பீகாரில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை: நிதிஷ்குமார்
பாட்னா: பீகாரில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா, நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகாரில் மது விலக்கு வருகிற ஒன்றாம் தேதி முதல் தீவிரமாக அமல்படுத்தப்பட இருப்பதாகக் கூறினார். நடப்பு சட்டசபைக் கூட்டத் தொடரில், சாராயம் விற்பதை தடை செய்வதற்கான சட்ட மசோதாவை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சியதாக யாராவது பிடிபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். வரும் ஏப்ரல் 1 முதல் மதுவிலக்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உள்நாட்டில் தயாராகும் மது விற்பனை தடை செய்யப்படும்.
அதேநேரம், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானம் விற்பனைக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். தற்போது உள்நாட்டு மது உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாற்று தொழிலாக, அரசு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் சுதா டெய்ரி பொருள்களை விற்று வருவாய் ஈட்டுவதற்கு அரசு உதவும். மாநிலம் முழுவதும் குடிப்பழக்கத்தை கைவிட வலியுறுத்தி தீவிர பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப் படுகிறது. சுய உதவிக் குழுவினர் உள்ளிட்ட சுமார் 40 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று குடிப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி எடுத்துச் சொல்கின்றனர்.
மேலும் மாநிலத்தில் உள்ள 72 ஆயிரம் பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களிடம் உறுதி மொழிப்பத்திரம் கொடுத்து, அதில் மது அருந்த மாட்டோம் என பெற்றோரிடம் கையெழுத்து பெற்று வரும்படி கூறி இருக்கிறோம். இதுதவிர குடிப்பழக்கம் உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
போதை மறுவாழ்வு இல்லம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒன்றாவது இருக்க வழிவகை செய்யப்படும். உழைத்து சம்பாதிக்கும் பணத்தை கிராமத்தில் உள்ளவர்கள் குடிப்பதற்காக செலவிடுவதால் குடும்பமே சீரழியும் நிலை உள்ளது என்று நிதிஷ்குமார் தெரிவித்தார்.
பீகாரில் கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை: நிதிஷ்குமார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:43:00
Rating:
No comments: