குஜராத்தை குறி வைக்கும் ராகுல்! பிரதமர் மாநிலத்துக்கான காங்கிரஸின் வியூகம்

ராகுல்
ந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்-களிலும் காத்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் வேரூன்ற ராகுல் காந்தி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்..
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று அம்மாநிலத்தின் மேஷானா மாவட்டத்தில் நடைபெறும் பிரமாண்ட பேரணியில் உரையாற்றினார்.
மேஷானா மாவட்டத்தில், பதிதார் பிரிவினர் இட ஒதுக்கீடு கோரி, மாநிலத்தில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது, அந்த மாவட்டத்தில் ராகுல், பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குஜராத்தில் 1,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு அடுத்தவாரம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுலின் இன்றைய பொதுக்கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
குஜராத்தில் ஆளும் பி.ஜே.பி-யின் முக்கிய வாக்குவங்கியாகத் திகழ்வது பதிதார் பிரிவினர்.  அரசுப் பணி மற்றும் கல்லூரிகளில் தங்களுக்கு இட ஒதுக்கீடு கோரி, கடந்த ஆண்டு இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், பி.ஜே.பி பின்னடைவைச் சந்தித்தது. 
என்றாலும், ராகுலைப் பொறுத்தவரை இந்த இடஒதுக்கீடு குறித்து பெரிய அளவில் தனது உரையில் குறிப்பிடாமல், உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மோடியின் அறிவிப்பால் எழுந்துள்ள பாதிப்புகள், விவசாயிகள் பிரச்னைகளை மட்டுமே பேச முடிவு செய்துள்ளார். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், மக்களிடையே மிகப்பெரிய பணத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்ட முடிவு செய்துள்ளார்.
ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் தன்னை பேச எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை என்று பிரதமர், கடந்த 2 வாரங்களுக்கு முன் குஜராத்தில் பேசுகையில் குறைகூறினார்.ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பாக காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கும் அவர் கடும் விமர்சனம் செய்தார். 
மேஷானாவைப் பொறுத்தவரை, மோடியின் சொந்த மாவட்டமாகும். இந்த மாவட்டம் உள்பட படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் 5 மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரும் செல்வாக்கு கடந்த ஓராண்டில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ராகுல் காந்தி, இந்த மாவட்டத்தில் தனது பேரணியைத் தொடங்குவது என்று முடிவு செய்தார்.
வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பி.ஜே.பி செயலாற்றி வருகிறது. காங்கிரசின் கணக்கோ வேறுவிதமாக உள்ளது. 
அடுத்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் என்ற நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரை ஒருங்கிணைக்கும் வகையில், ராகுல் காந்தி, இந்த மாவட்டத்தை தேர்ந்தெடுத்து தனது பேரணியை நடத்தவுள்ளார். மோடியின் சொந்த மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை முதலில் பெருக்கிக் கொண்டால், அதை வைத்து,  மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை தானாகவே வளர்த்துக் கொள்ளலாம் என்பதே ராகுலின் கணக்கு. ஆனாலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குஜராத்தை குறி வைக்கும் ராகுல்! பிரதமர் மாநிலத்துக்கான காங்கிரஸின் வியூகம் குஜராத்தை குறி வைக்கும் ராகுல்! பிரதமர் மாநிலத்துக்கான காங்கிரஸின் வியூகம் Reviewed by நமதூர் செய்திகள் on 05:16:00 Rating: 5

No comments:

Powered by Blogger.