தேர்தல் வர இருக்கும் உத்திர பிரதேசத்தில் உட்புகுந்த ₹5000 கோடி?
500, 1000 தடைக்குப் பின் நாடெங்கும் நிலவி வரும் பணத்தட்டுப்பாடு தீராத நிலையில் சமீபகாலமாக விரைவில் தேர்தல் வர இருக்கும் உத்திர பிரதேசத்தில் பணப்புழக்கம் அதிகமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து உத்திரபிரதேச பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ஏறத்தாழ ₹1650 கோடி தங்கள் பகுதிக்கு வந்துள்ளதாகவும் தற்போது வங்கிகள் மக்கள் பணம் எடுக்கும் அளவை ₹50000 வரை உயர்தியுள்ளதாகவும் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்ற செய்திகள் அப்பகுதி முழுவதும் பேசப்படுகிறது.
உத்திர பிரதேசத்தில் ஏற்ப்பட்டுள்ள இந்த பண வரத்தை குறித்து செய்தி வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம் ஒன்று, ₹5000 கோடிகளை ரிசர்வ் வங்கி சிறப்பு விமானம் மூலம் உத்திரபிரதேசத்திற்கு அனுப்பியதாக செய்தி வெளியிட்டிருந்தது.
இது குறித்து RBI யிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஓவ்வொரு மாநிலங்களுக்கும் தாங்கள் எவ்வளவு பணம் அனுப்பி வைகின்றோம் என்பது போன்ற தகவல்களை தங்களால் வெளியிட முடியாது என்று கூறியுள்ளது. இருப்பினும் இந்த செய்தி உண்மையெனில் ரிசர்வ் வங்கியின் இந்த செயலில் அரசியல் கலந்திருப்பதை நன்கு உணர முடிகிறது.
ஆனால் இதனை உறுதி படுத்தும் விதமாக உத்திரபிரதேஷ பா.ஜ.க. தலைவர்களின் கருத்துக்களும் உள்ளன. உத்திர பிரதேசத்தின் ஃபைசாபாத் பகுதியை சேர்ந்த லல்லு சிங் என்ற பா.ஜ.க. அமைச்சர், தங்கள் கட்சி தலைவரான அமித் ஷா தங்களை சந்தித்து தங்களிடம் இருந்து கருத்துக்களை பெற்றுச் சென்றுள்ளதாகவும், அவரிடம் பணத்தட்டுப்பாட்டால் ஏற்ப்பட்டுள்ள மக்களின் குறைகளை தீர்க்குமாறு தாங்கள் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் கோரிக்கை ஏற்ற அமித் ஷா, விரைவில் அவர்களது பகுதிக்கு பணம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறியதாகவும் அதற்கான எல்லா முன் ஏற்ப்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன என்றும் கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பணப்புழக்கம் அதிகரிப்பு பற்றிய செய்தி குறித்த கள நிலவரம் இரு விதமாக உள்ளது. கிழக்கு உ.பி.யில் உள்ள கோரக்பூர் பகுதியின் அருகே இருக்கும் கவ்டியா கிராமத்தில் பெண்கள் அதிகாலை 4 மணி முதலே ஸ்டேட் வங்கியின் முன் வரிசையில் காத்துக்கிடப்பதாகவும் மதியம் ஆகியும் வரிசை நகர்ந்தபாடில்லை என்றும் கூறியுள்ளனர். மற்றொரு பெண், தன்னை வங்கி அதிகாரி ஒருவர் கழுத்தை பிடித்து கீழே தள்ளியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் வேறு சிலரோ கடந்த சில நாட்களில் நிலைமை சற்று சீரடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் தங்களால் முழு அளவில் பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
உத்திர பிரதேசத்தில் தற்போது கூறப்படும் பணவரத்து மக்களின் கோபங்களை சற்று தணிப்பதற்காக பரப்பப்படும் புரளியா அல்லது தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க அரசு உத்திர பிரதேசத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கிறதா என்பது உறுதியாக தெரியவில்லை. நாட்டில் பிற பகுதிகளில் பணத்தட்டுப்பாடு நிலவ உத்திர பிரதேசத்திற்கு மட்டும் அரசு பணவரத்தை அதிகரிக்குமானால் அது பா.ஜ.க வின் பண அரசியலுக்கு ரிசர்வ் வங்கியும் உடன்படுவது போலாகிவிடும்.
தேர்தல் வர இருக்கும் உத்திர பிரதேசத்தில் உட்புகுந்த ₹5000 கோடி?
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:03:00
Rating: 5
No comments: