காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ள டாக்டர் கில்பர்ட்
மாட்ஸ் கில்பர்ட் நார்வே நாட்டு மருத்துவர். அவசரகால மருத்துவத்தில் சிறப்பு பெற்ற இவர் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் நடைபெற்ற போற்குற்றங்களை வெளியிட்டுள்ளார்.
69 வயதான இவர் துருக்கியின் அனடொலு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பலகீனமானவர்களுக்கும் தேவையுடையவர்களுக்கும் தான் உதவ முடிவு செய்துள்ளதாகவும் அதனால் நாடு விட்டு நாடு வந்து ஃபலஸ்தீன மக்களுக்கு உதவுவதாக தெரிவித்திருந்தார். மேலும் அவர் 1982 ஆம் ஆண்டு ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது பெய்ரூட்டில் உள்ள ஃபலஸ்தீனியர்களுக்கு தான் உதவியதாகவும் பின்னர் 2006, 2009, 2012 மற்றும் 2014 ஆண்டில் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஃபலஸ்தீனியர்களுக்கு உதவியாதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவர் இஸ்ரேல் ஒரு போதும் மாறப்போவதில்லை என்றும் 34 வருடங்களுக்கு முன் தங்களின் ஆக்கிரமிப்பின் போது எப்படி அடிப்படை வாழ்வாதார தேவைகளை ஃபலஸ்தீன மக்களுக்கு மறுத்தார்களோ அது போன்றே தற்போதும் அவர்கள் மறுத்து, குண்டு போட்டும் கொலை செய்தும் வருகின்றனர் என்று கூறியுள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது பல செய்தி ஊடகங்கள் வெளியிடாதவற்றை மருத்துவர் கில்பர்ட் வெளிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பின் போது எப்படி மருத்துவமனைகளையும், அவசர ஊர்திகளையும், இலக்குகளாக்கியது என்றும் அதில் எத்தனை மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் கொல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மக்களை தங்களது அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதை விட்டு அச்சம் ஏற்படுத்தி தவிர்ப்பதற்காக நடத்தப்பட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த தாக்குதல்கள் வேண்டுமென்றே நடத்தப்பட்டவை. 2014 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் போது ஏன் 47 ஆம்புலன்ஸ்கள் தாக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பிய அவர், தாங்கள் செய்யும் இந்த செயல்கள் சர்வதேச சட்டங்களை மீறுவது என்று இஸ்ரேலியர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் அவர்கள் எப்போதும் தண்டனையை விட்டு தப்பிக்கும் பாதுகாப்பு பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார்.
பல நேரங்களில் காஸாவில் உள்ள அப்பாவி பொதுமக்களை கொலை செய்ய அவர்கள் மத்தியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருகின்றது என்று இஸ்ரேல் கூறி வந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் கில்பர்ட், “இது முட்டாள் தனமான போலிக் கூற்று” என்று கூறியுள்ளார். “இஸ்ரேல் தாக்கிய பள்ளிகளில் ஆயுதங்கள் இல்லை. அவர்கள் தாக்கிய மருத்துவமனைகளில் இல்லை, மசூதிகளில் இல்லை. இன்னும் அவர்கள் குடியிருப்பவர்கள் உள்ளிருக்கும் போதே தரைமட்டமாக்கிய ஆயிரம் ஆயிரம் வீடுகளில் ஆயுதங்கள் இல்லை.” என்று அவர் கூறியுள்ளார்.
இஸ்ரேலியர்களின் உண்மையான நோக்கம் போராளிகளை கொல்வதாக இருந்தால் அவர்கள் எல்லையை திறந்து விட்டு அப்பாவி மக்களை வெளியேறச் செய்திருப்பார்கள். ஆனால் உண்மை என்னவெனில் இஸ்ரேலும் அதன் உற்ற தோழன் அமெரிக்காவும் காஸாவை தாங்கள் உலகிற்கு விற்பனை செய்யும் தங்களது ஆயுதங்களை சோதனை செய்ய ஒரு சிறந்த இடமாக கருதுகின்றனர்.
2014 காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் காஸாவில் உள்ள சிஃபா மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் கில்பர்ட் அங்குள்ள மருத்துவமனைகளின் நிலையை கண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரை பொறுத்தவரை, “கடந்த பத்து வருடங்களான முற்றுகை மற்றும் பற்றாக்குறையின் காரணமாக காஸாவில் உள்ள மருத்துவமனைகளின் நிலையை கற்பனை செய்து பார்க்க முடியாது. அவர்களிடம் அடிப்படை அறுவை சிகிச்சைக்கான கருவிகளோ அல்லது மருந்துகளோ இல்லை. இது மனிதாபிமானத்தின் பேரழிவு, இது விரைவில் முற்று பெற வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
ஊடங்களுக்கு அவர் கொடுத்த பேட்டிகளோடு அல்லாமல் 2014 இல் காஸா மீதான இஸ்ரேலிய போர் குறித்த புத்தகம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். அதில் காசாவில் மருத்துவர்கள் காப்பாற்ற துடிக்கும் உயிர்களை இஸ்ரேல் அறுவடை செய்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். “அதனால் தான் நான் எனது புத்தகத்திற்கு ,காஸாவில் ஒரு இரவு, என்று பெயர் வைத்துள்ளேன். இதில் 2014 இல் இஸ்ரேல் புரிந்த போர் குற்றங்களை ஒவ்வொரு நிமிடமாக நான் தகுந்த புகைப்பட ஆதாரங்களுடன் நான் குறிப்பிட்டுள்ளேன்.” என்று கூறியுள்ளார்.
1970 களில் இருந்தே ஃபலஸ்தீனத்தின் தீவிர ஆதரவாளரான மருத்துவர் கில்பர்ட்,”2009 இல் பயன்படுத்தியதை விட ஐந்து மடங்கு அதிக எடையுள்ள குண்டுகளை 2014 இல் இஸ்ரேல் காஸா மக்கள் மீது பயன்படுத்திய போது, ஃபலஸ்தீனிய மருத்துவமனைகளில், தலையில்லாமல், பல துண்டுகளாக சிதறடிக்கப்பட்டு, தலையிலும் முகத்திலும் உடல் முழுவதிலு தீக் காயத்துடன் வந்தவர்களை என்னால் மறக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் இந்த போரை ஆவணப்படுத்தியது இந்த புத்தகத்தோடு நிற்கவில்லை, ஐக்கிய நாடுகள் சபைக்கு அவர் எழுதிய கடிதத்தில் இஸ்ரேலின் முற்றுகையினால் ஏப்படும் பேரழிவுகளையும் போதுமான வாழ்வாதார சூழ்நிலை இல்லாத நிலையம் அடுத்தடுத்த இஸ்ரேலிய போர்களால் காஸாவின் நிலை குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஃபலஸ்தீன மக்களை குறித்து அவர் குறிப்பிடுகையில், “இஸ்ரேலின் இந்த 51 நாள் தாக்குதலில், மின் உற்பத்தி நிலையங்களும், நீர் நிலைகளும், கட்டிடங்களும், அழிக்கப்பட்ட போதும் அனைத்து மக்களும் ஒரே குடும்பம் என்று உயிர்களை பாதுகாக்கவும் காயங்களை ஆற்றவும் அம்மக்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் எடுக்கும் முயற்சி என்னை ஃபலஸ்தீனுக்கு எப்போதெல்லாம் தான் தேவைப்படுகிரேனோ அப்போதெல்லாம் அங்கு செல்ல உறுதிபூண செய்கிறது” என்றும் இது வாழ்நாள் அர்ப்பணிப்பு என்று அவர் கூறியுள்ளார்.
பல இடங்களில் ஃபலஸ்தீன மக்களுக்காக உழைக்கும் கில்பர்ட் ஒரு பாராட்டுக்குரியவராக தலை சிறந்தவராக பார்க்கப்படும் நிலையில் அவரோ தன்னை தான் அவ்வாறு பார்ப்பதில்லை என்றும் “உண்மையில் பாராட்டுக்குரியவர்கள் இத்துணை உறுதியுடைய காஸாவின் மக்களே, அவர்கள் வெறுமையில் இருந்து வாழ்க்கையை உருவாக்குகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும் தான் இந்த உலகிற்கு சொல்ல அதிகம் விரும்புவது இஸ்ரேலிய போர் எந்திரம் முன்னர் ஃபலஸ்தீனிய மக்களின் வீரம் மற்றும் முற்றுகை மற்றும் பல போரினால் பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் வாழ அவர்கள் காட்டும் உறுதி. அங்குள்ள குழந்தைகள், பெண்கள், ஆண்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஏன் காயமடைந்தவர்கள் தான் நிஜ கதாநாயகர்கள் என்று தான் பெருமையுடன் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய அவர், இந்த சட்டங்களெல்லாம் எங்கே என்றும் இஸ்ரேலை அவர்களது செயல்களுக்காக குற்றம்பிடிக்காமல் இருப்பது ஏன் என்றும் இஸ்ரேல் செய்தது போன்று காஸா 70 மருத்துவமனைகளை குண்டு வீசி தாக்கியும் 47 ஆம்புலன்ஸ்களை தாக்கியும் 21 மருத்துவர்கள் மற்றும் 556 குழந்தைகளை கொன்றும் இருந்தால் சர்வதேச சமூகத்தின் பார்வை இவ்வாறு தான் இருந்திருக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சர்வதேச சமூகத்தின் இரட்டை நிலையையும் அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
“இஸ்ரேல் 2200 மக்களை கொன்றுள்ளது. அதில் 556 பேர் குழந்தைகள். 200 பேர் பெண்கள் என்று இருந்தும் அது இன்னமும் அமெரிக்காவின் ஆதரவையும் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் பெற்று வருகிறது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை வேண்டுமென்றே மீறி வருகிறது என்றும் வல்லரசுகள் ஃபலஸ்தீனை ஆக்கிரமிக்க இஸ்ரேலுக்கு அதிகாரம் கொடுத்துள்ளனவா? என்று அவர கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் “ஃபலஸ்தீன மக்கள் தங்களது நிலத்தை பாதுகாக்கும் உரிமையை ஏன் இந்த நாடுகள் மறுக்கின்றன?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலின் இந்த ஆக்கிரமிப்பை தடுக்க எந்த ஒரு முயற்சியையும் எடுப்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நல்ல மனதுடைய மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்காக அவர்களது ஆதரவை தர வேண்டும். “இது எஞ்சியிருக்கும் மனிதநேயத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய கடமை” என்று அவர் கூறியுள்ளார். “அப்படி இல்லை என்றால் வலராறு நம்மை தூற்றும். பொறுப்புள்ள நாடுகள் தங்களது லாபத்திற்காக மனிதாபிமானத்தை விட்டுக்கொடுப்பது வெட்கக்கேடானதும் மனிததன்மையற்றதும் ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.
இறுதியில், ஃபேஸ்புக்கை நேரம் கழிப்பதற்கு பதிலாக இந்த உலக மக்கள் விழித்துக்கொண்டு நீதியை நிலைநாட்ட தொடங்கினால் துனீசியா போல இந்த உலகமே மாறிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலிய போர் குற்றங்களை ஆவணப்படுத்தியுள்ள டாக்டர் கில்பர்ட்
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:04:00
Rating: 5
No comments: