பணபலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்ப்பதுதான் பாஜகவின் புதிய பாணி: ராகுல் காந்தி தாக்கு
"பணபலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்ப்பதுதான் பாஜகவின் புதிய பாணி'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை குதிரை பேரத்தின் மூலமும், அப்பட்டமாக பணபலத்தின் மூலமும் கவிழ்ப்பதுதான், பாஜகவின் புதிய பாணியாகும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயகப் பாதையில் காங்கிரஸ் கட்சி போராடும்.
நமது ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு மீதான தாக்குதல் முதலில் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் ஆரம்பித்தது. தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் அந்தத் தாக்குதல் நடக்கிறது. இதுதான், (பிரதமர்) நரேந்திர மோடியின் பாஜகவுடைய உண்மையான முகமாகும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உத்தரகண்ட் அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோர் மீது காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தபோது, "பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், பணபலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தி ஆட்சியைக் கவிழ்க்கும் செயலில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளனர்' என்று குற்றம்சாட்டியிருந்தார்.
உத்தரகண்டை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத் தலைமையிலான அரசுக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 9 பேர் போர்க்கொடி உயர்த்தினர். சட்டப்பேரவையில் பட்ஜெட் மீது வாக்கெடுப்பு நடத்தக்கோரி பாஜக உறுப்பினர்களுடன் சேர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆளுநர் கே.கே. பாலைச் சந்தித்த பாஜக தலைவர்கள் ஆட்சியமைக்க தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் ஹரீஷ் ராவத்தை சட்டப்பேரவையில் வரும் 28ஆம் தேதிக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார்.
பணபலத்தை பயன்படுத்தி மாநில அரசுகளை கவிழ்ப்பதுதான் பாஜகவின் புதிய பாணி: ராகுல் காந்தி தாக்கு
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:00:00
Rating:
No comments: