பாஜகவின் சுதேசிய வேடம்
கம்யுனிஸ்டுகள் இரஷ்யாவின், சீனாவின் கட்டளைப்படி நடப்பவர்கள் என்றும், காங்கிரஸ் கட்சி ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய போது, சதேசியம் பேசி இருந்தாலும், ஆட்சிக் கட்டிலில் ஏறிய பிறகு, சுதேசியத்தைக் கைவிட்டு வெளி நாட்டினரின் நலன்களுக்காக நடந்து கொண்டது என்றும், தாங்கள் மட்டுமே சுத்த சுயம்புவான இந்தியக் கட்சி என்றும், சுதேசி விரதமே தங்கள் உயிர் மூச்சு என்றும், மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக் கொண்டு இருந்த பா.ஜ.க., ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த உடனேயே, தாங்கள் கூறிய கொள்கைக்கு நேர் எதிராகச் செயலில் இறங்கி உள்ளனர்.
அவற்றில் ஒன்று தான் 29.12.2014 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட நில எடுப்புச் சட்டத் திருத்தம். இச்சட்டத்தின் படி, இதற்கு முன்னால், வேளாண்மை நிலங்களைக் கையகப்படுத்தும் போது, அந்நில உடைமையாளர்களுள் 70 விழுக்காட்டினர் ஒப்புதல் அளித்தால் தான் நிலத்தைக் கையகப்படுத்த முடியும் என்ற விதி இருந்தது.
இந்த ஒப்புதலைப் பெற, கால தாமதம் ஆகிறதாம்; ஒப்புதல் அளிக்கும் முன் மறுவாழ்வு அளிக்கும் உறுதிப்பாட்டைக் கேட்கிறார்களாம்; சில சமயங்களில் ஒப்புதல் பெறவே முடியாமல் போகிறதாம். இதனால் கையில் பணத்தை வைத்துக் கொண்டு, இலாபகரமாக முதலீடு செய்யக் காத்துக் கொண்டு இருக்கும் வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் பொறுமை இழந்து கோபப்படுகிறார்களாம். சுத்த சுதேசிகளான பா.ஜ.க.வினருக்கு இது பொறுக்குமா? உடனே இப்பொழுதைய சட்டத் திருத்தத்தில் இவ்விதியை நீக்கி விட்டார்கள்.
மேலும், இச்சட்டத்தின்படி, இதற்கு முன்னால், விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி ஆய்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இப்படி ஆய்வு செய்வதால், "விவசாயம் பாதிக்கப்படுகிறது; உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும்; மக்கள் பட்டினியால் வாட நேரிடும்; மிகப் பெருமளவில் மக்கள் வாழ்வாதாரங்களை இழப்பர்" என்றெல்லாம் ஆய்வு முடிவுகள் வெளி வருகின்றனவாம். ஆகவே விவசாய நிலங்களை அப்படியே விட்டு விடுவது தான் நல்லது என்று முடிவெடுக்கவும் நேரிடுகிறதாம். இதனால் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு இலாபகரமாக முதலீடு செய்ய வழி கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருக்கும் அயல் நாட்டுப் பெருமுதலாளிகளுக்குக் கோபம் வருகிறதாம். சுத்த சுயம்பு சுதேசிகளான பா.ஜ.க.வினருக்கு இதைக் காணப் பொறுக்குமா? இந்திய மக்களுக்கு உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதும், இந்திய விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்கக் கூடாது என்பதுமா சுதேசியம்? வெளி நாட்டுப் பெருமுதலாளிகள் எந்தவிதச் சிரமமும் இன்றி, தங்கள் மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்யும் வழிகளைச் செப்பனிட்டுக் கொடுப்பது தானே சுதேசியம்? உடனே சமூக பாதிப்பு ஆய்வு (Social Imapact Assesment) விதியை நீக்கி விட்டார்கள்.
"இப்படி எல்லாம் கூறுவதால் பா.ஜ.க. சுதேசியக் கொள்கைகளைக் கைவிட்டு விட்டது; அயல் நாட்டுப் பெருமுதலாளிகளுக்கு அடிமையாகி விட்டது என்று நினைத்து விட வேண்டுமா? அந்நிய நாட்டுப் பெருமுதலாளிகள் இந்திய நாட்டில் தொழில் தொடங்குவதால் நம் நாட்டு மக்களுக்குத் தேவையான பொருட்கள் பெரும் அளவில் உற்பத்தியாகி, நம் தேவைகள் நிறைவேற்றப்பட்டு, நாம் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைத்தால், அது நமக்கு நல்லது தானே? இது நேரடியாகச் சுதேசியமாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகச் சுதேசியம் என்று நினைக்கலாம் அல்லவா" என்று பா.ஜ.க.வின் மேல் அளவிட முடியாத பற்று கொண்டு, நினைப்பவர்களுக்கு நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்னும் தெளிவான ஒரு செய்தியைச் சொல்லி இருக்கிறார்.
"இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்" (Make in India) என்று அயல் நாட்டுப் பெருமுதலாளிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் தொடர்ச்சியாக "இந்தியாவில் உற்பத்தி செய்தால் மட்டும் போதாது; இந்தியர்களுக்காக உற்பத்தி செய்ய வேண்டும்" என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் இரகுராம் இராஜன் கூறியதை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 29.12.2914 அன்று புது தில்லியில் கடுமையாகக் கண்டனம் செய்தார். எந்த நாட்டு மக்களுக்காக உற்பத்தி செய்யப்படுகிறது என்பது முக்கியம் அல்ல; இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது தான் முக்கியம்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதாவது இந்திய நாட்டு மக்களுடைய தேவைகளைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்றும், அயல் நாட்டுப் பெருமுதலாளிகள் தங்கள் மூலதனத்தை இலாபகரமாக முதலீடு செய்ய வசதி செய்து கொடுப்பது தான் முக்கியம் என்றும் சுத்த சுயம்பு சுதேசிக் கட்சியின் முக்கியமான தலைவர் தெளிவாகக் கூறி விட்டார்.
சுதேசியமே உயிர் மூச்சு என்றும், பா.ஜ.க. அதைச் செயல்படுத்தும் என்று நம்பியும், பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய அக்கட்சியின் தொண்டர்களும், அப்பாவி மக்களும் என்ன செய்யப் போகிறார்கள்?
"பொருள் சுகம் நிலயானது அல்ல; அருள் சுகம் தான் நிலையானது. நாங்கள் ஆன்மீக சுகத்தை அடையவே விரும்புகிறோம்." என்று சொல்லப் போகிறார்களா? அப்படி என்றாலும் அது ஒப்புக் கொள்ளும்படியாக இல்லையே! அயல் நாட்டுப் பெருமுதலாளிகளையும், அயல் நாட்டு மக்களையும், மெய்யுலகிற்கு வழி காட்டாமல், பொய்யான பொருள் சுகத்தில் அழுந்த வைக்கும் செயலைச் செய்வது, அவர்களுக்குச் செய்யும் பெரும் துரோகம் அல்லவா? பிறருக்குத் துரோகம் செய்பவர்கள், அவர்கள் புனிதமாக நினைக்கும் ஆன்மீக உலகில் அடியெடுத்து வைக்க முடியுமா?
இராமியா
(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.1.2015 இதழில் வெளி வந்துள்ளது)
பாஜகவின் சுதேசிய வேடம்
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:29:00
Rating:
No comments: