ஜல்லிக்கட்டும் பொது சிவில் சட்டமும் : ஓவைசி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டம் இந்துத்துவா சக்திகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று, அனைத்திந்திய மஸ்ஜிதே இத்தஹாதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசதுத்தீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஒவைசி, ‘ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது இந்துத்துவா சக்திகளுக்கு பாடமாக அமைந்துள்ளது. பொது சிவில் சட்டத்தை இந்த தேசத்தில் அமல்படுத்த முடியாது. இந்த தேசம் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் தேசமாக மாற்ற முடியாது. நாம் பல்வேறு கலாச்சாரங்களையும் கொண்டாடும் தேசமாக உள்ளோம்’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொது சிவில் சட்டம் அமல்படுத்தும் முயற்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. இதை பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் நடைபெற்றுவரும் மாணவர்களின் புரட்சி போராட்டம் என்பது பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்துத்துவா சக்திகளுக்கு ஒரு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளதாக ஓவைசி தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் அதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றும், அதை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் இறங்குவார்கள் என்பதை ஓவைசி தனது ட்விட்டர் பதிவின் மூலம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, ‘பொது சிவில் சட்டம் என்பது நமது தேசத்தின் பல்வேறு கலாச்சாரங்களை அழித்து ஒரே கலாச்சாரத்தை பின்பற்றும் தேசமாக மாற்றிவிடும். இது, நமது தேசத்தின் பன்முகத்தன்மையை முற்றிலுமாக ஒழித்துவிடும். இது, நமது தேசத்துக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது’ என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டும் பொது சிவில் சட்டமும் : ஓவைசி
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:41:00
Rating:
No comments: