ரூ.13,860 கோடி! தொழிலதிபர் மகேஷ் ஷா பணம் யாருடையது?
கணக்கில் வராத ரூ.13,860 கோடி பணத்தை தானாக முன்வந்து அரசுக்கு அறிவித்துவிட்டு தலைமறைவாகி இருந்தார் குஜராத் ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் ஷா. அவரைத் தீவிரமாக வருமான வரித்துறையினர் தேடிக்கொண்டிருந்தபோது தனியார் தொலைக்காட்சி திரையில் தோன்றினார் மகேஷ் ஷா. இதையடுத்து அவரைச் சனிக்கிழமை கைது செய்துள்ளனர் வருமான வரித்துறையினர்.
தொலைக்காட்சி பேட்டியும் கைதும்
தானாக முன்வந்து கருப்புப் பணத்தை அறிவிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்த திட்டத்தின்கீழ், குஜராத்தைச் சேர்ந்த மகேஷ் ஷா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் தன்னிடம் கணக்கில் காட்டாத, ரூ.13,860 கோடி சொத்து இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அகமதாபாத்திலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அவரது வீட்டிலிருந்து பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வரிமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே மகேஷ் ஷா தலைமறைவாகி விட்டார். அவரை வருமான வரித்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை மாலை அகமதாபாத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேட்டியளித்தார். அப்போது அவர், தன்னிடம் உள்ள பணம் தன்னுடையது அல்ல. அது பல அரசியல்வாதிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் சொந்தமானது. விரைவில் அவர்களின் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியிருக்கிறார். அப்போது அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்குள் சென்ற வருமான வரித்துறையினர் அவரை அதிரடியாக கைது செய்தனர்.
முன் வரலாறு
முன்னதாக கடந்த 2-3 வருடங்களாக வருட வருமானமாக ரூ.2 முதல் 3 லட்சம் வரையில் மட்டுமே கணக்கு காட்டி வந்துள்ளார் மகேஷ் ஷா. கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் மகேஷ் ஷா தொடர்பில் இல்லை என்று அவரது பார்ட்னரான 90 வயதுடைய சேத்னா தெரிவித்திருந்தார். மும்பை, புனே, குஜராத் ஆகிய இடங்களில் நில விற்பனைத் தொழிலில் மகேஷ் ஷா ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அவர் வெளியிட்ட பணத்துக்கான வரித்தொகை ரூ.1,560 கோடியை நவம்பர் 30ஆம் தேதி மகேஷ் ஷா கட்டினார். ஆனால் அவரது உத்தரவாத பத்திரத்தை வருமான வரித்துறையினர் நவம்பர் 28ஆம் தேதியே ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மகேஷ் ஷா வீடுகள் உள்ளிட்ட 67 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூபாய் 40 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.13,860 கோடி! தொழிலதிபர் மகேஷ் ஷா பணம் யாருடையது?
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:48:00
Rating:
No comments: