மதுவிலக்கை அறிவிப்பாரா கருணாநிதி?

கருணாநிதி மனசுத்தியோடு மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க வேண்டும்

தமிழகத்தில் இந்தத் தேர்தலின் மிகப் பெரிய அஸ்திரம் மதுவிலக்குதான். ஏனைய கட்சிகளைவிட திமுக இதில் தெளிவாக இருப்பதை அதன் நகர்வுகள் காட்டுகின்றன. சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார். ‘மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் அதிமுக தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவரப் போவதாக அறிவிக்க இருக்கிறது’ என்பது அதன் சாராம்சம். தங்கள் கட்சியின் அஸ்திரத்தை அதிமுக-வும் கையில் எடுக்குமோ என்ற பதைபதைப்பில் வெளிவந்த அறிக்கை அது.


சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்தது. மதுவிலக்கு தொடர்பான போராட்டங்கள் தமிழகத்தில் வலுத்தபோது திடீரென திமுக மதுவிலக்கு அஸ்திரத்தை கையில் எடுத்தது. அப்போதும் அதிமுக அரசு மதுவிலக்கு தொடர்பாக சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டிருந்தது. இதுதெரிந்துதான் திமுக முதன் முறையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவித்தது என்கிறார்கள்.

பழைய சந்தேகம்

தான் முதன்முதலில் ஆட்சிக்கு வந்த சில காலங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மதுவிலக்குக் கொள்கையில் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா பின்பற்றும் கொள்கையைப் பின்பற்றியவர்தான் கருணாநிதி. ஆனால், பிடிவாதம் இருக்காது. கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவார். அப்படித்தான் கடந்த திமுக ஆட்சியில் அவர் 1,300 மதுக்கூடங்களை மூடினார்; நேரத்தைக் குறைத்தார்; வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்களின் அருகில் மதுக்கடைகளை அமைக்க கட்டுப்பாடு விதித்தார். இவை எல்லாம் அவருக்கே உரிய தற்காலிகமாக நிலைமையை சமாளிக்கும் யுக்திகளே.

மாறாக, அவர் மதுவிலக்கை நோக்கி மனசுத்தியுடன் நகர்ந்தார் என்று எடுத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அன்றைய நாட்களிலும் அவரிடம் ‘நெருப்பு வளையத்துக்குள் கற்பூரம்’ என்கிற பழைய வரிகள் வளைய வந்துகொண்டுதான் இருந்தன. அதனால்தான், இன்றைக்கு திமுக மதுவிலக்கு கோஷத்தை உயர்த்திப் பிடித்திருக்கும் நேரத்திலும் மக்களுக்குப் பழைய சந்தேகம் தீரவில்லை.

இந்தத் தேர்தல் திமுக-வுக்கு மிக முக்கியமானது. ஆனால், இப்போதும் திமுக, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தத் தீவிர நடவடிக்கைகள் எடுப்போம்’ என்று மட்டுமே சொல்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்து வோம் என்று ஆணித்தரமாக சொல்லத் தயங்குகிறது. அதாவது, மதுவிலக்கு என்னும் வாக்குறுதியால் வாக்கு வங்கி உயருமா என்று மக்களை சந்தேகத்துடன் பார்க்கிறது திமுக. மதுவிலக்கை உண்மையிலேயே இவர்கள் கொண்டு வருவார்களா என்று திமுக-வைச் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள் மக்கள். அதனாலேயே அந்தக் கட்சி மதுவிலக்கு வாக்குறுதியைக் கொடுத்துக்கொண்டே மறுபக்கம் கூட்டணிக்காக சிறிய கட்சிகளிடம் எல்லாம் அலைபாய்கிறது.

15% வாக்குவங்கி

தமிழகத்தின் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.79 கோடி. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2.91 கோடி. இது ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கையைவிட அதிகம். 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 26 %. புதிய வாக்காளர்கள் 12.6 %. தமிழகத்தில் ஏதோ ஓர் அளவில் மதுப்பழக்கத்திற்கு ஆளான குடிநோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2 கோடி. குடிநோயாளிகளில் கணிசமானோர் தாங்கள் முழுமையாக விரும்பி மது அருந்துவதில்லை. குடிநோயாளிகள் மது அருந்துவதை அவர்களின் குடும்பத்தினர் அனைவருமே விரும்புவதில்லை. இவர்கள் அனைவரும் மதுவிலக்கு எப்போது வரும்? யார் கொண்டு வருவார்கள்? என்று தவித்துப்போய் காத்திருக்கிறார்கள். இதன்படி பார்த்தால் மதுவிலக்கின் வாக்கு வங்கி மட்டும் சுமார் 15 %-க்கும் அதிகம். இது திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளைத் தவிர்த்து, தமிழகத்தில் வேறு எந்தக் கட்சிக்கும் இல்லாத வாக்கு வங்கி. அதேசமயம், இன்றைய சூழலில் திமுக-வுக்கும் அதன் எதிரணிக்கும் வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும் வாக்கு சதவீதங்களின் வித்தியாசம் சொற்பமே. ஆகவே, மதுவிலக்கு என்னும் மந்திரத்தை திமுக முழுமையாக நம்பினால் அந்தக் கட்சி சொற்ப சதவீத வாக்கு வங்கிகளை வைத்துள்ள கட்சிகளின் தயவை எதிர்பார்க்கத் தேவையில்லை. ஆனால், அதற்கு மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்.

தேவை நேர்மை

திமுக-வின் வார்த்தை ஜாலங்கள், எதுகை மோனை வசனங்கள், அரசியல் ராஜ தந்திரங்கள், பூடகமான பேச்சுக்கள் எல்லாம் முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது. மற்றவர்களின் வார்த்தைகளை மக்கள் மறந்துபோகலாம். ஆனால், கருணாநிதி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படும். அதனால் அவர் மக்களின் மனநிலையை அறிந்து பேச வேண்டும். கருணாநிதியிடம் மக்கள் எதிர்பார்ப்பது எளிமையான, நேர்மையான வாக்குறுதிகள் மட்டுமே.
தமிழகத்தில் ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி, பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர், அண்ணா ஆகியோர் எல்லாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையிலும் மதுவிலக்கை அமல்படுத்தி வந்தார்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போது கடும் நிதி நெருக்கடியில் இருந்தது தமிழகம். மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பவராக கருதப்பட்ட கருணாநிதி, மதுவிலக்கை ரத்து செய்து, சாராயத்தை மீண்டும் திறந்துவிடுவார் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மதுவிலக்கு தொடரும் என்று அறிவித்து எல்லோரையும் வாயடைக்க வைத்தார் அவர். அதேசமயம் மதுவிலக்கால் உண்டான இழப்பை ஈடு செய்யும் நிதிக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து போராடினார்.
“நான்குபுறமும் வேடர்களால் சூழப்பட்ட மான் போல தமிழகம் தவிக்கிறது. மதுவிலக்குக் கொள்கையில் வெற்றி பெற இயலாத அளவுக்கு தவித்துக்கொண்டிருக்கிறோம். நிதி உதவி செய்யுங்கள்” என்று உருக்கமான கடிதங்கள் எழுதினார். ஆனால், புதியதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதியுதவி என்று கைவிரித்தது மத்திய அரசு. தமிழகத்தின் முதுகில் குத்தப்பட்ட துரோகமாக இதனைக் கருதினார் கருணாநிதி. மதுவிலக்கை ரத்து செய்தார். 1974-ல் மீண்டும் மதுவிலக்கைக் கொண்டு வந்தார் அவர். இது வரலாறு.

பூரணமாகவா, படிப்படியாகவா?

இப்போது வரலாற்றுச் சக்கரம் சுழன்று மீண்டும் கருணாநிதியிடமே வந்திருக்கிறது. அன்று ராஜாஜி, காமராஜர், காயிதேமில்லத் மன்றாடிக் கேட்டுக்கொண்டும் தமிழகத்தின் நெருக்கடியான சூழலை காரணம் காட்டி மறுத்துவிட்டார் கருணாநிதி. ஆனால், இன்று தமிழகத்தின் சூழல் அவரை மீண்டும் மதுவிலக்கை நோக்கித் தள்ளியிருக்கிறது.
எனவே, இந்த முறை கருணாநிதி முழு மனதோடு மதுவிலக்கு கொள்கையை அறிவிக்க வேண்டும். திமுக-வின் தேர்தல் அறிக்கையில் வார்த்தை ஜாலங்கள் இல்லாமல் பரிபூரண மதுவிலக்கா? படிப்படியான மதுவிலக்கா? இரண்டில் எது என்றாலும் திமுக ஆட்சிக்கு வந்தால் எந்தத் தேதியிலிருந்து மதுவிலக்கு அமல்படுத்தப்படும்? இவற்றுக்கான மாற்று வருவாய் திட்டங்கள் என்ன? டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புத் திட்டங்கள் என்ன? குடிநோயாளிகளுக்கான மறு வாழ்வு திட்டங்கள் என்ன? என்று விரிவான செயல் திட்டங்களை உறுதியுடன் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் கருணாநிதியை நம்புவார்கள்.

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
மதுவிலக்கை அறிவிப்பாரா கருணாநிதி? மதுவிலக்கை அறிவிப்பாரா கருணாநிதி? Reviewed by நமதூர் செய்திகள் on 22:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.