தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும்: நஜீம் ஜைதி
நேர்மையான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு அரசின் ஒப்புதல் கிடைப்பதற்காக காத்திருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார். இந்தியத் தேர்தல் சட்டத்திட்டங்கள் குறித்த தேசியக் கருத்தரங்கம் டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில் நஜீம் ஜைதி பேசியதாவது: “பல்வேறு தருணங்களில் சட்டம் இயற்றுவதற்காக தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட 47 பரிந்துரைகளை தொகுத்து வழங்கி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவை, சட்ட கமிஷனால் ஆராயப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளை சட்டங்களாக இயற்ற சட்ட கமிஷனும் பரிந்துரை செய்துள்ளது.
இவையெல்லாம் சட்ட அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ள ஒரு பணிக்குழுவின் பரிசீலனையில் இருப்பதாக நான் அறிகிறேன். அவற்றின் மீதான முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நாங்கள் செய்துள்ள பரிந்துரைகளில் முக்கியமானவை… அரசியலில் இருந்து குற்றவாளிகளை ஒழிப்பது, பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது, அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் வெளிப்படையான தன்மையைக் கொண்டு வருவது, லஞ்சம் அளிப்பதை குற்றமாக கருதுவது, ஓட்டுக்கு லஞ்சம் தருகிறபோது தேர்தலை தேர்தல் கமிஷனே ரத்து செய்ய அதிகாரம் தருவது, வாக்குச்சாவடிகளை கைப்பற்றுகிறபோது தேர்தலை ரத்து செய்வது போல தேர்தலில் பணத்தை தவறாக பயன்படுத்துகிறபோது தேர்தலை ரத்து செய்வது உள்ளிட்டவை அடங்கும். பல்வேறு தருணங்களில் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள பிரச்னைகள், சவால்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம்.
எனவே தேர்தல் கமிஷன் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட வரைவு மசோதாவை உருவாக்க வேண்டும். அது உரிய அதிகாரம் படைத்தவர்களால் தொடர்ந்து பரிசீலிக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், விரிவாக ஆராயப்பட வேண்டும். இது காலம் கடந்த ஒன்றாகும். இந்த சட்டம் உரிய நேரத்தில் திருத்தி அமைக்கப்பட்டு, தேர்தலில் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது ஓட்டுக்கு லஞ்சம் அளித்தால் தேர்தல் கமிஷனே தேர்தலை ரத்து செய்ய முடியும் என்று வந்திருந்தால், அது சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் வேண்டும்: நஜீம் ஜைதி
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:46:00
Rating:
No comments: