கீழடியில் ஐந்தாம்கட்ட ஆய்வு?
கீழடி குறித்த வழக்கொன்றில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, அங்கு ஐந்தாவது கட்ட அகழாய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கீழடி அகழாய்வு தொடர்பாக, வழக்கறிஞர் கனிமொழி மதி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கீழடி ஆய்வு பற்றிய தகவல்களை வெளியிட வேண்டுமென்றும், தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். கீழடியில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளாவது ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென்றும், இந்த ஆய்வு குறித்த அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் வெளியிட வேண்டுமென்றும் தொல்லியல் ஆர்வலர்கள் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தனர். கீழடி பற்றிய ஆய்வறிக்கையை வேறோர் அதிகாரி வெளியிடுவார் என்று மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (அக்டோபர் 11) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுவரை கீழடியில் நான்கு கட்டங்களாக அகழாய்வுப் பணி நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கீழடி அகழாய்வில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்பட்டன. தந்தத்தில் செய்யப்பட்ட 6,000 கலைப்பொருட்கள் கிடைத்துள்ளன. நான்காவது கட்ட ஆய்வின்போது ஆறு தங்க ஆபரணங்கள் உட்பட 7,000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மற்றும் காலம் குறித்து அறிவதற்காக, அமெரிக்க ஆய்வு மையத்துக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கு ஐந்தாவது கட்ட அகழாய்வை மேற்கொள்ள, மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழடியில் ஐந்தாம்கட்ட ஆய்வு?
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:31:00
Rating:
No comments: