றபோது அந்த ஆய்வு அறிக்கை சொன்னது உண்மையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றன அரசுகள். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவதில்கூட மெத்தனமாகவே செயலாற்றுகிறது.
"இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலோர் மாலை நேரத்திற்குப் பிறகு பாதுகாப்பு இல்லை" என உணர்வதாக தொழில்துறை அமைப்பான அசோசெம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற 92% பெண்கள் இந்த கருத்தை பகிர்ந்துள்ளனர். படித்த, வேலைக்கு செல்கின்ற பெண்கள் பொதுவாகவே துணிவு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கே இந்த நிலை என்றால் படிக்காத கிராமத்தில் இருக்கும் பெண்களின் நிலை என்ன?
சிலமாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உலக சீனியர் ஸ்குவாஷ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர ஆட்டக்காரர் அம்ரே அலின்க்ஸ் "இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என கூறி பங்கேற்க மறுத்தது தேசத்தின் மீது விழுந்த மிகப்பெரும் கறையாகும். பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசம் என்ற அவப்பெயரை பெற்று உலகத்தின் முன் தலைகுனிந்து நிற்கிறது இந்தியா.
பெண்கள் நலனில் அதிகமான அக்கறை இன்று தேவை.
பெண்களை போகப்பொருளாக பார்க்கும் மனநிலையே எங்கும் நிறைந்திருக்கிறது. தம்மைவிட பெண்கள் வலிமை குன்றியவர்கள், தனக்காக சேவகம் செய்ய படைக்கப்பட்டவர்கள் என்ற எண்ணம் பெரும்பாலான இந்திய ஆண்கள் மனதை ஆட்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் எல்லா வன்முறைகளுக்கும் இவையே அடிப்படை.
நன்றி : புதிய விடியல் (அக்டோபர் 01-15, 2018)
பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசம்? - வி.களத்தூர் எம்.பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:56:00
Rating:
No comments: