குருமூர்த்தியின் பில்லி சூனிய பொருளாதாரம்! - மோகன் குருசாமி


தமிழில்: ஜெ.ஜெயரஞ்சன்
குருமூர்த்தியின் பொருளாதாரத்தை ‘பில்லி சூனிய பொருளாதாரம்’ என்று அழைக்கப்படுவது ஏன் என்றால், உண்மையான பொருளாதாரப் பாடமும் புள்ளிவிவரங்களும் மாற்றுக் கதையை உணர்த்துவதால்தான். ‘பில்லி சூனிய பொருளாதாரம்’ என்ற சொற்றொடர் நம் மொழி வழக்கில் ‘டுபாக்கூர்’ எனப் பரவலாக அன்றாடம் நாம் பயன்படுத்தும் சொற்றொடர் குறிக்கும் பொருளைத் தரவல்லது. இந்த சொற்றொடர், முதன்முதலில் பரவலாக பயன்படுத்தப்படத் தொடங்கியது அமெரிக்காவில்தான். அங்கு நடந்த அதிபர் தேர்தல் ஒன்றில் ரொனால்டு ரீகனுக்கும் ஜார்ஜ் புஷ் மூத்தவருக்கும் நடந்த போட்டியின்போது இச் சொற்றொடர் பரவலாக அறியப்பட்டது. புஷ், தனது பிரச்சாரத்தின்போது ரீகனின் பொருளாதாரக் கொள்கைகளை கேவலமாக விமர்சிக்க இச் சொற்றொடரை பயன்படுத்தினார். இது நடந்தது 1980களில்தான்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘பொருளாதார நிபுணர்’ என்று அறியப்படும் S.குருமூர்த்தி, தன்னுடைய சக ஆர்.எஸ்.எஸ். ‘பிராசராக்’ என்று அழைக்கப்படும் தலைமை அமைச்சர் மோடியின் மதிப்பிழப்பு அறிவிப்பை ஆதரிக்கும்முறை ‘பில்லி சூனிய’ பொருளாதாரத்தை ஒத்ததாக இருப்பதால் அந்த சொற்றொடர், இந்தியாவின் தற்போதைய நிலைக்கு மிகவும் பொருந்திவிடுகிறது.
இதை விளக்குவதற்குமுன் எனது நிலைப்பாட்டை தெளிவாக்குகிறேன். நான் மன்மோகன் சிங்கின் ஆதரவாளன் அல்ல. எப்போதும் இருந்ததும் இல்லை. மன்மோகனை ஆதரிக்க இயலாததற்கு முதலில் அவர் ‘தாராளமயம்’ என்றால் என்ன என்ற, ஒருங்கிணைந்த ஒரு கருத்தாக்கத்தை என்றும் முன்வைத்ததில்லை. குறிப்பாக, உண்மையான ஒரு ‘தாராளமய’ பொருளாதாரம் எப்படி இயங்க வேண்டும் என்பதன் கூறுகளை என்றும் உச்சரித்தது இல்லை.
அவரின் தாராளமயம் என்பது ‘தொழில் தொடங்குவதற்கான உரிமம்’ என்ற அரசின் பிடியை தளர்த்துவது என்பதாகச் சுருங்கிவிட்டது. அப்படிப்பட்ட கொள்கையால் எவ்வளவு தீங்கு விளையும் என்பதற்கான சான்றுகள் குவிந்தபோதும் மன்மோகன் சிங், தனது நம்பிக்கையை தளர்த்திக் கொள்ளவில்லை. மாறாக, பிடிவாதமாக அதையே செயல்படுத்தினார்.
மேலும் அந்நிய முதலீட்டில் உள்ள இரண்டு வகைகளுக்குள் நிலவும் வேறுபாட்டையும் அவர் கணக்கில் கொள்ளவில்லை. ஒரு வகை அந்நிய முதலீடு, நமது நாட்டின் பங்குச் சந்தைக்கு வந்து இலாபம் பார்த்துவிட்டு வெளியேறிவிடும். இதனால் நமது பொருளாதாரத்துக்கு எந்தப் பயனும் விளையாது. மாறாக, உள்நாட்டு உற்பத்திக்கென வரும் அந்நிய முதலீடுகள் நமது நாட்டின் பல தேவைகளை ஈடுசெய்யவல்லது. இத்தகைய முதலீடுகள் வருவதற்குப் பதிலாக, குறுகிய கால லாபத்தை கணக்கில்கொண்ட முதலீடுகள்தான் அவர் காலத்தில் கூடுதலாக வந்து சென்றன.
மன்மோகன் சிங், மேலும் ஒரு கொள்கையை பின்பற்றினார். தனது அமைச்சர்களின் தவறுகளைக் கண்டும் பேரமைதி காத்தார். அவரது வழிகாட்டுதல்களை அவரது அமைச்சர்கள் மீறியபோதும் இந்த அமைதி தொடர்ந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு, தேவைக்கதிகமாகவே அவர் பணிந்துபோனார். தலைமையின் எது சரி, எது தவறு என்ற முடிவுகள் அனைத்தும் அக்குடும்பத்தின் நலன்களை ஒட்டியே தீர்மானிக்கப்பட்டன.
இவையனைத்தும் உண்மை என்றபோதும், அவரது ஆட்சிக் காலத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக ஆண்டொன்றுக்கு 7.8 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்தது. இரண்டு ஆண்டுகள் 10 விழுக்காட்டிற்கு மேலாகவும், இரண்டு ஆண்டுகள் 9 விழுக்காட்டிற்கு மேலாகவும், இரண்டு ஆண்டுகள் 8 விழுக்காட்டிலும் வளர்ந்ததை உள்ளடக்கியதுதான் இவரது ஆட்சிக் காலம். அந்த ஆட்சியின்மீது மக்கள் நம்பிக்கையை இழக்கத் தொடங்கிய ஆண்டுகளில்கூட 4 மற்றும் 5.9 விழுக்காடு என்ற விகிதத்திலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்தது. இந்திய வளர்ச்சி வரலாற்றில் பொன்னான காலம் என்றால் அது, அவரது ஆட்சிக் காலம்தான். மோடியின், கடந்த இரண்டு ஆண்டுகால ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, மன்மோகன் ஆட்சிக் காலத்தில் மோசமான வளர்ச்சிகண்ட ஆண்டுகளைவிட இது குறைவுதான். (தற்போது வளர்ச்சி விகிதத்தில் கணக்கிடும் முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை கணக்கில்கொண்டால்)
மேலும் கடந்த இரண்டு ஆண்டு மோடியின் ஆட்சிக் காலத்தில் நாட்டில் வேலைவாய்ப்புகளின் வளர்ச்சி விகிதம் பூஜ்யம். ஆனால் மோடியோ, தான் 31 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிவிட்டதாகக் கூறுகிறார்.
கற்பனைக் கதைகள்:
மோடி இவ்வாறு கூறுவது எதன் அடிப்படையில்? அவர் 3.1 கோடி முத்ரா கடன்கள் வழங்கியதால் இந்த வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாம். இதுவொரு பச்சைப் பொய். முத்ரா கடனின் சராசரி அளவு ரூ.1000 மட்டுமே. ரூ.1000 முத்ரா கடன் பெற்ற ஒருவர், ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கியதாகக் கூறும் மோடியின் கூற்றை வாதத்துக்காக ஏற்றுக்கொள்வோம். நாட்டில், இன்று 100 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் வேலையின்மை என்பதையே அடியோடு வீழ்த்திவிடலாம். அதற்கு ஆகும் செலவு வெறும் ரூ. ஒரு லட்சம் கோடி மட்டுமே.
இதுபோன்ற கட்டுக்கதைகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிராசராக்குகள் மட்டுமே உருவாக்கி உலவவிட முடியும். அதுமட்டுமல்ல; கட்டுக்கதைகளை உருவாக்குவது ஒருபுறம். பச்சைப்பொய்களை சொல்வதற்கு கூசுவதும் இல்லை.
குருமூர்த்தி, சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 600 லட்சம் வேலைவாய்ப்புகள் ஐந்து ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டன எனத் தெரிவிக்கிறார். நேர்மாறாக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மொத்தமாகவே 27 லட்சம் வேலைகள்தான் உருவானதாம். ஆனால் Economic Census என்ன கூறுகிறது? ‘2005-2013 காலகட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆண்டுக்கு 3.2 விழுக்காடு என்ற அளவில் வளர்ந்தது. ஆனால் 1998-2005ஆம் ஆண்டுகளில் இது வளர்ந்த வேகம் 2.78 விழுக்காடு’ என்று தெரிவிக்கிறது.
2006-2014 காலகட்டத்தில்தான், கடந்த 20 ஆண்டுகளிலேயே அதிகமான வேலைவாய்ப்பும் பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட்டன. 13 கோடிப்பேர் வேலையில் இருந்தனர். 1.92 கோடி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வேளாண் அல்லாத தொழில்கள் அமைப்புசாரா துறையில் காணப்படுகின்றன. உற்பத்தி, கட்டடம் மற்றும் வணிகம் ஆகிய துறைகள்தான் அமைப்புசாரா துறையில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஐ.மு.கூ. ஆட்சிக் காலத்தில் இந்தத் துறைகள்தான் அசுர வளர்ச்சி கண்டன. உற்பத்தித் துறையில்தான் விரைவான வேலைவாய்ப்பு பெருகிற்று. சில்லறை வர்த்தகமும் அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்கியது. இதை காங்கிரஸ் கட்சியும், அதன் ஆதரவாளர்களும் மக்களுக்கு விளக்கட்டும்.
குருமூர்த்தியின் கூற்று, பில்லி சூனிய பொருளாதாரத்தை சார்ந்தது எனக் கூறுவது ஏன் என்பதை விளக்குகிறேன். மன்மோகன் ஆட்சிக்கால வேகமான வளர்ச்சி என்பது உற்பத்தி அதிகரிப்பால் நிகழ்ந்தது அல்ல. சொத்துகளின் விலையேற்றத்தால் நிகழ்ந்தது என்பதுதான் குருமூர்த்தியின் வாதம். இதுவொரு பரம ரகசியமாம். அதை அவர் வெளியே கூறுகிறாராம்.
முதலில், பொருளாதார வளர்ச்சி எவ்வாறு கணக்கிடப்படுகிறது எனக் காண்போம். நாட்டின் மொத்த உற்பத்தியை (GDP) கணக்கிட்டு அதை, பணவீக்க அளவுக்கு சரி செய்தால் வளர்ச்சி விகிதத்தை கண்டுபிடிக்கலாம். சொத்துகளின் விலையேற்றம் என்பது பங்குகள், கடன் பத்திரங்கள், இன்னபிற நிதிசார்ந்த முதலீடுகள் நிலம் மற்றும் பிற சொத்துகளில் ஏற்படும் விலையேற்றத்தைக் குறிக்கும். GDPஐ கணக்கிடும்போது, சொத்துகளில் ஏற்படும் விலையேற்றத்தை கணக்கில் கொள்வதில்லை. ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளின் மதிப்பின் கூட்டுத்தொகை மட்டுமே GDP ஆகும். உண்மையான GDP (Real GDP) ஐ கணக்கிடும்போது விலையேற்றத்தைக் கூட எடுத்துக் கொள்வதில்லை. இதுதான், பொருளாதாரம் பயில்பவர்களின் பால பாடம். இதை குருமூர்த்தி புறம்தள்ளுவது தெளிவு.
குருமூர்த்தியைப் பொருத்தவரை, GDP அதிகமாக வளர நாட்டில் புழங்கும் பணம் அதிகமானதுதான் காரணமாம். வளரும் பொருளாதாரத்துக்கு புழக்கத்திலுள்ள பணத்தின் அளவு அதிகரிக்க வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை இயக்குவது பணம். இந்நாட்டில் வழங்கப்படும் சம்பளத்தில் 40 விழுக்காடு அன்றாடக் கூலியாக பணத்தில் வழங்கப்படுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் உறைந்த பொருளாதாரமும் பெரும் வேலையிழப்பும் அவருக்கு இந்த உண்மையை உணர்த்தும்.
இதில் மிகப்பெரிய அவலம் என்பது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தபின்தான், ஆப்பசைத்த கதை புரியப்போவதுதான்.
குருமூர்த்தி, முதலில் பால் சாமுவேல்சன் என்ற மேதை எழுதிய ‘Economics’ என்ற பொருளாதார அறிமுக நூலை படிக்கத் தொடங்கட்டும். இந்த நூல்தான் இன்றுவரை எழுதப்பட்டுள்ள பொருளாதார அறிமுக நூலிலேயே ஆகச்சிறந்த நூலாகும். அந்நூலில் கூறப்படாத பொருளாதாரம் என்பது இல்லை என்பதை அவருக்கு ஆலோசனையாக நான் கூறுவேன்.
பழைய தந்திரம்:
நாட்டில் எவ்வாறு முதலீட்டை அதிகரித்து வளர்ச்சியடைவது என்பதை விவாதிக்க ஒரு கூட்டம் ஹைதராபாத் நகரில் 1991ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் நானும் குருமூர்த்தியும் பங்கு பெற்றோம்.
விரைவான தொழில் வளர்ச்சி பெற அந்நிய முதலீடுகள் வர வேண்டும் என நான், எனது கருத்தை முன்வைத்தேன். சீனம் அதைத்தான் செய்கிறது. அப்படிப்பட்ட முதலீடு நிகழும்போது புதிய தொழில்நுட்பம் மற்றும் அந்நியச் சந்தைகளும் நமக்குக் கிடைக்கும் என கூறினேன். தற்போது, இந்தியாவுக்கு ஃபோர்டு, சுசுகி மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் வந்ததுபோல.
நமது நாட்டுக்குத் தேவையான தொழில்நுட்பங்கள் அனைத்தும் பண்டைய காலத்திலிருந்தே நம்மிடம் உள்ளது எனவும், அதிலிருந்து நாம் வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம் எனவும் குருமூர்த்தி கூறினார். மேலும் நமது நாட்டுக்குத் தேவையான முதலீடுகளை இந்திய மக்களிடம் குவிந்துள்ள பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தங்கத்திலிருந்து பெறலாம் எனவும் கூறினார். மேலும் அந்நிய முதலீடு மற்றும் அந்நிய தொழில்நுட்பம் வேண்டும் எனக் கூறுவோர் அனைவரும் அந்நியர்களின் முகவர்கள் என மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்தினார்.
பண மதிப்பின்மையை எதிர்ப்போர் அனைவரையும் கேவலப்படுத்துவதை குருமூர்த்தி தொடர்கிறார். இதே முறையை, அவரது கூட்டுச் சதிகாரரான அருண் ஜெட்லியும் செய்து வருகிறார்.
குருமூர்த்தியின் பில்லி சூனிய பொருளாதாரம்! - மோகன் குருசாமி குருமூர்த்தியின் பில்லி சூனிய பொருளாதாரம்! - மோகன் குருசாமி Reviewed by நமதூர் செய்திகள் on 23:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.