வெற்றிபெறப்போவது யார்? - வி.களத்தூர் சனா பாரூக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் எப்போதும் நிகழாத பல்முனைப்போட்டி இத்தேர்தலில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 


அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி,  பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, அப்துல் கலாம் கட்சி, காந்திய மக்கள் கட்சி போன்ற இன்னும் பல கட்சிகள் இத்தேர்தலில் தனி தனியாக களம் காணும் முனைப்பில் இருக்கின்றன. இதில் சில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளதால், சில கட்சிகள் தங்கள் நிலையை மாற்றி ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் இந்த முறை குறைந்தது ஐந்து முனை போட்டி இருக்கும் எனத்தெரிகிறது. எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் இங்கு நிஜ யுத்தம் அதிமுக, திமுக விற்கும் மட்டும்தான். அவர்கள் மட்டும்தான் இங்கு அமைப்பு ரீதியாக இருக்கிறார்கள். அந்த இருகட்சிகளில் ஏதாவது ஒரு கட்சிதான் வெற்றி பெரும். 

மற்ற அனைத்து கட்சிகளும் வெற்றிபெற்று ஆட்சியமைக்க வாய்ப்பு இல்லையா என்றால், ஆம்! கண்டிப்பாக.  மற்றவர்கள் வெற்றிபெற்று ஆட்சியமைக்க சாத்தியம் இல்லை. ஆனால் அவர்கள்தான் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள் இத்தேர்தலில். அந்த அளவிற்கான குறிப்பிட்ட வாக்குகளை பெறுவார்கள் என்பது யதார்த்தமான நிலை.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தற்போதைய நிலை வரை அதிமுகவே முன்னிலை வகிக்கின்றது. எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து விடாமல் அதிமுக செய்த வேலைகள் வெற்றிபெற்று இருக்கின்றன. அது அதிமுகவின் முதல் வெற்றி. தமிழகத்தில் ஒவ்வொரு தேர்தல் வரும் முன்னும் கூடவே ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும் வந்துவிடும். அதனால்தான் அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. இந்த முறையும் ஆளும்கட்சிக்கு எதிரான மனநிலை பல மக்களிடமும் இருக்கின்றது.

ஆனால் அதை எதிர்கட்சிகள் சரியாக பயன்படுத்த தவறி வருவதால், ஆளுங்கட்சியான அதிமுக தனக்கு சாதகமாக மாற்ற முனைகிறது. ஒவ்வொருவரும் தங்களை முன்னிறுத்தி செயல்பட்டு வருவதால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால் அதிமுகவிற்கு வாய்ப்பு சற்று கூடுதலாக தெரிகிறது. 

இதுபோன்ற நிலைமைகளால் திமுகவிற்கு வாய்ப்பில்லை என்று சொல்ல முடியாது. அதிமுகவிற்கு எப்படி ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரிவது சாதகமாக அமைகின்றனவோ, அதேபோல திமுகவிற்கு எதிரான வாக்குகள் பிரிவது திமுகவிற்கு சாதகமாக இருக்கின்றன. தமிழகத்தில் நீண்டகாலமாக திமுக எதிர்ப்பு, கலைஞர் கருணாநிதி எதிர்ப்பு ஓரளவு இங்கு விதைக்கப்பட்டுள்ளது. தற்போதும் அந்த நிலை இருக்கிறது. வைகோ, தமிழருவி மணியன், பழ.நெடுமாறன், சீமான், பாஜக, விஜயகாந்த், ஆதிக்கக் சாதியினர் போன்று திமுகவை எதிர்ப்பதையே தங்கள் வாழ்நாள் கடமையாக கருதுபவர்கள் இருக்கிறார்கள். 

இவர்களின் வாக்குகள் எப்போதும் 'திமுக வரக்கூடாது' என்று அதிமுகவிற்கே செல்லும். அது தற்போது அதிமுகவிற்கு செல்ல வாய்ப்பு இல்லை. அவர்கள் அனைவரும் தனித்தனியாக களம் காண்பதால் அது திமுகவிற்கு சற்று சாதகமாக அமையும். 1996 சட்டமன்ற தேர்தலை போல் திமுக வேட்பாளர்களாக புதியவர்கள், இளைஞர்கள், எந்த பிரச்சனைகளிலும் சிக்காதவர்களை தேர்ந்தெடுத்து நிறுத்தினால் ஓரளவு வெற்றிபெறலாம். புதிய அணுகுமுறைகளும், பிரச்சாரங்களும் மேற்கொண்டால் பலன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வருகின்ற சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக, திமுக இரு கட்சிகளுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது. தங்களுக்கு சாதகமான சூழலை யார் சரியாக பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.

- வி.களத்தூர் சனா பாரூக்
வெற்றிபெறப்போவது யார்? - வி.களத்தூர் சனா பாரூக் வெற்றிபெறப்போவது யார்? -  வி.களத்தூர் சனா பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 03:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.