இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?
இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?
இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர்.
குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
தினசரி கூலிகளாக, கழிவறை சுத்தம் செய்பவர்களாக, ரிக்ஷா இழுப்பவர்களாக, முடி திருத்தம் செய்பவர்களாக எனத் தங்களது அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத இரண்டாம் தரக் குடிமக்களாக வாழும் சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளனர்.
ஒருபுறம் வாழ்வாதாரத்திற்கே வழி தெரியாமல் வாடும் முஸ்லிம் சமூகத்தின் மேல் பல்வேறு அநீதிகளும், அடக்குமுறைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தீவிரவாதமும், பயங்கரவாதமும் முஸ்லிம்களின் தனிவுடைமையாக்கப்பட்டுள்ளன.
கலவரங்கள், பாலியல் வக்கிரங்கள், சொத்துகளைச் சூறையாடுதல் போன்றவை முஸ்லிம்களின் மேல் நடத்தப்படும் அன்றாட நிகழ்வாகிப் போனது. இந்த நிலை தொடர்ந்தால் சிறுபான்மை சமூகம் இந்தியாவில் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த நிலை உருவாகி விடுமோ என்ற அச்சத்தை சமீப கால நிகழ்வுகள் நமக்கு ஏற்படுத்துகின்றன.
இந்திய கடலோர மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்கள் இந்திய நாட்டைச் சாராதவர்கள் என்றும், அந்நிய நாட்டு அகதிகள் என்றும் பழி சுமத்தி அழித்தொழிக்கப்படும் இனச் சுத்திகரிப்புகளுக்கு இந்தியாவில் பஞ்சம் இல்லாமல் போய்விட்டது.
இதைக் கண்ணுறும் முஸ்லிம் சமூகம் தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள முனைந்துள்ளது. உரிமை மீட்டெடுப்புக்கான வழிமுறை ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்கள்தான் என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ளும் தருணம் வந்துள்ளது. அந்த அடிப்படையில் சமீப காலங்களாக முஸ்லிம்கள் சம்பந்தமாக அரசால் நியமிக்கப்பட்டு வெளியிடப்படும் அறிக்கைகள் அதன் அவசியத்தை முஸ்லிம் சமூகத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ உணர்த்துகின்றன.
மண்டல் கமிஷன் அறிக்கை, சச்சார் கமிஷன் அறிக்கை, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை என தொடர்ச்சியான அறிக்கைகள், முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் பின் தங்கியுள்ளனர், மலைவாழ் மக்களை விட ஒரு சமூகம் பின் தங்கியிருக்கும் என்று சொன்னால் அது முஸ்லிம் சமூகம்தான் என்ற அதிர்ச்சி தகவல்களைத் தந்துள்ளன.
இதற்கு காரணம் கல்வியில் முஸ்லிகளுக்கு முன்னுரிமை இல்லை. வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடமில்லை. பொருளாதாரம் முஸ்லிம்களுக்குச் சொந்தமில்லை என்ற நிலை. இன்று இந்தியாவின் அரசு சார்ந்த துறைகளில் முஸ்லிம்களை பார்ப்பது காளை மாட்டில் பால் சுரப்பதற்கு சமமாகி போனது. அதிலும் ராணுவம், காவல்துறை, உளவுத்துறை போன்ற பிரிவுகளில் முஸ்லிம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. அதன் விளைவுதான் கலவரங்களும், இனப்படுகொலைகளும், ஒருதலைப்பட்ச அரசுத்தரப்பு நடவடிக்கைகளும்.
இந்த நிலையை இன்றைய இஸ்லாமிய இயக்கங்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்துவிட்டன. இந்த நிலை மாற ஏனைய சமூகங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளும், இடஒதுக்கீடும் முஸ்லிம்களுக்கும் அவசியம் என்ற எதார்த்தை தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவுபடுத்த முனைந்த முதல் குரல் ஷஹீத் பழனி பாபாவின் எழுச்சி குரல்.
அந்தக் காலம் தொட்டு இன்று வரை தொடர்ச்சியாக பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களும் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டின் அவசியத்தை உணர்ந்து பல்வேறு முறைகளில் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன.
இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத், SDPI, மமக, முஸ்லீம் லீக் எனப் பல்வேறு இயக்கங்களும் தங்களது நியாயமான உரிமைக்கான போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டிருக்கின்றன.
கடந்த 2010-ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பிப்ரவரி-மார்ச் வரை ஒரு மாத காலம் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை அமுல்படுத்தக் கோரி தேசிய அளவில் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. முஸ்லிகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு கேட்டு இந்தியா முழுவதும் கருத்தரங்கங்கள், கலந்துரையாடல்கள், பேரணிகள், போராட்டங்கள், விழிப்புணர்வு நாடகங்கள், கண்காட்சிகள் எனத் தொடங்கி பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி, ராஜ்பவனை நோக்கிய பேரணியோடு மாபெரும் பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கோவா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி, உத்திர பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், மணிப்பூர் என இந்தியாவின் கன்னியாகுமரியின் கடல் பகுதிகளில் தொடங்கி மணிப்பூரின் காடுகள் வரை இடஒதுக்கீட்டுப் பிரச்சாரம் பாப்புலர் ஃப்ரண்டால் கொண்டு செல்லப்பட்டது.
இதே போன்று சோஷியல் டெமொக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) பல்வேறு காலகட்டங்களில் பலப்பல போராட்டங்களை இந்தியா முழுவதும் நடத்தியுள்ளது. இடஒதுக்கீடு சம்பந்தமாக எந்த இயக்கம் போராட்டம் நடத்தினாலும் தன் ஆதரவைத் தயங்காமல் தெரிவித்தும் வருகின்றது.
2012-ல் ஏப்ரல் 22 அன்று “சம உரிமை பெற்றிட சமூகமே எழுந்து வா” என்ற முழக்கத்தோடு மத்தியில் 10 சதவிகிதமும், மாநிலத்தில் 7 சதவிகிதமும் தரக் கோரி தமிழகத்தில் சென்னை, மதுரை, நெல்லை, தஞ்சை, கோவை என ஐந்து மாவட்டங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டங்கள் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடத்தப்பட்டன. அரசாங்கங்களை அதிர வைக்கும் திட்டமிடலுக்கான போராட்டமாக அது அமைந்தது.
2013-ல் ஜூலை 6 அன்று “கோட்டையை நோக்கிய பேரணி” என்ற முழக்கத்தோடு இடஒதுக்கீட்டிற்கான எழுச்சிப் போராட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் சென்னையில் தடையை மீறி நடந்தேறியது. சென்னை ஸ்தம்பிக்கும் அளவிற்கு மிகப் பிரம்மாண்டமாக அது நடந்தது.
2014-ல் ஜனவரி 28 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தால் தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி மற்றும் நெல்லையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசுத் துறைகள் எனப் புறம் தள்ளப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு சதவிகிதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இந்த உரிமைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கெடுத்தனர்.
இப்படி முஸ்லிம்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஒவ்வொரு இயக்கமும் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. அதன் ஓர் அங்கமாக தமிழகத்தில் அமுலில் இருக்கும் 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை 4 முதல் 5 சதவிகிதமாக உயர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், நம்பக்கூடிய அளவிலான புறத்திலிருந்து வருவது ஆறுதல் அளிக்கும் விஷயம்தான்.
எது இப்படியோ இந்த இடஒதுக்கீடு உயர்வு கிடைக்கும் பட்சத்தில் அது பல்வேறு இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகத்தான் இருக்கும். பல்வேறு இயக்கங்கள் இருந்தாலும் அவை முன்னெடுக்கும் போராட்டங்களால் முஸ்லிம் சமூகத்தின் துயரங்களுக்கு விடை கிடைக்குமானால் அது பாராட்டுக்குறியதே. இந்த வெற்றியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு இயக்கத்தின் பங்கும் சமமானதும், பாராட்டுக்குரியதும் ஆகும்.
அதலால் எந்தவொரு தனி இயக்கமும் இதற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அனைத்து இயக்கங்களுக்கும் அவரவர் செய்த உழைப்புக்கேற்றவாறு இந்த வெற்றியின் பங்கு போய்ச் சேரும் என்பதே நியாயமாக இருக்க முடியும்.
வலசை ஃபைஸல்
- See more at: http://www.thoothuonline.com
இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:53:00
Rating:
No comments: