எஸ். எஸ். சிவசங்கரன்
வழக்கமாக கான்வாய் கிளம்பினால், பயணிக்கப் போகும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். போயஸ் கார்டன், வேதா நிலையத்தில் இருந்து முதல்வர் கான்வாய் கிளம்பினால் ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா சாலைகள் அலர்ட் ஆகும். சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள் நிற்பார்கள். காவல்துறையினர் பந்தோபஸ்த்திற்கு நிற்பார்கள்.
கான்வாய் என்பது ஒரு தொடராக வாகனங்கள் பயணிப்பது. முக்கியப் பிரமுகர்களின் வாகன அணிவகுப்பை கான்வாய் என அழைப்பது வழக்கம். மாநில முதல்வர்களின் வாகன அணிவகுப்பில் பாதுகாப்பு வாகனங்கள், அதிகாரிகளின் வாகனங்கள் இணைந்து பயணிக்கும். சைரன் முழங்க கான்வாய் செல்வதே ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும்.
அதிலும் ஜெயலலிதா அவர்களின் கான்வாய் சற்று சிறப்பு வாய்ந்தது. பிரதமர் கான்வாய்க்கு நிகரான இவருக்கு. காவல்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் என சற்றே நீண்டது. பாதுகாப்பு வாகனங்களும் கூடுதல். காவல்துறையின் கூடுதல் பாதுகாப்போடு அந்த அணிவகுப்பு மிரட்டலாக இருக்கும்.
காவல்துறை அணிவகுப்போடு செல்லும் முதல்வர் கான்வாய், இன்று ராணுவ அணிவகுப்போடு செல்கிறது. உடன் காரில் பயணித்தவர்கள் எல்லாம் நடை போட்டு செல்கிறார்கள். காரில் அமர்ந்து கம்பீரமாக சென்றவர், இன்று படுக்கையில் செல்கிறார். சாலையில் இருமருங்கிலும் இன்று எதையும் எதிர்பார்க்காத தொண்டர்கள்.
வழக்கமாக பயணிக்கும் அதே மெரினா சாலை. ஆனால் போயஸில் இருந்து புறப்பட்ட கான்வாய் இடையில் ராஜாஜி ஹால் சென்று வந்தது. மெரினாவில் பயணித்து செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்ல வேண்டிய கான்வாய், இடையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு திரும்புகிறது.
ராணுவ டிரக்கோடு இணைக்கப்பட்ட வாகனத்தில் பயணித்த முதல்வர் இதோ. வழக்கமாக வாகனத்திலிருந்து எல்லோரையும் பார்த்து வணங்கும் முதல்வரை, இன்று மற்றோர் வணங்க வருகிறார். வழக்கமாக பூக்கும் அந்தப் புன்னகை தான் இல்லை.
கடைசி கான்வாய் பயணம். கான்வாயில் வரும் அவர் காரில் கம்பீரமாக பறக்கும் தேசியக் கொடி இப்போது அவர் மீது. காவலுக்கு வந்த துப்பாக்கிகள் இன்று இறுதி மரியாதைக்கு முழங்குகின்றன. கோடி கண்கள் துக்கமாய் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்த இரண்டு கண்கள் திறக்காமலே இருக்கிறது.
அவர் முகத்தின் மீது ஒளி உமிழ்ந்த விளக்குகள் அணைந்து விட்டன. அவர் முன் காத்திருக்கும் ஒலி வாங்கி மௌனித்து விட்டது. அவர் பயணித்த வாகனத்திற்கு இனி ஓய்வு. இனி கான்வாய் தொடராது.
நீண்ட பயணம் நிறைவிற்கு வந்தது. புகழ் பயணம் துவங்குகிறது !
- எஸ். எஸ். சிவசங்கரன், திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
.