பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் ஏன் சோதனை இல்லை?; ஜவாஹிருல்லா கேள்வி!
சென்னை(22 டிச 2016): தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை ஏன் பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் நடத்தப்படவில்லை என்று மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழக தலைமைச் செயலாளர் திரு. ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆந்திரா, கர்நாடகா உட்பட 13 இடங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்வதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை நாம் குறைக்காண இயலாது.
ஆனால் ஒரு மாநில முதலமைச்சருக்கோ, மாநில உள்துறை செயலாளருக்கோ தெரிவிக்காமல், தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக அரசின் தலைமை செயலாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படுவது அப்பட்டமான கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் செயலாகும். மோடி தலைமையிலான மத்திய அரசின் இதுபோன்ற செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஊழலை ஒழிக்கவே இதுபோன்ற சோதனைகள் என்றால், மாநில அரசிற்கு தெரிவித்த பின்பு அவரை அப்பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க அறிவுறுத்திவிட்டு இது போன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்க வேண்டும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசு, மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் ஊழலில் சம்பந்தப்பட்ட அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வீட்டிலோ, அலுவலகத்திலோ வருமான வரி சோதனை நடத்தப்படாதது ஏன்? 40 பேர் உயிர் பலிக்கு காரணமான சிவராஜ் சிங் சவுகான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் அண்மையில் பிரம்மாண்டமாக நடந்தது. அத்திருமணத்துக்கு ரூ.650 கோடி செலவழிக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில், தன் மகளின் திருமணத்துக்காக ரூ.100 கோடி கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ஜனார்த்தன ரெட்டியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இதுபோன்று தமிழகத்தில் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் கோடிக்கணக்கில் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் அதுகுறித்து யார் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடத்தாதது ஏன்?
தற்போது தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் நடைபெற்று வரும் இந்த வருமானவரித்துறை சோதனை அதனையும் தாண்டி தலைமைச் செயலகம் வரை நீண்டிருப்பது ஏதோ உள்நோக்கத்துடன் நடைபெறும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
மேலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறும் தமிழக அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் குவிக்கப்பட்டு இருக்கும் துணை ராணுவ படையினர் மாநில அரசின் அனுமதியின் பெயரில் வரவழைக்கப்பட்டுள்ளனரா என்பதை மத்திய அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
மத்திய அரசின் இதுபோன்ற நெறிமுறையற்ற செயல் மத்திய மாநில அரசுகளின் இடையே இருக்கும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் நடவடிக்கையாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க.ஆளும் மாநிலங்களில் ஏன் சோதனை இல்லை?; ஜவாஹிருல்லா கேள்வி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:41:00
Rating:
No comments: