விஜயகாந்தால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: தமிழருவி மணியன்
காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
2016 சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பலர் முதல்வர் கனவில் உள்ளனர். வேட்பாளர்களை தேர்வு செய்யும் நேர்காணலின் போது அவர் என்ன சாதி? எவ்வளவு பணம் உள்ளது? என்று பார்க்கிறார்களே தவிர அவரது நேர்மை, தூய்மை, கடந்த கால அரசியல் வாழ்க்கையை பார்ப்பதில்லை.
வாக்காளர் பட்டியலில் தற்போது புதியதாக 30 லட்சம் இளைஞர்கள் இணைந்துள்ளனர். அவர்கள்தான் எங்கள் இலக்கு. மிகப்பெரிய அளவில் அவர்களது ஆதரவு எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். 2016 சட்டசபை தேர்தல் எங்கள் இலக்கு அல்ல. 2021 தான் எங்கள் இலக்கு.
குமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் காந்திய மக்கள் கட்சி போட்டியிடுகிறது. நாகர்கோவிலில் எங்கள் கட்சியின் குமரி மாவட்ட தலைவர் கதிரேசனும், குளச்சலில் வக்கீல் ஆனந்த்தும், பத்மநாபபுரத்தில் வக்கீல் ஜெயக்குமாரும் போட்டியிட உள்ளனர். இதுபோல தமிழகத்தில் 26 இடங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சிய தொகுதிகளில் அப்துல்கலாம் லட்சிய இந்திய கட்சி மற்றும் எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகள் போட்டியிடும்.
மக்கள் நலக்கூட்டணிக்கு எதிராக எங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. தமிழகத்தில் மாற்று அரசு உருவாக வேண்டும். திராவிடக் கட்சிகளிடம் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம்.
மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடக் கட்சிகளிடம் இருந்து மாறுபட்ட கொள்கை விஜயகாந்திடம் இல்லை. இதுபற்றி வைகோ விளக்கம் அளிக்க வேண்டும்.
விஜயகாந்த் ‘கிங்’காக தமிழக முதல்வராக வர வேண்டுமென்று அவரது கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்த கட்சி தலைவரும் முதல்வராக வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். தி.மு.க., அ.தி.மு.க. போல விஜயகாந்த் கட்சியிலும் குடும்ப அரசியல், வாரிசு அரசியல் உள்ளது. விஜயகாந்த், அவரது மனைவி, மைத்துனர் ஆகிய 3 பேர்தான் முடிவு எடுக்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று அறிவித்திருப்பது அவர்களது தைரியத்தை காட்டுகிறது. சீமானும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று கூறுகிறார்.
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி சேருகிறதோ? அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்ற மாயை உருவாக்கி உள்ளனர். விஜயகாந்த் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிட தயாரா? விஜயகாந்தால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.
அ.தி.மு.க.வுக்கு மிகப் பெரிய பலம் இருந்தது. ஆனால் தற்போது பலம் குறைந்துள்ளது. விஜயகாந்திற்கு 2011–ல் 8 சதவீதம் ஓட்டு இருந்தது. 2014–ல் 5 சதவீதமாக குறைந்து விட்டது. காஞ்சீபுரம் மாநாட்டிற்கு பிறகு தே.மு.தி.க. வாக்கு சதவீதம் கூடுமென்று நினைக்கிறார்கள். ஆனால் குறைய வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 34.5 சதவீதம் வாக்கு உள்ளதாகவும், தி.மு.க.வுக்கு 33 சதவீதம் வாக்கு உள்ளதாகவும் கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளன.
விஜயகாந்த் வாக்குகளையும் பெற்றால் வெற்றி பெற்று விடலாம் என்று தி.மு.க. கணக்கு போட்டுள்ளது. பாரதீய ஜனதாவுக்கு 3 சதவீத வாக்குகளை உள்ளது. எனவே தனித்து நின்றால் அந்த கட்சி டெபாசிட் இழந்து விடும். எனவே விஜயகாந்த்தை இழுத்து வாக்கு சதவீதத்தை அதிகரித்து காட்ட முயற்சிக்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி விஜயகாந்த்தை இழுத்து வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்.
எங்கள் தேர்தல் அறிக்கை மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் அமைய வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ‘லோக் ஆயுக்தா’ சட்டம் கொண்டு வரப்படும் என்று மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார். அவர்கள் ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது ஏன் கொண்டு வரவில்லை.
ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டு மென்பது தி.மு.க–காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த ஜெயலலிதா எடுத்த முடிவாக உள்ளது.ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் 24 ஆண்டுகள் சிறையில் உள்ளதால் மனித நேயத்துடன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். 161 விதியை பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடி அரசும் இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுவை கொண்டு வந்ததே தி.மு.க.தான். முன்பு 15 ஆயிரம் கோடி மது மூலம் வருமானம் வந்தது. தற்போது ரூ.29 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. வுடன் எனக்கு பகையோ, பாசமோ கிடையாது. தி.மு.க. இனி எழக்கூடாது.
தி.மு.க., அ.தி.மு.க. ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி ஆட்சிக்கு வருகிறார்கள். தி.மு.க. தற்போது முடியும் நிலையில் உள்ளது. இப்படி கூறுவதால் நான் அ.தி.மு.க. அனுதாபி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜயகாந்தால் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது: தமிழருவி மணியன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:42:00
Rating:
No comments: