விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே…
இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு என்று தெரிந்துகொண்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றக் ‘கனவான்களுக்கு’ என் நன்றி.
ஊடங்கள் அவர்களுடைய பிரைம் டைமில் ஜேஎன்யூவிற்கு இடம் கொடுத்தனர், ஜேஎன்யூவை அவதூறு செய்வதற்காக மட்டுமே.
எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. குறிப்பாக ஏபிவிபி மீது வெறுப்பு இல்லை. ஏனெனில், ஜேஎன்யூவில் இருக்கும் ஏபிவிபி அமைப்பு பல்கலைக்கழகத்திற்கு வெளியிலிருக்கும் அதன் சொந்தங்களைவிட அதிக தேசிய உணர்வு கொண்டிருக்கிறது. அரசியல் வித்தகர்களாக தங்களை முன்னிறுத்திக்கொள்பவர்களுக்க் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் சென்ற முறை ஏபிவிபியின் ‘மிகபுத்திசாலித்தனமான’ வேட்பாளரை நான் விவாதத்தில் எப்படி எதிர்கொண்டேன் என்று பாருங்கள். அப்போது தெரியும், நாட்டின் பிற பகுதிகளிலிருக்கும் ஏபிவிபி அமைப்புகளுக்கு என்ன நடக்குமென்று.
ஏபிவிபி மீது எனக்கு குரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. ஏனெனில், நாங்கள் உண்மையான ஜனநாயகவாதிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்புபவர்கள். அதனால்தான் நாங்கள் ஏபிவிபியை எதிரணியாகத்தான் பார்க்கிறோம். எதிரியாக அல்ல.
நண்பர்களே, உங்களை பழிவாங்கும் வேட்டையில் இறங்கமாட்டேன். அதற்கு உங்களுக்குத் தகுதியில்லை.
இந்தக்காலகட்டத்தில், ஜேஎன்யூ காட்டியிருக்கும் வழிக்காகவும், எது சரி, எது தவறு என்று எழுந்து நின்று சொன்னதற்காகவும், ஜேஎன்யூவிற்கு என் சல்யூட்! இது எல்லாமே தன்னெழுச்சியானது. நான் ஏன் இதைச்சொல்கிறேனென்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாமே திட்டமிடப்பட்டது. நம்முடைய செயல்கள் எல்லாம் தன்னெழுச்சியானது.
நான் இந்த நாட்டின் சட்டத்தை நம்புகிறேன். அதன் அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறேன். அதன் நீதி அமைப்பை நம்புகிறேன். மாற்றம் என்பது மட்டுமே உண்மை என்று நம்புகிறேன். அது வரும், வரவேண்டும் என்று நினைக்கிறோம். அதைக் கொண்டுவருவோம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சோஷலிஸத்திற்கு ஆதரவாக நிற்கிறோம். மதச்சார்பின்மைக்கு ஆதரவாக நிற்கிறோம். சமத்துவத்திற்காக நிற்கிறோம்.
எனக்கு சிறையில் நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கெனெவே படித்து அறிந்ததையெல்லாம் நான் அங்கு அனுபவத்தில் உணர்ந்தேன்.
ஜேஎன்யூவில் இருப்பவர்கள் நிறைய ஆராய்ச்சி செய்பவர்கள். ஆராய்ச்சிக்குத் தேவையான ஆரம்ப விவரங்களை என் அனுபவம் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் பார்வையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு கருத்து கூற விரும்பவில்லை. ட்விட்டரில் சத்யமேவ ஜெயதே என்று பிரதமர் ட்வீட் செய்தார். பிரதமருடன் எனக்கு தத்துவார்த்த வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்கிற வாசகம் அவர் உருவாக்கியதல்ல. அது நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. ஆகவே, வாய்மை வெல்லும் என்பதில் நான் அவருடன் உடன்படுகிறேன். வாய்மை வெல்லும்.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திற்கும் எல்லோருக்கும் ஒன்று சொல்வேன். தேசத்துரோகம் என்ற குற்றச்சாட்டு மாணவர்களுக்கு எதிரான அரசியல் கருவியாகப் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.
நான் ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன். அங்கிருக்கும் ரயில் நிலையத்தில் ஒரு மந்திரவாதி இருப்பார். மந்திர வித்தைகள் செய்வார். மோதிரங்களை விற்பார். அவற்றை அணிந்தால் உங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்பார். அதேபோல் நம் நாட்டில் கொள்கை வகுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கருப்புப்பணம் திரும்பவரும் என்று சொல்வார்கள். ஹர ஹர மோடி என்பார்கள். பணவீக்கம் குறையுமென்பார்கள். கூடி உழைத்தால் வளர்ச்சி வரும் என்பார்கள்.
மக்கள் இந்த கோஷங்களையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்தியர்களாகிய நாம் விரைவில் மறக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால் இந்த முறை நடத்தப்பட்ட நாடகம் மிகப்பெரியதாக இருந்ததால், நாம் இந்த கோஷங்களை மறக்க முடியவில்லை.
கொள்கைகளை உருவாக்குபவர்கள் நம்மை மறக்க வைக்க நினைக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்துவதன் மூலம் இதைச் செய்ய நினைக்கிறார்கள். மாணவர்கள் உதவித் தொகை தொடரவேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள் ரூ. 5000 ரூ. 10,000 மட்டும் தொடர்ந்து வழங்குவோம் என்று சொல்வார்கள். ஆனால் ஜேஎன்யூ உதவித்தொகையை உயர்த்தித் தருமாறு கேட்கும். அதற்காக உங்களைத் திட்டுவார்கள். கவலைப்பட வேண்டும். உதவித்தொகை என்பது நீங்கள் போராடிப்பெற்ற உரிமை.
இந்த நாட்டில் ஒரு மக்கள் விரோத அரசு இருக்கிறது. அதற்கு எதிராக நீங்கள் குரலெழுப்பினால் அதன் சைபர் செல்லிலிருந்து ஒரு சிதைக்கப்பட்ட வீடியோவை அனுப்புவார்கள். உங்களை வசைபாடுவார்கள். உங்கள் குப்பைத் தொட்டியிலிருக்கும் ஆணுறைகளை எண்ணுவார்கள்.
இது ஒரு உன்னதாமான காலம். ஜேஎன்யூ மீது நடத்தப்பட்டிருப்பது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ’யூஜிசி அலுவலகத்தை ஆக்கிரமிப்போம்’ என்ற முழக்கத்துடன் நடந்த போராட்டத்தை நியாமற்றதாகக் காட்ட அவர்கள் நினைக்கிறார்கள்…..ரோஹித் வேமுலாவிற்கு நீதி கோரும் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஜேஎன்யூ விவகாரத்தை தொலைக்காட்சியின் பிரதான நேரத்தில் ஒளிபரப்புகிறீர்கள். இது எதற்காக? முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களே, மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய்களைப் போடுவதாக மோடி அளித்த வாக்குறுதியை மக்கள் மறக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.
.
உங்களுக்கு ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன். ஜேஎன்யூவில் இடம் கிடைப்பது எளிதானதல்ல. ஜேஎன்யூவில் இருப்பவர்களுக்கு அதை மறைப்பதும் எளிதானதல்ல. நீங்கள் மறந்தால் நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருப்போம். அரசியல் அதிகாரத்திலிருக்கும் ஸ்தாபனம் வன்கொடுமைகள் செய்தபோதெல்லாம் ஜேஎன்யூ எழுந்து நின்று எதிர்த்திருக்கிறது. நாங்கள் இப்போது அதையேதான் செய்கிறோம். எல்லையில் உயிரிழக்கும் படைவீரர்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். நான் அந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.
ஆனால் மக்களவையில் இதைப் பேசிய பிஜேபி உறுப்பினர்களுக்கு ஒரு கேள்வி: இறந்த ராணுவ வீரர்கள் உங்கள் பிள்ளைகளா? லட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் விவாசாயிகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அவர்களில் பலர் இறந்துபோன வீரர்களின் தந்தையர் அல்லவா? வயல்வெளியில் வேலை செய்யும் விவசாயி என் தந்தை. எல்லையில் போராடும் வீரர் என் சகோதரர். எனவே, ஒரு தவறான விவாதத்தை இந்த நாட்டில் துவக்கி வைக்காதீர்கள். அந்த வீரர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு? இறந்தவர்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் போரிட வைப்பவர்கள்தாம் பொறுப்பு.
தொலைக்காட்சிகளின் பிரதான நேரத்தில் விவாதம் செய்பவர்களைக் கேட்கிறேன். இந்த நாட்டின் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டும் என்பது தவறா?
யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்று நம்மை கேட்கிறார்கள். நாங்கள் கேட்கிறோம். இந்தியாவில் யாராவது அடிமையா? இல்லை. அதனால் நாங்கள் இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை என்பது கண்கூடு. ஆனால் நாங்கள் இந்தியாவிற்குள் விடுதலை வேண்டும் என்கிறோம். இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.
நாங்கள் ஜனநாயத்தைப் பற்றிப் பேசுகிறோம். சமத்துவத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஏனெனில் அவை இந்த நாட்டில் இன்றியமையாதவை. நாங்கள் இந்த நாட்டில் என்ன விடுதலை வேண்டினாலும், அதனை இந்த நாட்டின் சட்டங்களுக்கும், நீதி அமைப்பிற்கும் உட்பட்டேதான் அடைவோம். இதுதான் பாபசாஹேபின் கனவு. இதுதான் என் தோழன் ரோஹித் வேமுலாவின் கனவு. நீங்களே பாருங்கள். இந்த இயக்கத்தை என்னதான் கடுமையாக அவர்கள் அடக்க முயற்சித்தாலும், அது பெரிதாக வளர்ந்து செழித்திருக்கிறது.
நான் வேறு ஒன்றையும் என் சிறை அனுபவத்திலிருந்து சொல்லவிரும்புகிறேன். இது சுயவிமர்சனம். மாணவர்களாகிய நீங்கள் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது அதை சிரத்தையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஜேஎன்யூ மாணவர்களாகிய நாம் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாது என்பதே அந்த விமர்சனம். பொதுமக்கள் அப்பாவிகள். எளிமையானவர்கள். அவர்களுடன் நாம் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.
வேறு ஒன்றும் இருக்கிறது. சிறையில் எனக்கு இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தார்கள். ஒன்றின் நிறம் நீலம். மற்றொன்று சிவப்பு. அந்தக் கிண்ணங்களைப் பார்த்தபோது, இந்த நாட்டில் நல்லது ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் அடுத்தடுத்து இருந்த கிண்ணங்களைத் தாங்கிய தட்டுதான் இந்தியா என்று என நான் உணர்ந்தேன். இந்த மாதிரி ஒரு ஒற்றுமை இந்தியாவில் ஏற்பட்டால், எல்லோருக்கும் சட்டம் பொதுவானது என்றானால். ஒவ்வொருவரின் உலகமும் மற்றவரின் நலனுக்கானது என்றானால்… அந்தக் கனவைத்தான் நாம் காணவேண்டும்.
மதிப்பிற்குரிய பிரதமர் (அவரை நான் அப்படித்தானே அழைக்க வேண்டும்?).. மதிப்பிற்குரிய பிரதமர் குருஷ்சேவைப் பற்றிப் பேசினார். நான் அவர் ஹிட்லர் அல்லது முசோலினியைப் பற்றிப் பேசவேண்டும் என்று கேட்டுக்கொள்வேன். நாம் சூரியனை நிலவு என்று ஆயிரம் முறை கூறினாலும் அது நிலவு ஆகாது. ஒரு பொய்யை பொய் என்றுதான் கூறமுடியும். ஒரு உண்மையை பொய்யாக்க முடியாது. அவர்களுக்கென்று ஒரு திட்டம் இருக்கிறது. அவர்களின் நலன்களுக்கேற்றவாறு அது மாறி வருகிறது.
ஜேஎன்யூ போராட்டத்தின் குரலை ஒடுக்க நினைப்பவர்களுக்கு ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். ஒடுக்குவதற்கு எந்த அளவு கடினமாக முயற்சிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அது வலுப்பெறும்.
இறுதியாக ஒன்று. இது ஒரு நெடிய போராட்டம். ரோஹித் வேமுலாவும், அவரைப்போலவே ஒரு சுதந்திரமான, சமத்துவ இந்தியாவைக் கனவு கண்டவர்களும் தொடங்கிய இந்த போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எந்தக் குறுக்கீடும் இன்றி. நாம் வெல்வோம். அதுதான் என் நம்பிக்கை!
விஜயசங்கர் ராமச்சந்திரன், ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர்.
விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே…
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:33:00
Rating:
No comments: