‘ஜெ’: போயஸ் - அப்பல்லோ - எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை!
ஜெயலலிதா பற்றிய நினைவைப் போற்றுகிற அனைவருமே அவரது மன வலிமையையும் போராட்ட வாழ்வையுமே சிறப்பாக பதிவு செய்கிறார்கள். அது உண்மையும்கூட. ஆனால் செப்டர்ம்பர் 22ஆம் தேதி அன்று அவர் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோது தன் உடல் நோயில் இருந்து அவர் போராடி வருவார் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால், நோயோடு போராடி இறந்த ஜெயலலிதாவின் கடந்த அந்த 75 நாட்கள், தமிழக அரசியலில் மறக்க முடியாத நாட்கள்.
செப்டம்பர் 22 -
சென்னை அப்போலோ மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இரவு 11 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது வெளியிடப்பட்ட அப்பல்லோ அறிக்கையில் ‘உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவக் கவனிப்பில் உள்ளார்’ என்று தெரிவித்தது அந்த அறிக்கை.
செப்டம்பர் 24 -
‘வழக்கமாக உட்கொள்ளும் உணவுகளை எடுத்துக் கொள்கிறார் முதல்வர்’ என்றது அப்பல்லோ அறிக்கை. பிரதமர் மோடி, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் முதல்வர் நலம் பெற வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
செப்டம்பர் 25 -
ஜெயலலிதா சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்லப்படுகிறார் என்ற செய்தி தீயாகப் பரவியது. சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவிய இந்தச் செய்தியை மறுத்த அப்பல்லோ, ‘இன்னும் சில நாட்களில் வீடு திரும்பி தன் வழக்கமான பணிகளில் ஈடுபடுவார் முதல்வர்’ என்றது.
செப்டம்பர் 29 -
‘ஜெயலலிதா சிகிச்சைக்கு நன்கு இசைவளிக்கிறார். மேலும், சிகிச்சைக்காக சில நாட்கள் மருத்துவமனையில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்’ என மருத்துவமனையில் இருந்து அறிக்கை வெளியானது.
அக்டோபர் 1 -
ஆனாலும், வதந்திகள் ஓயவில்லை. அக்டோபர் 1ஆம் தேதி முதல்வர் உடல்நிலை தொடர்பாக பரவிய வதந்தியை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி, ‘முதலமைச்சர் ஆரோக்கியமாக இருக்கிறார். மருத்துவமனையில் இருந்தபடியே அலுவலகக் கடமைகளை செய்கிறார்’ என்று கூறினார்.
அக்டோபர் 2 -
‘முதல்வருக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. நோய் தொற்றை சரி செய்ய மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன’ என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது. லண்டனின் கைய்ஸ் அண்ட் செயிண்ட் தாமஸ் மருத்துவமனை நிபுணரான ரிச்சர்ட் பேலை ஜெயலலிதா சிகிச்சைக்காக வரவழைத்தது அப்பல்லோ.
அக்டோபர் 6 -
டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் கில்நானி தலைமையிலான மருத்துவர்கள் குழு ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக வந்தது.
அக்டோபர் 7 -
முதலமைச்சரின் உடல்நலம் குறித்து அப்போலோ மருத்துவமனை விரிவான அறிக்கை வெளியிட்டது. ‘தற்போதைய சிகிச்சையில் தொடர்ந்து சுவாச உதவி அளிக்கப்படுகிறது. நுரையீரலைக் குணப்படுத்த மருந்துகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டிபயாட்டிக், சத்துகள் என சிகிச்சை வழங்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டது அடுத்த அறிக்கை.
அக்டோபர் 10 -
அப்பல்லோ வெளியிட்ட அறிக்கையில், தேவையான சுவாச உதவிகள், ஆண்டிபயாடிக் மருந்துகள், சத்துகள், பிசியோதெரபி ஆகியவை அளிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அக்டோபர் 21 -
ஜெயலலிதா எழுந்து அமர்கிறார், பகல் வேளையில் தூக்க மருந்து கொடுக்கப்படவில்லை என செய்தி வெளியானது. அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட பெரும் முன்னேற்றமாக இது இருந்தது.
நவம்பர் 3 -
அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி, ‘ஜெயலலிதா முழுமையாக குணமாகிவிட்டார். தன்னைச் சுற்றி நடப்பதை அறிந்து கொள்கிறார்’ என்று தெரிவித்தார். அவர் எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பதை அவரே முடிவு செய்வார்.
நவம்பர் 13 -
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐம்பது நாட்களுக்கு மேலானது. ‘தான் மறுபிறவி எடுத்திருப்பதாகவும், வழக்கமான அலுவலக வேலைகளைச் செய்ய காத்திருப்பதாகவும்’ அவர் கையெழுத்திட்ட கடிதம் கூறியது.
நவம்பர் 19 -
‘தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதா அதே மாடியில் இருந்த சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியில்லாமலேயே நலமாக இருக்கிறார். அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என்றார் அப்பல்லோ தலைமை நிர்வாகி பிரதாப் ரெட்டி.
நவம்பர் 25 -
செயற்கை சுவாசம் இன்றி ஜெயலலிதா நார்மலாக இருப்பதாக அதிமுக பிரமுகர்கள் கூறினார்கள்.
டிசம்பர் 4 -
முதல்வர் மிக இயல்பாக இருக்கிறார். வழக்கமான உணவுகளை உடகொள்கிறார். வெகு விரைவில் வீடு திரும்புவார். எய்ம்ஸ் நிபுணர் குழு, முதலமைச்சர் குணமாகிவிட்டார்’ என்று உறுதியளித்ததை தொடர்ந்தே அதிமுக இவ்வாறு தெரிவித்ததாக சொல்லப்பட்டது.
தொடர்ந்து, மாலை 5:30 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அப்பல்லோவும் உறுதிப்படுத்தியது.
டிசம்பர் 5 -
இரவு 11:30 அவர் இறந்ததாக அப்பல்லோ அறிவித்தது. ஆனால், அதற்கு முன்பாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவிவேற்று கொண்டிருந்தார் ஆளுநர் மாளிகையில்.
டிசம்பர் 6 -
ஏற்கனவே மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்ட திட்டங்களின்படி உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா - முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
‘ஜெ’: போயஸ் - அப்பல்லோ - எம்.ஜி.ஆர். நினைவிடம் வரை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:16:00
Rating:
No comments: