பணமதிப்பு நீக்கமும் அமைப்புசாரா பொருளாதாரமும்


-ம.விஜயபாஸ்கர்
தமிழில்: ஜெ.ஜெயரஞ்சன்
இந்திய தலைமை அமைச்சரின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு இந்தியப் பொருளாதாரத்தின் அமைப்புசாரா பகுதியை எவ்வாறு பாதிக்கிறது என்பதே இக்கட்டுரையின் கருப்பொருளாகும். இந்த அறிவிப்பு, அமைப்புசாரா தொழிலாளர்களை தொடர்ந்து அமைப்புக்குள் வர இயலாமல் தடுக்கும் அதேவேளையில், மிகவும் தந்திரமாக அவர்களது நிதி நடவடிக்கைகளை மட்டும் அமைப்புக்குள் கொண்டுவர எடுக்கப்படும் ஒரு முயற்சி என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் எந்த ஒரு புறக் காரணிகளால் தடைபட்டாலும் அதனால் எவ்வளவு இழப்பு என்பதை தொழில் கூட்டமைப்புகள் உடனடியாக அறிவிப்பது வாடிக்கை. புயலோ, வெள்ளமோ, நமது நாட்டின் தொழிற்துறையை முடக்கும்போது அதனால் ஏற்படும் இழப்பைக் கணித்து அதை வெளியிடுவது அவர்களின் வாடிக்கை. ஆனால் பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதாரம் பெருமளவில் முடங்கியபோதும் கூட்டமைப்புகள் மவுனம் காத்தது பெரும் ஆச்சரியமே. இந்திய வரலாற்றில் இவ்வளவு பெரிய முடக்கம் ஏற்பட்டபோதும் இம்மவுனம் தொடர்ந்தது.
தற்போதுதான், CMIE என்ற அமைப்பு இந்த முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பு ரூ.16,800 கோடி என மதிப்பிட்டு வெளியிட்டது. இதைக் கணக்கிடும்போது புதிய நோட்டு அச்சிடுதல், அதை நாட்டின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லுதல், மக்கள் வரிசையில் நிற்பதால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொண்டது. இம் மதிப்பீடு, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல இழப்புகளை போதுமான அளவில் கணக்கில் கொள்ளவில்லை.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கான காரணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. கருப்புப் பண ஒழிப்பில் தொடங்கி, பணமில்லா பொருளாதாரம் என தினமும் ஒரு காரணத்தை ஆட்சியாளர்கள் கூறிவருகிறார்கள். இந்தக் கனவே ஒரு நகைமுரண்தான். கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வறுமையின் விளிம்பில் ஊசலாடும்நிலையில், ‘பணமில்லா பொருளாதாரம்’ என்பது எத்தகைய ‘கனவு?’. நாட்டில் உள்ள உழைப்போர் எண்ணிக்கையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 93 விழுக்காட்டினர் என்பது நாம் அறிந்ததே.
சிறிய தொழில்புரிவோரும், தினக் கூலிகளும் மற்றும் போதுமான அளவுக்கு வேலை வாய்ப்பு அற்றவர்களும் பெரும்பான்மையாகத் திகழும் நம் நாட்டில் இந்த நடவடிக்கையானது, இவர்களை எப்படியெல்லாம் குறுகிய காலத்தில் பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது நமது கடமையல்லவா? சில அரசியல் விமர்சகர்கள், இம்முடிவு, ஒரு அரசியல் முடிவுதானே அல்லாமல் ஒரு பொருளாதார முடிவு அல்ல எனக் கூறினாலும் இதன் தாக்கத்தை நாம் புரிந்துகொள்வது மிகவும் தேவையான ஒன்று.
அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலை:
அமைப்புசாரா தொழிலாளர்கள் என்போர் நான்கு வகையினர். சுயதொழில் புரிவோர், கூலி வேலை செய்பவர்கள், சிறு மற்றும் குறு தொழில் புரிவோர் மற்றும் அமைப்புசார்ந்த தொழிலில் பணிபுரியும் அமைப்புசாரா தொழிலாளர்கள்.
2000 - 2011-12 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், தமிழகம் தவிர்த்த இதர பெரிய மாநிலங்களில் சுயதொழில் புரிவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. முதலாளித்துவ உற்பத்தி பெருகும்போது சுயதொழில் புரிவோர் காணாமல் போவதுதான் வரலாற்றில் வாடிக்கை. ஆனால் இந்தியாவில் அது நடைபெறவில்லை. மாறாக, அவர்களின் பங்கு இக்காலகட்டத்தில் அதிகரித்து 47 விழுக்காடு என்ற அளவிலிருந்து 52.2 விழுக்காடு என்று உயர்ந்தது. இதேபோல, கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. வளர்ச்சியின் விளைவு தொழிலாளர்களை கூலிகளாக பெருமளவில் மாற்றியது மட்டுமே என்பது தெளிவு.
சுயதொழில் புரிவோர் பெரும்பாலும் விவசாயிகளாக இருப்பது வழக்கம். ஆனால் இக்காலகட்டத்தில் விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துபோனது. ஆக, சுயதொழில் எண்ணிக்கை உயரக் காரணம், விவசாயம் தவிர்த்த மற்ற தொழில்களில் ஏற்பட்ட சுயதொழில் வாய்ப்புகளால் என்பது புலனாகிறது. வேளாண்மையை துறந்தவர்கள் வேறுவழியில்லாமல் இத் தொழில்களில் ஈடுபடுவதால்தான் இந்த மாற்றம்.
இக்காலகட்டத்தில், வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 26.5 விழுக்காடு என்ற அளவிலிருந்து 30 விழுக்காடுகளாக அது உயர்ந்துள்ளது. நிரந்தர வேலையில் இருப்போரில் பெரும்பான்மையினோர், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் சம அளவில் பணிபுரிகின்றனர்.
வேளாண் துறையில் அமைப்புசாரா தொழிலாளர்கள்:
வேளாண் துறையில் உள்ள சுயதொழில் புரிவோரின் நிலையைப் புரிந்துகொள்ள, சிறு மற்றும் குறு விவசாயிகள்தான் மொத்த விவசாயிகளில் 85 விழுக்காட்டினர் என்ற ஒரு தகவலே போதுமானது. அதிலும் குறு விவசாயிகள் 67 விழுக்காட்டினர். போதிய வருமானம் இன்மையால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர். சரிபாதிக்கும் மேலான விவசாயிகள் தனியாரிடம் கடன்பெற்றுள்ளனர். நிறுவனங்களிடமிருந்து கடன் பெறமுடியாத சூழலை இது நமக்கு உணர்த்துகிறது. வங்கிகள் மற்றும் கூட்டுறவுகள் மூலம் கடன் பெறுவோர் மிகவும் சொற்பமே. இதனால், இவர்கள் வாங்கும் கடனுக்கு அதிக வட்டி செலுத்தவேண்டிய கட்டாயம் எழுகிறது.
மேலும் தங்கள் விளைபொருளை இடைத் தரகர்களிடம் விற்பதே பெரும்பான்மையான விவசாயிகளுக்கு வசதியாக உள்ளது. தங்கள் விளைபொருளுக்கு குறைந்த விலையே கிடைத்தபோதிலும் இந்த வழியையே அவர்கள் தேர்ந்தெடுக்க, அவர்கள் மாற்றுவழிகளால் சந்திக்கும் இழப்புகளே காரணமாகும். தங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு சந்தைக்குச் செல்வதால் ஏற்படும் இழப்பு அவர்களுக்கு பெரிய சுமையை உருவாக்குகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் வறட்சி, வேளாண்மை குன்றிப்போன இத் தருணத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அவர்களை மேலும் அவலநிலைக்குத் தள்ளியுள்ளது. இச்சூழலில் சந்தைகள் முடங்கியதால், தங்களின் விளைபொருட்களை அவர்களால் விற்க முடியவில்லை. இது ஒருபுறமிருக்க, கடன் கிடைப்பதும் பெரும்பாடாகப் போனதால் அடுத்த சாகுபடியை தொடரமுடியாத அவலம் மற்றொருபுறம். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமைப்புசாரா கடன் அமைப்புகளை முற்றிலும் முடக்கியதால் விவசாயி, நடுத் தெருவில் திக்கற்று நிற்கிறான். அவன்மீதான ‘நம்பிக்கை’தான் அவனது சொத்து. அதன் அடிப்படையில்தான் அவன், அமைப்புசாரா நிதிச் சந்தையில் இதுவரை கடன் பெற்று வந்தான். பணமற்ற பொருளாதாரத்தில் இந்த ‘சொத்துக்கு’ எந்த மதிப்பும் இல்லை. அவன் எதிர்காலம் என்ன?
தற்போதைய பண மதிப்பிழப்பு அறிவிப்பால், அமைப்புசாரா நிதிச் சந்தையில் வட்டிவிகிதம் உயரும். போதுமான பணமும் புழக்கத்தில் இருக்காது. நிறுவனச் சந்தையிலும் அவனுக்குத் தேவையான பணமும் இல்லை. வழங்க அமைப்புகளும் இல்லை. எப்படி திரும்பச் செலுத்துவது என்ற அச்சத்தில் கடன் வாங்கும் அளவை குறைத்துக் கொள்ளலாம். மேலும் வேளாண் தவிர்த்த பிற செலவுகளுக்கு (மருத்துவம், கல்வி) வாங்கும் கடனின் அளவும் குறைந்துவிடும். கல்வியும் மருத்துவமும் தனியார்மயமானபின் செலவு அதிகரித்திருப்பது இயல்புதானே?
விவசாயிகளுக்கு பணம் வந்துசேரும் மற்றொரு வழி, தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதாகும். சந்தைகள் செயலிழந்துபோனதால் வேளாண் பொருட்களுக்கான மொத்த விலை பாதாளத்துக்கு வீழ்ந்தது. ஆனால் சில்லரை வணிக விலை சிலவற்றுக்கு குறைந்தும் பல பொருட்களுக்கு குறையாமலும் தொடர்கிறது. விவசாயி, தனது பொருளை வந்த விலைக்கு விற்கவேண்டிய அவலத்தையும் அதேசமயம், பெரு வியாபாரிகள் பழைய விலைக்கே விற்பதால் கொள்ளை இலாபமும் பார்த்துவிடுகின்றனர். இதனால் ஏழ்மையில் வாழும் சிறு,குறு விவசாயிகள் உறிஞ்சப்படுவது ஒருபுறமென்றால், பெரு வணிகர்களிடம் பெரும் செல்வம் சேர்ந்துகொண்டிருக்கிறது. கிராமப்புறங்களில் பணத் தட்டுப்பாடு காரணமாக, மக்களின் வாங்கும் திறன் குறைந்து தேவையும் குறைகிறது.
விவசாயிகளைப் பொருத்தவரை, விளைந்த பொருளை விற்க முடியாமலும் அடுத்த பயிருக்குத் தேவையான கடன் கிடைக்காமலும் அல்லல்படுகிறார்கள் என்றால், கிராமங்களில் பெரும்பான்மையாகத் திகழும் விவசாயத் தொழிலாளர்கள் வேலை மற்றும் கூலி இழப்பால் அல்லல்படுகின்றனர். விவசாயிகளிடம் பணம் இல்லாததால் அவர்கள் கூலிக்கு தொழிலாளர்களை அமர்த்தமாட்டார்கள். 100 நாள் வேலைத் திட்டமும் பணப் பற்றாக்குறையால் தேங்கிநிற்கிறது. எட்டு மாநிலங்கள், 100 நாள் வேலையை செயல்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளன.
வருமானத்தில் பெரும் தொய்வுகள் ஏற்படும்போது, தங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றியமைத்துக் கொள்கிறார்களோ நமக்குத் தெரியவில்லை. ஆனால் இதைப்பற்றி ஆய்வு செய்தவர்கள் பொதுவாக கண்டது என்னவென்றால், வருமானத்தில் தொய்வு ஏற்பட்டால் தங்களது செலவுகளை குறைத்துக் கொள்வார்கள் என்பதாகும். இதுமட்டுமல்லாது, சிலர் தங்கள் உடமைகளை விற்றுவிடுவார்கள். சிலர் கடன் வாங்குவார்கள். வேறுசிலர் மருத்துவம் மற்றும் கல்விக்கென செய்த செலவுகளை குறைத்துக் கொள்வார்கள். இவ்வாறு உணவுக்காகவும் மருத்துவத்துக்காகவும் ஆகிற செலவை குறைத்துக் கொள்ளும்போது அதன் பிந்தைய விளைவுகள் மோசமானதாக இருக்கும். எந்தளவுக்கு மோசமானதாக இருக்கும் என்பதை நம்மால் இப்போது கூறவியலாது. தமிழகம் போன்ற மருத்துவ வசதி இலகுவாக கிடைக்கும் மாநிலங்களில் இதன் தாக்கம் குறைவாக இருக்கும். இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலம் நமது இளைஞர்கள் கையில் எனக் கூறிவரும் இந்தத் தருணத்தில், இதுபோன்ற தொய்வுகள் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அன்றாடம் பெறும் கூலியின்/சம்பாத்தியத்தின் வாயிலாக வறுமையின் விளிம்பில் தத்தளிக்கும் கோடானுகோடி உழைப்பாளர்கள் இந்த வேலை/கூலி இழப்பால் என்ன நிலைக்கு ஆளாவார்கள்? இந்த தற்காலிக இன்னல்களை தாங்கிக் கொண்டால் நீண்டநாள் பயன் கிடைக்குமாம். ஒரு நாள் கூலியே குறுகிய காலத்தைத்தானே குறிக்கும்? பண மதிப்புநீக்கம் வாயிலாக இந்தியப் பொருளாதார வளர்ச்சி இரண்டு விழுக்காடு என்ற அளவில் குறையும்போது விளிம்பில் நிற்போர் நிலை என்னவாகும்?
அமைப்புசாரா வேளாண்மை தவிர்த்த துறைகள்:
கடந்த 25 ஆண்டுகளாக வேளாண்மை அல்லாத துறையில் உருவாக்கப்பட்ட வேலைகள் மிகவும் தரம் குறைந்தவை. உற்பத்தித் துறையில் 1.5 விழுக்காடு என்ற அளவிலும் சேவைத் துறையில் 2.5 விழுக்காடு என்ற அளவிலும் புதிய வேலைவாய்ப்புகள் பெருகிய இக்காலகட்டத்தில், கட்டுமானத் துறையில் 10 விழுக்காடு என்ற அளவில் இந்தியாவில் வேலைவாய்ப்பு பெருகியது. கட்டுமானத் துறையில் பணிபுரிவோர் பெரும்பாலும் கூலிகளாகவே பணியமர்த்தப்படுகின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டோரில் மிக அதிகளவில் அல்லல்படுவோர் இவர்களே. அவர்களை இன்னலில் இருந்து மீட்க அவர்களுக்குத் தேவையான உணவை வழங்க கட்டுமானத் தொழில் புரிவோர் நலச் சங்க உறுப்பினர்கள் தள்ளப்பட்டனர்.
கட்டுமானத் துறையில் பெருமளவில், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். வேளாண் துறைக்கு அடுத்தபடியாக, இத்துறையில்தான் வேலை இழப்பும் வருமான இழப்பும் ஏற்படும். பணப் புழக்கம் சீரானபின் வேளாண்துறை மீண்டெழ வெகுகாலம் பிடிக்காது. ஆனால் கட்டுமானத் துறையின் மீதான தாக்கம் நீளும்தன்மை வாய்த்தது. இதையே, மதிப்பிழப்பின் வெற்றியாகவும் கருதக்கூடும். ஏனெனில், இத்துறையில்தான் கருப்புப் பண புழக்கம் அதிகம் என கணிக்கப்படுகிறது. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்மையால் தங்கள் ஊருக்குத் திரும்பி, வேறு வழிகளில் தங்களை காத்துக்கொள்ள வேண்டிய சூழல். இதனால் அத்தொழிலாளர்கள் சார்ந்த குடும்பங்கள் மீதான சுமை அதிகரிக்கும்.
ஜவுளித் துறை, தோல் மற்றும் நகைத்தொழிலில் ஏற்கனவே முடக்கம் தொடங்கிவிட்டதாக பல செய்திகள் வந்தவண்ணமுள்ளன. திருப்பூர் பின்னலாடை தொழிலின் வேகம் குன்றியுள்ளது. விசைத்தறியில் 60 விழுக்காடு தறிகள் தமிழகத்தில் இயங்கவில்லை. சிறு,குறு தொழிற்பேட்டைகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இடுபொருள் பெறவும், கூலி கொடுக்கவும், சந்தைப்படுத்தவும் ஒருவழியும் இல்லை. இங்கு வந்த வெளித் தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். இத்தொழில்களின் கண்ணிகளை இயக்குவது பணமே. பணம் இல்லாததால் அனைத்தும் முடங்குவது மட்டுமின்றி, அவற்றை மீண்டும் இணைத்து இயங்கவைக்க காலம் பிடிக்கும். அதுவரையில், முழு உற்பத்தித் திறனை அடைய முடியாது.
போக்குவரத்துத் துறையும் இதே நிலையை அடைந்துள்ளது. சேவைத் துறை இதற்கு விதிவிலக்கு அல்ல. தேவையற்ற செலவுகளை குடும்பங்கள் தவிர்க்கும்போது சேவைத் துறை குன்றுவது இயல்பே. சாலையோர வியாபாரிகளின் வர்த்தகம் முடங்கி, அவர்கள் வாழ்வது கேள்விக்குறியாகியுள்ளது.
அமைப்புசாரா தொழிலில் பெருமளவு தொழிலாளர்கள் அகப்பட்டிருப்பது ஒருபுறம் என்றால், அமைப்புசார்ந்த தொழிலில்கூட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருகிவரும் அவலம் இந்தியாவில் தொடர்கதையாகிறது. 2000-10 இடையேயான காலகட்டத்தில், அமைப்புசார்ந்த தொழிலில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் மூன்றில் இருவர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
ஒருபுறம், தொழிலாளர்களை பெருமளவில் அமைப்புசாராதவர்களாக புறந்தள்ளும் அதே அரசு, அவர்களின் நிதி நடவடிக்கையை மட்டும் அமைப்புக்குள் கொண்டுவர எத்தனிப்பது எவ்வளவு பெரிய முரண்? மோட்டார் வாகன உற்பத்தி, உணவகம், சுற்றுலா போன்ற துறைகளில் ஏற்படும் தேவைக்குறைவு காரணமாக தொழிலாளர்கள், மேலும் மேலும் ஒப்பந்த அடிப்படையிலோ, கூலி அடிப்படையிலோ பணியமர்த்தப்படுவது பெருகும். சென்னையைச் சுற்றியுள்ள பல மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை வெகுவாகக் குறைத்துள்ளன.
டிஜிட்டல் மற்றும் இதர வேறுபாடுகள்:
டிஜிட்டல் உலகில் இருக்கும் ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நாட்டின் பல கொள்கைகளும் இந்த வேறுபாட்டைக் களையவே முனைகின்றன. நம் நாட்டில் 78 விழுக்காடு மக்களுக்கு இணைய வசதி இல்லை. இந்நிலையில், பணமில்லா பொருளாதாரம் ஏற்படும்போது இணைய வசதி இல்லாதவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். யாரிடம் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான வசதி இருக்கிறதோ அவர்களிடம்தான் வியாபாரம் நிலைக்கும். பெருகும். மற்றவர்கள் அருகிப் போவார்கள். இதையே, பல கள ஆய்வுகள் நிறுவுகின்றன. இதனால் பலரும் வேலை இழப்பர். பரிமாற்றத்தின் திறன் அதிகரிக்கும் அதேவேளையில், வேலையிழப்பும் நிகழும். குறிப்பாக, திறன்குன்றியோர் வேலை இழப்பர். மேலும் நீக்கப்பட்ட மதிப்பைவிட குறைவான அளவில் பணம் சுழற்சிக்கு விடப்பட்டால் எங்கு மின்னணு பரிவர்த்தனை வசதிகள் உள்ளனவோ அவை பயன்பெறும். இந்த வசதி குறைந்த பகுதிகள் பின்தங்கும்.
ஒளிமயமான எதிர்காலமா?
வரிசையில் நின்று மாண்டவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாக இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? ஏழைகளுக்கு இரண்டு மாதப் பிழைப்பு என்பது நெடுங்காலமே! குறுகியகாலம் அல்ல.
அரசு பண மதிப்பிழப்பை அறிவித்ததன்மூலம், தனக்கு அதிக வரி வருவாய் கிடைக்குமென்றும், அதைக்கொண்டு நீர்ப்பாசனம், வீடுகள், கல்வி போன்ற அடிப்படை கட்டமைப்புகளை பெருக்க முடியும் எனவும் கூறுகிறது. இதுவரை ஏன், இவற்றை செய்யவில்லை என்பதை அரசு விளக்காதது ஒருபுறம். மறுபுறம் அது, பண மதிப்பிழப்பு செய்த தொகையின் மிகப் பெரும் பகுதி அதனிடம் வந்து சேர்ந்துவிட்டது. அதாவது, கருப்புப் பணமாக இந்தியாவில் வைக்கப்பட்டிருந்த சிறிய தொகையும் வங்கிகளுக்கு வந்துவிட்டது.
ரியல் எஸ்டேட் துறையின் விலைவீழ்ச்சியால் அத்துறை மீண்டெழும் என எதிர்பார்க்கிறார்கள். வங்கிகளிடம் இருப்பு அதிகரித்திருப்பதால் குறைந்த வட்டியில் நிறைய கடனை அளிக்கவியலும். ஆகவே, தேவை அதிகரிக்கும். தொழில் வளரும். இப்படி நடக்குமா என்பது நிச்சயமில்லை. விலை குறைந்ததால் நிலத்தையோ, வீட்டையோ குறைந்த விலைக்கு விற்க வெகுசிலரே முன்வருவர். மிகவும் சிக்கலில் இருப்போர் மட்டுமே விற்பர். இதனால் ஏற்றத்தாழ்வு இன்னமும் அதிகரிக்கும்.
வங்கிகளிடம் பணம் இருந்தாலும் அமைப்பு சாராமல் இருப்பவர்களால் வங்கிக் கடனை பெற முடியாது. வங்கிகளில் அவர்கள் கணக்கு வைத்திருக்கலாம். ஆனால் அவர்களிடம் சொத்து என்று எதுவும் இல்லை. ஜன் தன் கணக்கில் ஒரு சிறிய தொகையை அரசு செலுத்த முற்படலாம். இதனால் மட்டும் அவர்கள் முறையான வங்கி வலைக்குள் வந்துவிட முடியாது. வங்கிகளில் உள்ள பணம் பெருமளவில் பெரு நிறுவனங்களுக்குத்தான் கடனாக அளிக்கப்பட்டுள்ளது என்பதை பல ஆய்வுகளும் சுட்டுகின்றன. இந்தப் போக்கு, இப்போது மாறும் என நம்புவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. போதுமான அளவு பணத்தை புழக்கத்தில் விடாமல் மக்களை அரசு அமைப்பு நிதி சட்டகத்துக்குள் (Formal Financial System) திணிக்கலாம். ஆனால் அவர்களுக்கு இது ஒரு பெயருக்குத்தான் இருக்கும். அவர்கள், தொடர்ந்து அமைப்புசாரா தொழிலில் தான் இயங்கி வரும்போது எங்ஙனம் நிதிப் பரிமாற்றத்தில் மட்டும் அமைப்புக்குள் வர இயலும்? அவர்களை மேலும் மேலும் அமைப்புசாரா முறைக்குள் திணிக்கும்முகமாக தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றும் அரசு, எங்ஙனம் அவர்கள் நலனை பண மதிப்பிழப்பு மூலம் பாதுகாக்கும்? பொருள் உற்பத்தி மதிப்பில் கூலியின் பங்கு தொடர்ந்து குறைந்துவரும் சூழலில் ‘நிதி இணைப்பு’ (Financial Inclusion) என்று கூறுவதால் மட்டும் சமூக, பொருளாதார இணைப்பு ஏற்பட்டுவிடாது.
*
[‘Formalising Finance, Informalising Labour: Demonetisation and the Informal Economy
-M.Vijayabaskar]( http://www.thehinducentre.com/the-arena/article9428369.ece) என்ற கட்டுரையின் தமிழாக்கம்.
கட்டுரையாளர்: டாக்டர் ம.விஜயபாஸ்கர். பொறியியலில் பட்டம் பெற்றபின் பொருளாதாரத்தில் முனைவர் பட்டத்துக்கான ஆய்வை திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள, வளர்ச்சிக்கான ஆய்வு மையத்தில் (CDS) மேற்கொண்டார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர், தற்போது சென்னை வளர்ச்சி ஆய்வு மையத்தில் (MIDS) இணை பேராசிரியராக பணியாற்றுகிறார். வேளாண்மை, தொழில், தொழிலாளர் நலன், தொழில்நுட்ப மாறுதல்கள் போன்ற பல துறைகளிலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் வருகைதரு ஆய்வாளராக சென்றுவந்துள்ளார். பல நூல்களையும் கட்டுரைகளையும் தனது ஆய்வுகளின்வாயிலாக எழுதி வெளியிட்டுள்ளார். மாநில அரசின் பல ஆய்வுகளை முன்னின்று நடத்தி வருகிறார்.
நன்றி: The Hindu Centre for Politics and Public Policy.
பணமதிப்பு நீக்கமும் அமைப்புசாரா பொருளாதாரமும் பணமதிப்பு நீக்கமும் அமைப்புசாரா பொருளாதாரமும் Reviewed by நமதூர் செய்திகள் on 02:27:00 Rating: 5

No comments:

Powered by Blogger.