அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை `அதிமுகவின் பினாமி அணி’ என்று விமர்சித்திருக்கிறார். இதற்கு முன்பும் கூட திமுக, காங்கிரஸ்காரர்கள் மக்கள் நலக்கூட்டணியை அதிமுக வின் பி.டீம் என்று விமர்சித்துள்ளனர். கொள்கை அடிப்படையில் விமர்சிப்பதற்கு தார்மீக தைரியம் இல்லாதபோது அவதூறுகளைப் பொழிவதில் அதிமுக, திமுக இரண்டும் ஒரே அணிதான். இதுமட்டுமல்ல, ஊழலில் பிரித்தறிய முடியாத அளவிற்கு இரண்டும் ஒரே அணி என்பதையும் தமிழக மக்கள் புரிந்துவைத்திருக்கி றார்கள்.
தமிழகத்தின் ஆறுகள் ஒட்டச் சுரண்டப்படுகின்றன. 500 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய ஒரு யூனிட் மணல் 5000 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதுபற்றி என்றாவது கேள்வி கேட்டிருப்பாரா மு.க.ஸ்டாலின்? இவர் அதிமுகவின் மணல் கொள்ளைக்கு பினாமியா? அல்லது பங்காளியா?
மலையை யாரோ விழுங்கிவிட்டார்கள் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அறிக்கை அளித்துவிட்டார். மொத்தமும் விழுங்கியது அதிமுக என்றால், திமுகவுக்கு விக்கல் எடுப்பது ஏன்? விக்கித்து நிற்பது ஏன்? இன்றுவரையிலும் சகாயம் அறிக்கை குறித்து மௌனம் காப்பது எதனால்?
நீதிமன்றத்திற்குப் போனதாலும், கோபப்பட்டு மக்கள் போராடியதாலும் தாது மணல் கொள்ளை இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்கள், கொள்ளை யைத் தடுக்கவில்லை. துணை முதல்வராக மட்டுமல்ல, தாது மணல் கொள்ளைக்கு துணையாகவும் இருந்ததாக மக்கள் பேசுவது உங்கள் காதில் விழவில்லையா?போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியமனத்தில் ரேட்டுத்தான் வேறு வேறே தவிர, ‘ரேட்’ வைப்பது நிரந்தரமாய் இருப்பதை தொழிலாளர்கள் மட்டுமின்றி தமிழகமே அறியுமே!
இதுவெல்லாம் போகட்டும், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பெங்களூரு சிறைக்குப் போனார். உங்கள் குடும்பத்திலும், கட்சியிலும் திகார் சிறைக்குப் போய் வந்துள்ளனர். பெங்களூருவில் இருப்பது சிறை, திகாரில் இருப்பதென்ன சொகுசுப் பங்களாவா? ஊழலைப் பற்றி உங்களால் மனசாட்சி உறுத்தாமல் பேச முடியுமா? கொஞ்சமாவது மனசாட்சிக்கு உரைத்ததால்தானே, அதிமுகவின் பொதுச் செயலாளர் சிறைக்குப் போனபோது ஒரு வாரமும் அதற்கு மேலும், நீங்களும் உங்கள் தலைமையும் மௌனம் காத்தீர்கள்? எதில் நீங்கள் வேறுபட்டீர்கள்? ஊழலில் திமுகவும் அதிமுகவும் ஒன்றுதான், தலைமை மட்டுமே வேறு.
சமூக நீதி என்பது, திராவிடப் பாரம்பரியத்தின் ஆரம்பகாலக் கொள்கை. சேஷ சமுத்திரத்தில் தலித்துகள் வீடு எரிக்கப்பட்டபோது கண்டித்தீர்களா? பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபம் தெரிவித்தீர்களா? எங்கேனும் போராட்டம் நடத்திய துண்டா? இந்தப் பிரச்சனையில் நீங்கள் அதிமுகவுக்கு எந்த வகையில் மாற்று? அதிமுக மௌனம் காத்தது, நீங்கள் பேரமைதியல்லவா பூண்டிருந்தீர்கள்.
நமக்கு நாமே பயணம் போனீர்கள்? பட்டுச் சேலை கட்டிய பாட்டிகளிடம் குசலம் விசாரித்தீர்கள். கடலூருக்குச் சென்றபோது விஷ்ணுப்பிரியாவின் வீட்டிற்குப் போனீர்களா? வேஷத்திற்காகவேணும் துக்கம் விசாரித்தீரா? நாமக்கல்லும் போனீர்கள், எல்லாக் கல்லிடமும் குசலம் விசாரித்தீர்கள். மிகக் கவனமாக, கோகுல்ராஜ் வீட்டை மட்டும் விட்டுவிட்டு வந்துவிட்டீர்கள். எந்த வகையில் அதிமுகவுக்கு நீங்கள் மாற்று என்று தலித் மக்கள் கேட்க மாட்டார்களா?
கட்சியும், கொடியும் சின்னமும் வேறு வேறு என்பதைத் தவிர வேறுபடுத்திக் காட்டுவதற்கு வேறென்ன இருக்கிறது உங்களிடையே? அராஜக ஆட்சியை அதிமுக நடத்துகிறது. அந்த ஆட்சி ஒழிய வேண்டுமென மக்கள் விரும்பு கிறார்கள். அதை நிறைவேற்றத்தான் மக்கள் நலக் கூட்டணி களத்தில் நிற்கிறது. மக்கள் மனத்திலும் நிற்கிறது.
உங்கள் ஆட்சியில் ஜனநாயகம் பட்ட பாட்டினை நாடறியும், நாங்களும் பார்த்திருக்கிறோம். தொழிற்சங்கக் கொடியேற்றப் போன தோழர் சவுந்தரராசனை, கொலைகாரனைப் போல கைவிலங்கிட்டு இழுத்துவந்தீர் கள். ஜெயலலிதாவின் போலீசுக்கும், உங்கள் போலீசுக் கும் என்ன வித்தியாசமிருக்கிறது? தொழிலாளர் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களோடு நின்ற சுகுமாறனின் ஒரு கண்ணை உங்கள் போலீஸ் லத்தியால் குத்திக் கெடுத்தது. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல அத்தனையும் நடத்திவிட்டு, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்கிறீர்கள். மக்கள் இதனை நம்ப மாட் டார்கள். உலக முதலீட்டாளர் மாநாட்டை அதிமுக நடத்தினால், புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தீர்கள்.
கோரிக்கை நியாயமானது. மூடி மறைத்து நிற்கும் அதிமுகவின் நடைமுறை கேள்விக்குரியது. கேலிக்குரியது. ஜனநாயக விரோதமானது. இதே கேள்வியை உங்கள் அரசு இருந்தபோது சட்டமன்றத் திலும் மக்கள் மன்றத்திலும் உங்கள் முன் வைத்தோம். மறைப்பதற்கு ஏதுமில்லாவிட்டால், வெளியிட்டிருக்கலாமே நீங்கள்? புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மக்கள் புரிந்துகொள்ளாமல் மறைத்ததில் உங்களுக்கும் அதிமுகவிற்கும் என்ன வேறுபாடு? இரண்டு பேரிடமும் போராடிய, ஆட்சிக்கு வந்தால் அவற்றை வெளியிடு வோம் என்று சொல்கிற மக்கள் நலக் கூட்டணிதானே இரண்டு பேருக்கும் மாற்று? அதனை மறைக்கத்தானே பினாமிப் பாட்டுப் பாடுகிறீர்கள்?
எஸ்.வி.எஸ் கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்ம மரணமடைந்தார்கள். இப்போதும் அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கிறதா என்று பார்க்காத அதிமுக ஒரு குற்றவாளி; அனுமதி கொடுத்தபோது, எதையுமே பார்க்காமல் அனுமதி கொடுத்த திமுக ஆட்சியை போற்றிக் கொண்டாடவா செய்வார்கள்? இந்த ஊழலில், இந்த மரணத்தில் திமுகவும், அதிமுகவும் பங்காளிகள் என்பதை தமிழகம் அறியும். இப்படி, எதனையெடுத்தாலும் ஒரு கட்சி தன் முகத்தை கண்ணாடியில் பார்ப்பதுபோல திமுகவும் அதிமுகவும் வல – இட மாற்றம் தவிர்த்து எந்த மாறு பாடும் இல்லாத நீங்களிருவரும் ‘உனக்கு மாற்று நான், எனக்கு மாற்று நீ’ என்று இருதுருவ அரசியல் போல் தோற்றமளிக்கும், ஒரு துருவ அரசியலை நடத்திக் கொண்டேயிருக்கிறீர்கள். மக்கள் துரத்தியடிக்க வேண்டுமென முடிவு செய்திருக்கிறார்கள்.
அதற்கு மக்கள் நலக் கூட்டணி, மாற்றுக் கொள்கை யோடும், கரையற்ற கரங்களோடும் நெறிதவறா அரசிய லோடும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து வயிறெரிவதும், இருவரின் வாய்ப்பையும் பறித்துவிடுவார்களோ என்று பரிதவிப்பதும் உங்கள் உரிமை. அதனை யாரும் கேள்விகேட்க முடியாது.
ஆனால், மக்கள் நலக் கூட்டணியைப் பார்த்து அதிமுகவின் பினாமி என்று சொல்வது கொள்கை வாதத்திற்கு வழியில்லாமல், அவதூறு மூலம் எதிர்கொள்வதாகும். இதற்கு தமிழக மக்கள் வாக்குகளின் மூலம் பதில் சொல்வார்கள். ஊழலில் பங்காளியாக இருந்துகொண்டு, அடுத்தவர்கள் மீது சேறு வீசுவதை திருவாளர் மு.க.ஸ்டாலின் மட்டுமல்ல – திமுக, காங்கிரஸ் கூட்டணியின் தலைவர்கள் நிறுத்திக் கொள்வது உத்தமம். விவாதங்கள் கொள்கை அடிப்படையில் நடக்கட்டும்.
கனகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.
நன்றி: தீக்கதிர்.
அதிமுகவின் மணல் கொள்ளைக்கு மு.க. ஸ்டாலின் பினாமியா?: கனகராஜ் கேள்வி
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:24:00
Rating:
No comments: