பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 35% வேலையிழப்பு, 50% வருவாயிழப்பு
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறி பாஜக அரசு அறிமுகப்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 34 வது நாளிலேயே சிறு தொழில்களில் 35% வேலையிழப்பு ஏற்ப்பட்டுள்ளது என்றும் 50% வருவாயிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தியாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள சுமார் மூன்று லட்சம் தொழில்களுக்கு பிரதிநிதியாக திகழும் All India Manufacturers Organisation (AIMO) என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. வருகிற மார்ச் மாதத்திற்குள் இந்த வேலையிழப்பு 60% வரை அதிகரிக்கலாம் என்றும் வருவாயிழப்பு 55% வரை அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு தனது அறிக்கையில், ஏறத்தாழ அனைத்து தொழிற்சாலை செயல்பாடுகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறு தொழில்கள்தான் என்று தெரிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கையால் சில உடனடி பாதிப்புகள் ஏற்படும் என்று தங்களுக்கு தெரிந்திருந்தாலும் இந்த அறிவிப்பின் ஒரு மாதத்திற்கு பின்னரும் நிலவி வரும் பின்னடைவை தாங்கள் எதிர்பார்க்கவோ அல்லது அதற்கென தாயாராகவோ இல்லை என்று கூறியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் AIMO நடத்திய மூன்றாவது ஆய்வின் அறிக்கை தான் இது. நான்காம் கட்ட ஆய்வின் அறிக்கை விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது வெளியான அறிக்கையின் விபரங்களாவது
உள்கட்டமைப்பில் ஈடுபட்டுவரும் நடுத்தர மட்டும் பெரியளவிலான தொழிற்ச்சாலைகள் 35% வேலையிழப்பை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த பிரிவில் 45% வரை வருவாயிழைப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி தொடர்பான தொழில்களில் ஈடுபட்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதற்கொண்ட நடுத்தர மற்றும் பெரியளவிலான தொழிற்சாலைகளில் 30% வேலையிழப்பும் 40% வருவாயிழப்பும் ஏற்பட்டுள்ளதாக AIMO அறிவித்துள்ளது. இது வருகிற மார்ச் மாதத்தில் 35 முதல் 45% வரை அதிகரிக்கலாம் என்று நம்பப்படுகிறது.
உற்பத்தி துறையில் உள்ள இந்த தொழிற்சாலைகளில் தான் குறைந்தளவிலான வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 5% வேலையிழப்பும் 20% வருவாயிழப்பும் ஏற்பட்டுள்ளது. இது மார்ச்சில் 15% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலைக்கு காரணம், பணப்புழக்கம் முற்றிலுமாக குறைந்தது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதை குறைத்து அரசு சட்டங்களை வெளியிட்டது, போதிய ஊழியர்கள் இன்மை, சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு குறைந்தது, வெளிநாட்டினரிடையே இந்திய பொருளாதார நிலவரம் குறித்து ஏற்பட்டுள்ள அச்சம், மோசமான முன்னேற்பாடு, வர இருக்கும் GST வரி குறித்த சரியான தகவல் இன்மை ஆகியன என்று அந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
AIMO வின் தேசிய தலைவர் கே.ஈ.ரகுநாத், இந்த ஆய்வுகள் சிறந்த வல்லுனர்கள் குழுவால் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். அதில் யார் யார் பங்கேற்றனர் என்பது குறித்த தகவல்களை வெளியிட மறுத்த அவர், இதில் பிரபல தொழிலதிபர்கள், சிறு தொழில் மற்றும் ஏற்றுமதி வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள் மற்றும் ஆலோசர்கர்கள் பங்குபெற்றிருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களின் இந்த ஆய்வு முடிவுகளை மத்திய வணிகம் மற்றும் நித்திதுறை அமைச்சகத்திற்கு கடந்த நவம்பர் 12, நவம்பர் 25, மற்றும் டிசம்பர் 12 ஆகிய தேதிகளில் அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனால் துரதிர்ஷ்டவசமாக அந்த அமைச்சகத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் இந்த அறிக்கை மத்திய அரசின் தோல்வியுற்ற திட்டத்தை குறித்தது என்பதால் இந்த ஆய்வில் பங்குபெற்றவர்கள் குறித்த தகவல்களை தங்களால் வெளியிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ரகுநாதன், “அவர்கள் தற்போதைய இந்த அவசரகால நிலையை கண்டுகொள்ளாமல் உள்ளனர். அவர்கள் தங்களது காதுகளை மூடிக்கொண்டு தங்களுக்கு தாங்களே தட்டிக் கொடுத்துக்கொண்டு உள்ளனர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மகாராஷ்டிரா மற்றும் தமிழ் நாடு தான் அதிகளவிலான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் அரசால் புறக்கணிக்கப் பட்டுக்கொண்டு வருகிறது. இதற்கு காரணம் இந்த மாநிலங்களில் செயல்படும் திறனற்ற அரசு” என்று அவர் கூறியுள்ளார்.
AIMO வில் சுமார் 1200 தமிழக தொழிற்சாலைகளும் 3000 மகாராஷ்டிராவை சேர்ந்த தொழிற்சாலைகளும் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் தேசிய அளவில் சுமார் 13000 நேரடி உறுப்பினர்களும் 3 லட்சம் மறைமுக உருபினர்களும் உள்ளனர்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 35% வேலையிழப்பு, 50% வருவாயிழப்பு
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:50:00
Rating: 5
No comments: