சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?
சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது.
கட்சியின் ஒரு பிரிவு தொண்டர்களால் சசிகலாவின் உருவம் பெரிதுபடுத்தப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் புரிந்து கொள்ளக் கூடியதே. ‘ஜெயலலிதா’ இறந்து விட்டிருக்கிற ஒரு துயரார்ந்த சூழலில், அடுத்த தலைமைக்கான உடனடி நகர்வுகளை கட்சியின் தீவிரத் தொண்டன் விரும்பமாட்டான்தான். அதுவொரு எரிச்சல். அதைத்தாண்டி, ஒரு அதிமுக தொண்டன், சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வான் என்பதும் மிக சீக்கிரமாகவே அதற்கு பழகிக்கொள்வான் என்பதுமே உண்மை. அதிமுகவின் முந்தைய வரலாறு சொல்வதும் அதைத்தான்.
கட்சிக்குள் தான் என்னவாக இருக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் சசிகலா விரைவாக உறுதிபடுத்திக்கொள்ள முயல்கிறார். அதனால் தான் ஜெயலலிதாவின் சமாதி முன்பு அவர் பவ்யமாக நின்று கொள்கிறார். சமாதியின் மீது மலர் தூவி விட்டு நகரும் கட்சியினர், அவரது காலில் விழுந்து எழுகிறார்கள். அதை அவரும் அசையாத மிடுக்குடன் ஏற்றுக்கொள்கிறார். அதிகார மாற்றம் அதிமுகவுக்கான பிரத்யேக வழியில் உறுதி செய்யப்படுகிறது.
அதிமுக ஒரு அரசியல் கட்சி என்பதை விட ‘அதிமுகயிசம்’ என்பதே மிகவும் சுவராஸ்யமானது. ‘ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருப்பதற்கு, எவ்வித அரசியல் அறிவும் தேவையில்லை’ என்பதை உறுதிபடுத்தியதன் வழியாக பெரும் மக்கள் திரளை கட்சிக்குள் ஈர்த்ததுதான் எம்ஜியாரின் வெற்றி. இதன் பொருள், அதிமுகவிற்கு அரசியல் இல்லை என்பதல்ல. அது கைகொள்ளும் அரசியலில் தொண்டனுக்கு எந்த பங்கும் தேவையில்லை என்பதே அது.
ஒரு அரசியல் தொண்டன் கொண்டிருக்க வேண்டிய ‘அடிப்படை அரசியல் புரிதல்’ என்னும் சுமையை இல்லாமல் ஆக்கியதன் வழியாக கட்சியினருக்கு விடுதலை வழங்கியவர் எம்ஜியார். அதனால்தான் அவர் புரட்சித்தலைவர். எந்த வன்முறையும் இல்லாமல் நிகழ்ந்த புரட்சி அது. இதன் அடுத்த கட்டமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், மந்திரிகளுக்கும் கூட அந்த சுமை தேவையில்லை என்பதை உறுதி செய்தவர் ஜெயலலிதா. புரட்சியின் அடுத்த கட்டம் அது. இந்த அரசியல் நீக்கம்தான் அதிமுகவின் பலம். அதுதான் ஒரு தலைமையின் முன்பு கேள்விகளற்று சரணடையும் பண்பாக, கட்சித்தலைவரை கடவுளாக்கித் தொழும் நிலையாக தொண்டனிடம் திரிந்தது.
இந்த மனநிலை, தொண்டனிடம் எவ்வாறு செயல்பட்டதோ அதற்கு நேர் எதிரான ஒரு ஆளுமையை தலைமையிடம் எதிர்பார்த்தது. ஆமாம். அதிமுகவின் தலைமை என்பது முழு சர்வாதிகாரத்தோடு மட்டுமே இருக்க முடியும். ஏனெனில் அப்போதுதான் ஒரு தொண்டன், தலைமைக்கு விசுவாசமாக இருப்பான். தலைமையை நம்புவான். எளிய மக்களை அரசியல் ரீதியாக காயடித்துவிடுகிறபோது, அந்த இடத்தை தலைமையின் வசீகரத்தைக் கொண்டுதான் நிரப்ப முடியும். அதிமுகவில் நிகழ்ந்தது அதுதான்.
இந்த அரசியல் அற்ற மனநிலை, மூர்க்கத்தை ராஜதந்திராமாகவும், நிலபிரபுத்துவ மனநிலையை அன்பாகவும் வரித்துக்கொள்ளும். பெரும் மக்கள் திரளால் ஜெயலலிதா கொண்டாடப்படுவதன் அடிப்படை இதுதான். உறுதி செய்யப்பட்ட தொண்டனின் இந்த சரணாகதி மனநிலையை பூர்த்தி செய்யும் பண்பு யாரிடம் இருக்கிறதோ அவர்தான் அதிமுகவின் கட்சித்தலைமைக்கு வர முடியும். ஆக, சசிகலா தலைமைக்கு வருவதை எதிர்க்கும் அரசியல் ரீதியான பின்புலங்கள் எதுவும் அந்த கட்சிக்குள் இல்லை. மாறாக அவரை ஏற்றுக்கொள்ளும் கூறுகளே விரவிக் கிடக்கின்றன.
இந்த அம்சங்களைப் பற்றி பேசாமல் சசிகலாவை கடுமையாக விமர்சிப்பவர்களை நான் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். ஏனெனில் சசிகலா தலைமைக்கு வருவதை அல்ல, ‘சசிகலாக்கள் மட்டுமே தலைமைக்கு வர முடியும்’ என்பதை உறுதி செய்தது ‘ஜெயலலிதாயிசம்’ தான். சசிகலாவை ஊழல்வாதி என்று தூற்றும் அதே நேரத்தில் ஜெயலலிதாவை புனிதப்படுத்தும் வேலையை மறக்காமல் செய்கிறார்கள். சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வதற்கு எதிராக செயல்படும் மூன்று முக்கியமான தரப்புகள் உண்டு. அவை என்ன?
முதலாவது, ஜெயலலிதாவை ‘உள் மனதில்’ தங்களது பிரதிநிதியாக வரித்துக்கொண்டிருந்த ‘பிராமணீய மத்திய தர வர்க்க மனநிலை’. இனி ஜெயலலிதாவைப் போன்ற ஒரு ‘bold lady’ பிறந்து தான் வர வேண்டும் என்ற அரற்றலாக அது முடிகிறது. திராவிட அரசியலில் எழுச்சிப் போக்கில் ஒதுக்கப்பட்ட ‘பிராமணிய மேட்டிமைத்தனத்தை’ ஜெயலலிதா கைவிடாமல் வைத்திருந்தார் என்று அவர்கள் நம்பினார்கள். அவர்களால் ஜெயலலிதாவின் இடத்தில் சசிகலாவை வைத்துப் பார்க்கமுடியவில்லை. அவர்களது பொருமலுக்குப் பின்னால் இருப்பது விழுமியங்கள் குறித்த கவலை அல்ல. சொந்த விழுமியங்களின் எதிர்காலம் குறித்த ஆற்றாமை.
இந்த இடத்தில் ‘பிராமணீய மனநிலை’ என்று சொல்வது குறியீடுதான். பொதுவான சாதிய மேட்டிமைத்தனத்துடனும் பொருத்திக் கொள்ளலாம். ‘சோ’ போன்ற வலதுசாரி அறிவுஜீவிகள், கண்மூடித்தனமாக ஆதரித்த பத்திரிகைகள், கண்ணீர் மல்க காலில் விழுந்த கட்சிக்காரர்கள் என எல்லாரிடமும் ஜெயலலிதாவின் சாதி குறிப்பிடத்தகுந்த அளவில் ஆதிக்கம் செலுத்தியது. இதை சசிகலா எவ்வாறு கையாள்கிறார் என்பதில் இருக்கிறது, அவர் அடுத்த ‘ஜெயலலிதாவாக’ ஏற்றுக்கொள்ளப்படுவாரா இல்லையா என்பது.
இரண்டாவது, திமுகவை ஆதரிக்கிற மக்கள் சசிகலாவை எவ்வாறு பார்ப்பார்கள் என்பது. திமுக ஆதரவாளர்கள் என்று வருகிறபோது, அவர்களது பெரும் வாக்கு வங்கியான தேவ, வன்னிய, கவுண்ட, தலித் சாதிகள் இதை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதே முக்கியம். திமுக கட்சினர் என்று பார்த்தால், சசிகலாவின் மீது வைக்கிற எல்லா விமர்சனங்களும் சொந்த கட்சிக்குள்ளும் உண்டு என்ற நிதர்சனத்துக்கு முகம் கொடுத்துக்கொண்டே கையைப் பிசைந்தபடி அவர்கள் சசிகலாவை எதிர்ப்பார்கள். சசியை விட ஜெயா மேல் என்ற மொண்ணை வாதமாக ஒரு கட்டத்தில் அது முடிவடையும். ஜெயாவை விட எம்ஜியார் மேல் என்ற அதன் பழைய நிலைப்பாட்டின் அடுத்த எபிசோட் அது.
காத்திரமாக சசிகலாவை நிராகரிக்க வேண்டும் எனில், அவர்கள் முதலில் ஸ்டாலினை நிராகரிக்க வேண்டியிருக்கும். உதயநிதியைக் கூட ஆதரிக்க வேண்டிய வரலாற்றுக் கடமை அவர்களுக்கு இருப்பதால் அதில் மேற்கொண்டு யோசிக்க ஒன்றுமில்லை. அதையும் மீறி அவர்கள் எழுப்பும் கேள்விகளை, நடராஜனின் சட்டைப்பையில் இருக்கும் சில தமிழ் தேசியர்களே எளிதாக சமாளிப்பார்கள். இந்த இடத்தில் கம்யூனிஸ்ட்கள் என்ன செய்வார்கள் என்பதற்கான பதிலை, நல்லகண்ணு போன்றவர்கள் வெளிப்படுத்தி விட்டார்கள். எம்ஜியார் முன்னெடுத்த புரட்சிக்கு முன்னால், தாங்கள் முன்னெடுக்கும் புரட்சி ஒன்றுமே இல்லை என்று புரிந்துகொண்டவர்கள் அவர்கள்.
மூன்றாவது தரப்பு மிகவும் மைனாரிட்டியான அறிவுஜீவித் தரப்பு. இன்னும் கூட மதிப்பீடுகள், விழுமியங்கள், மக்களாட்சித் தத்துவம் போன்ற தேய்ந்த வார்த்தைகளைக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் ‘சிறிய கும்பல்’ அது. அதற்கு நமது சூழலில் எந்த பெறுமதியும் இல்லை. அவர்கள் பேசுவதை ‘முனகல்’ என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அவர்கள் ஒரு ‘சீரிய கருத்து நிலையை’ மக்களிடம் தக்க வைக்க தொடர்ந்து முயன்று கொண்டே இருப்பார்கள். அதற்காக அவர்களது சாதனைகள் ஒன்றுமே இல்லையென்று அர்த்தம் அல்ல.
ஆனாலும், வரும்காலத்தில் இந்துத்துவ எதிர்ப்பைக் கூட தனக்கு சாதகமாக சசிகலா பயன்படுத்திக்கொள்ள முனையும்போது அவர்கள் மவுனமாக அழுதபடி கையசைப்பார்கள். சசிகலாவின் தலைமைக்குப் பின்னால் இருக்கும் நடராஜனின் ஆகிருதியைப் போன்ற அபத்தம் அது. அரசியல் என்றால் அபத்தமும் ஆபத்தும் இல்லாமல் இருக்குமா!
ஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்),சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள்
சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:38:00
Rating:
No comments: