இலக்கியம் நமக்கு தூரமா? – முஹம்மது ஃபைஸ்

‘நூர்ஜஹான் என்ற கருப்பாயி’. அன்வர் பாலசிங்கம் என்பவர் எழுதிய ஒரு நாவல். இஸ்லாத்தை தழுவிய மீனாட்சிபுரம் முஸ்லிம்கள், குறிப்பாக பெண்கள் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்ற புரட்டை மையமாக வைத்து எழுதப்பட்டது. எதிர்பார்த்தது போல் இதை சங்பரிவார்கள் படு வேகமாக விளம்பரப்படுத்தினார்கள். ‘இஸ்லாத்தில் சாதி உண்டு’ என்று தாங்கள் சொன்னது நிரூபிக்கப்பட்டு விட்டது என்று குதூகலித்தார்கள். 

வேறு பல தளங்களிலும் இந்த நாவலின் கருத்து முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அப்போது ஒரு சகோதரர் இப்படி குறிப்பிட்டார்:

“ஆமாம். இன்று ஒரு நூர்ஜஹானின் வாழ்க்கையைப் பற்றி வந்த நாவலை வைத்து முஸ்லிம்களை குற்றம் சொல்கிறீர்கள். பல நூர்ஜஹான்களின் வாழ்க்கை இஸ்லாமால் வசந்தமானதை நாங்கள் நாவலாக பதிவு செய்யாதது எங்கள் குற்றம்தான்.”
“நாவலாக பதிவு செய்யாதது எங்கள் குற்றம்தான்.” – இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால் இலக்கியங்களில் நாங்கள் ஆர்வம் காட்டாதது, பங்களிப்பு செய்யாதது எங்கள் குற்றம்தான்.

இலக்கியம், நாவல், சிறுகதை, கவிதை மற்றும் இன்னபிற இத்தியாதிகளில் ஈடுபடக் கூடிய நிலையிலா முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது? ஒரு சிறு பிரச்சினை, ஒரு இரண்டு நபர்கள் அல்லது இரு குடும்பங்கள் இவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையையும் பெருங்கலவரமாக்கி ஐயாயிரம் பேர் லாரிகளில் வந்து தாக்கப்படும் சமுதாயம் இலக்கியத்தை பற்றி சிந்திக்க முடியுமா?

இந்த பதில் நியாயமாக இருந்தாலும் இலக்கியங்களில் நமது வெற்றிடம் நமக்கு பாதகத்தை உருவாக்கி விடுகிறது. ‘நூர்ஜஹான் என்ற கருப்பாயி’ ஓர் உதாரணம். இந்த நாவல் ஒரு புரட்டு, புனைவு என்று நிரூபிக்க சமுதாயம் செல்வழித்த நேரங்கள், உழைப்புகள், கள ஆய்வுகள் – இவை திரட்டப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டு அதே இலக்கிய தளத்தில் ஏன் முதலீடு செய்யப்பட்டிருக்கக்கூடாது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இன்னொன்று, நாம் நீண்ட காலமாக பொது தளத்தில் ஒரு பத்திரிகை கொண்டு வர முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். திரைப்படத் துறையில் என்ன பங்களிப்பு செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். காரணம் அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகள் ஊடுருவி பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விட்டதுதான்.

இலக்கியமும் இதற்கு சற்றும் குறைவில்லாத துறைதான். அதே அளவு மக்களிடையே சென்று சேர்வதுதான். மேலும் மேற்சொன்ன இரண்டையும் விட எளிதில் நாம் நுழைந்து விடக் கூடியது. எளிதில் என்று சொன்னால் பொருளாதார அழுத்தம் இல்லாத துறை. நாம் செய்ய வேண்டியது படைப்புகளை உருவாக்கும் கற்பனைத் திறனும், எழுத்தும் திறனும் கொண்ட தனி மனித ஆற்றல்களை கண்டெடுப்பது, பயிற்றுவிப்பது, ஊக்குவிப்பது, தளம் அமைத்துத் தருவது.  

இத்தகைய செயல்திட்டங்களைக் கொண்ட ஒரு கலைக்கழகம் அமையுமானால் அதிலிருந்து இலக்கிய ஆளுமைகள் உருவாகி வருவார்கள். வெகுஜன கவனம் ஈர்ப்பார்கள். பொதுத் தளத்தில் – களத்தில் பிரவேசிப்பார்கள். நம் தரப்பு நியாயங்களை, வலிகளை, அல்லல் பட்டு ஆற்றாது அழுத நம் ஜனங்களின் கண்ணீரை ஜனரஞ்சகப் படுத்துவார்கள்.

கவிக்கோ அப்துர் ரஹ்மானை – ஜூனியர் விகடனில் அவர் எழுதிய ‘சிறகுகள்’ அடைந்த வரவேற்பை நினைத்துப் பாருங்கள். தோப்பில் முஹம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ இன்றும் விற்றுக் கொண்டிருக்கிறது. விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் ‘வேர்களை’ குறிப்பிடாமல் இருக்க முடியாது. மொழிபெயர்ப்பு என்றாலும் எழுத்திலும் மொழி நடையிலும் அத்தனை கலை அம்சங்களையும் உள்ளடக்கிய நாவல். எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்களின் இந்தப் படைப்பு முஸ்லிம்களை தாண்டி அனைத்துத் தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்பது நமது அவா.
Vergal
இலக்கியத் தளத்தில் நமது பற்றாக்குறையை நாம் அடிக்கடி உணர்வது இந்துத்துவவாதிகள் அதே தளத்தில் நின்று நம் மீது அவதூறு கூறும்போதுதான். ஜெயமோகனை எடுத்துக் கொள்ளுங்கள். மிகச் சிறந்த எழுத்தாளர். இலக்கியவாதி. மாபெரும் படைப்புகளை படைத்திருக்கிறார். தனது இலக்கியப் படைப்புகளில் இந்துத்துவ மாச்சர்யங்களை காட்ட மாட்டார். கம்யூனிஸ்டுகளை உயர்த்துவார். நல்ல முஸ்லிம் கதாபாத்திரங்களை படைப்பார். தலித்துகள் பட்ட கொடுமையை நாவலாக வடிப்பார்.

இந்த ஒரு பக்கத்தை பார்த்து பலர் இவரது வலையில் விழுந்து விடுகின்றனர். பொதுவானவர் என்று நம்பி விடுகின்றனர். கமல்ஹாசன் அவர்கள் நல்ல உதாரணம். இவர் தனது இந்துத்துவ முகத்தை தனது கட்டுரைகளில் காட்டுவார். இந்துத்துவாவிற்கு எதிரான அனைத்தின் மேலும் விஷக் கருத்துகளை கொட்டுவார். தனது பிரபலத்தை இதற்கு பயன்படுத்திக் கொள்வார். அவரின் அடிப்பொடிகள் அதை அனைத்து மட்டங்களுக்கும் எடுத்து செல்வார்கள்.

முஸ்லிம்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையிலும் அவதூறை அள்ளித் தெளித்து கட்டுரைகள் எழுதுவார். விஸ்வரூபம் படமானாலும், ஃபலஸ்தீன பிரச்சினையானாலும், கஷ்மீர் விவகாரமென்றாலும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்துகளை புகுத்தி முஸ்லிம்களை வில்லன்களாக சித்தரிப்பார். அதை மிகுந்த தொழில்நுட்பத்தோடு செய்வார். இப்போது நடந்த சார்லி ஹெப்டோ சம்பவத்திலும் அதை செய்தார். ஏன்? பெருமாள் முருகனின் “மாதொருபாகன்” விஷயத்திலும் இவர் முஸ்லிம்களை விட்டு வைக்கவில்லை.

இப்படியெல்லாம் இவர் கபளீகரங்களை செய்யும்போது அதை எதிர்கொள்ள நமது தரப்பை தேடும் போது பொதுவாக நமக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. 

மனுஷ்ய புத்திரன் அவ்வப்போது ஆறுதல் அளிக்கிறார். ஆளூர் ஷாநவாஸ் அவர்களும் பல தளங்களில் இயன்றதை செய்து வருகிறார். பல மனுஷ்ய புத்திரன்கள், ஷாநவாஸ்கள் உருவாகி வர வேண்டும்.  

இந்தத் தலைப்பில் இன்னொரு பகுதி இருக்கிறது. அது, முஸ்லிம் தரப்பு நியாயங்களை எழுதும் பிற சமுதாய எழுத்தாளர்கள். அந்த வகையில் மனுஷ்ய புத்திரன் பாசறையில் இருந்து விநாயக முருகன், யுவகிருஷ்ணா, அதிஷா அதிஷா குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் பலர் இருக்கின்றனர். அவர்களை நாம் கண்டடைய வேண்டும். கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம்கள் இவர்களுடன் நல்லதொரு தொடர்பும் தொடர் உரையாடலும் வைத்திருக்க வேண்டும். இங்கேயும் போய் சிலர் வம்புச் சண்டைகள்  வளர்க்கின்றனர்.

இப்படித்தான் சாரு நிவேதிதா ஆரம்பத்தில் சிறுபான்மை ஆதரவாளராக, ஃபாசிச எதிர்ப்பாளராக இருந்தார். இப்போது மோடி பஜனை பாடுகிறார். இனிமேல் இன்னொரு எழுத்தாளர் இப்படி மாறாமல் இருக்க வேண்டும். நம்முடைய செயல்பாடும் அதில் மிகவும் முக்கியம்.

-  முஹம்மது ஃபைஸ்
- See more at: http://www.thoothuonline.com/archives/71211#sthash.bPeO0PmH.dpuf
இலக்கியம் நமக்கு தூரமா? – முஹம்மது ஃபைஸ் இலக்கியம் நமக்கு தூரமா? – முஹம்மது ஃபைஸ் Reviewed by நமதூர் செய்திகள் on 06:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.