ஜார்கண்டில் 2 இஸ்லாமியர்கள் அடித்துக் கொலை : என்ன நடக்கிறது இந்தியாவில்.
லதேகர் மாவட்டம் பலுமத் பகுதியைச் சேர்ந்த முஹமது மஜ்லூம் (வயது35), ஆசாத் கான் (வயது 15) ஆகிய வியாபாரிகள் விற்பனைக்காக 8 எருமை மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்றனர். மறுநாள் அவர்கள் இருவரும் ஜாபார் என்ற கிராமத்தில் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து அடைக்கபட்ட நிலையில் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கவிடபட்டு இருந்தனர்.
அவர்களை அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்க விட்டுள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவத்தையடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. கிராம மக்கள் திரண்டு வந்து லதோர் -சத்ரா சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வதாக வாக்குறுதி அளித்தனர்.
இதனை, கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கோஷமிட்ட சிலர், திடீரென கற்களை வீசி தாக்கியதால் பிரச்சினை ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கலவரத்தில் 6 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், வியாபாரிகள் கொலை தொடர்பாக பசு பாதுகாப்பு கண்காணிப்பு குழுவின் முக்கிய நிர்வாகி உள்பட 5 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
"இந்த கொலையில் பசு பாதுகாப்பு கண்காணிப்பு குழு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறதா? என்பது இதுவரை தெரியவரவில்லை. அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் விசாரணை நடத்தப்படும். இந்த விஷயத்தில் சிலர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வதந்திகளை பரப்ப முயற்சி செய்கிறார்கள்" என்றும் எஸ்.பி. தெரிவித்தார்.
ஜார்கண்டில் 2 இஸ்லாமியர்கள் அடித்துக் கொலை : என்ன நடக்கிறது இந்தியாவில்.
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:53:00
Rating:
No comments: