ரஃபேல்: விசாரணை தொடங்கினால் பிரதமர் சிறை செல்வார்!
ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணை தொடங்கினால், பிரதமர் மோடி சிறை செல்ல நேரிடும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுடன் நேற்று (அக்டோபர் 30) கலந்துரையாடினார். அப்போது, “ரஃபேல் விவகாரம் தொடர்பான விசாரணை தொடங்கினால், பிரதமர் சிறைக்குச் செல்ல நேரிடும். பாஜக மீது நான் குற்றச்சாட்டை வைக்கவில்லை. ரஃபேல் ஒப்பந்த முறைகேட்டை வெளிபடுத்தியவர் பிரான்ஸ் முன்னாள் அதிபர். பிரதமர் மோடி ஒருதலைபட்சமாக முடிவெடுத்து அனில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளார். ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணையைத் தொடங்கியதாலேயே சிபிஐ தலைவர் நீக்கப்பட்டார்” என்று தெரிவித்தார்.
சபரிமலை குறித்து பேசும்போது, “பெண்களுக்குச் சம வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்களும் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பம். ஆனால், கேரளாவில் உள்ள காங்கிரஸுக்கு இந்த விவகாரத்தில் வேறு பார்வை இருக்கலாம். கேரளாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் உணர்வுபூர்வமான விஷயமாக இது உள்ளது. கட்சியின் கருத்துக்கு என் கருத்துக்கு வேறுபாடு உள்ளது. ஆனால், நான் கட்சியின் கருத்தின்படியே செல்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இந்து மதம் என்பது இந்துத்துவாவிலிருந்து வேறுபட்டது. இந்து மதம் அனைவரையும் உள்ளடக்கியது. அது மற்றவர்களை மதிக்கிறது. பாஜகவின் இந்துத்துவா என்பது கோபம் மற்றும் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது. காங்கிரஸ் இந்துமதத்தை உள்ளடக்கிய கட்சி, இந்துத்துவாவை அல்ல” எனத் தெரிவித்தார்.
ராகுல் மீது வழக்கு
நேற்று முன்தினம் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், “மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மகன் கார்த்திகேயா சவுகான் மற்றும் குடும்பத்தினருக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழலில் தொடர்பு உள்ளது” என்று கூறியிருந்தார்.
இந்தத் தவறான குற்றச்சாட்டுக்காக ராகுல் மீது வழக்கு தொடரப்போவதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.
இதையடுத்து, “பாஜகவில் பல்வேறு ஊழல்கள் உள்ளதால், நான் குழம்பிவிட்டேன். மத்தியப் பிரதேச முதல்வர் பனாமா ஊழலில் ஈடுபடவில்லை. ஆனால், அவர் ஆன்லைன் ஒப்பந்தம் மற்றும் வியாபம் ஊழலில் ஈடுபட்டுள்ளார்” என்று ராகுல் விளக்கமளித்தார்.
இந்த நிலையில், கார்த்திகேயா சவுகான் சார்பில் அவரது வழக்கறிஞர் ஷிரிஷ் ஸ்ரீவஸ்தவா ராகுல் காந்தி மீது நேற்று மானநஷ்ட வழக்கு பதிவு செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ரஃபேல்: விசாரணை தொடங்கினால் பிரதமர் சிறை செல்வார்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:39:00
Rating:
No comments: