விலகி ஓடும் மயில்! (சிறுகதை) - உமர் முக்தார்



சிறு வயதிலிருந்தே மயிலை கண்டு ரசிப்பதில் ஈடில்லாத மகிழ்ச்சி எனக்கு. மிருகக் காட்சியில் மட்டுமல்ல, எனது கிராமத்தை சுற்றியும் ஏகப்பட்ட மயில்களை பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். சில நேரங்களில் அதன் அருகில்கூட செல்ல முற்பட்டிருக்கிறேன். என்ன காரணம் என்று தெரியவில்லை. மயில்மீது ஒரு ஈர்ப்பு எப்போதும் உண்டு எனக்கு. சிறுவயதில் மட்டுமல்ல இப்போதும். எனது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் வாழும் பகுதி சுற்றியும் பசுமையான கிராமங்கள்தான். எளிய மனிதர்கள், கால்நடைகள், விவசாய நிலங்கள், தென்றலாக வருடிவிடும் காற்று, கண்ணுக்கு குளிர்ச்சியை தரும் மரம், செடிகொடிகள் என அனைத்தும் ரம்மியமானது. அவற்றினூடே பயணிப்பது எல்லையற்ற மகிழ்விற்குரியது. இப்படிப்பட்ட பயணங்களில்தான் மயில்களை அதிகம் பார்ப்பேன். அதுவும் பொழுது சாயும் மாலை நேரங்களில்.

சில சமயம் கூட்டாக சேர்ந்து ஆட்டம் போடும். அதன் நடையழகே நடனழகுதான். சில மயில்கள் தனிமையில் உலாவரும். இன்றும் அதுபோலதான். இயற்கையை ரசித்துக்கொண்டே பயணிக்கிறேன். எனது வாகனம் ஆமையுடன் போட்டியிடும் அளவிற்கு செல்கிறது. சூரியன் மறையும் தருவாயில் மனிதர்களின் நடமாட்டம் இல்லா நிலத்தினில் ஒரு மயில் தனது உணவை தேடிக்கொண்டிருந்தது. பார்த்தவுடன் எனது வாகனம் நின்றுவிட்டது. எனது மனதும்தான் அதன்மேல். இப்படி ஒரு காட்சியின் பின்புலத்தில் ஒரு மயிலை இதற்கு முன் கண்டதில்லை. எனது அலைபேசியை எடுத்தேன் புகைப்படம் எடுக்க. அதற்குமுன் அது உசாராகிவிட்டது. அருகில் இருந்தது, தொலைவிற்கு சென்றுவிட்டது. அந்த மயிலுக்கு 'தான் ரொம்ப அழகு' என்ற ஆணவம். மனம் மயங்கும் அழகை கொண்ட எல்லோருக்கும் இருக்கும் அதே பண்புதான் அந்த மயிலுக்கும்.

தொலைவிலிருந்து மீண்டும் என்னை நோக்குகிறது. எனக்கு போய் வருகிறேன் என்று சொன்னதுபோல் இருந்தது. சிறிது நேரத்திலேயே மயில்கள் சில கூட்டமாக தென்பட்டது. அதன் அழகில் நான் சொக்கித்தான் போனேன். நான் அந்த அழகை ரசிக்கிறேன் என்று தெரிந்துகொண்ட அதன் மயில்கள் கூட்டம் எனது பார்வையிலிருந்து தப்பிப்பதற்கு துள்ளிக்கொண்டு ஓடிவிட்டது. மனிதர்களின்மேல் இந்த மயில்களுக்கெல்லாம் என்ன கோபமோ தெரியவில்லை. நெருங்கவே மறுக்கிறது. ஒருவேளை தனது வாழ்விடங்களை அழித்துவரும் மனிதன் தன்னையும் அளித்துவிடுவானோ என்ற அச்சமாகவும் இருக்கலாம்.

ஆனாலும் அந்த மயில்கள் தனது உடல் அழகை என்னிடமிருந்து மறைத்தாலும் அதன் குரல் அழகை எனது செவிக்குள் தேனாக பாய்ச்சியது. அந்த குரலின் அழகில் மதிமயங்கியவனாக எனது வாகனத்தில் எனது பயணத்தை மீண்டும் துவக்கினேன்.  எனது ஏமாற்றத்தை புரிந்துகொண்டதோ என்னவோ தெரியவில்லை அழகான மயில் ஒன்று மதில்மேல் ஏறிநின்று என்னை புகைப்படம் எடுத்துக்கொள் என்பதுபோல் வீற்றிருந்தது. அதன் அழகை வருணிக்க வார்த்தைகள் என்னிடம் இல்லை. தலையை தூக்கி பார்க்கும் பார்வையும், நீளமான அதனுடைய தோகையும் மெய்சிலிர்க்க வைத்தது. நான் கிளம்ப தயாரானேன். அது குரல் எழுப்பி பறந்து சென்றது.

- உமர் முக்தார் 
விலகி ஓடும் மயில்! (சிறுகதை) - உமர் முக்தார் விலகி ஓடும் மயில்! (சிறுகதை)  - உமர் முக்தார் Reviewed by நமதூர் செய்திகள் on 00:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.