பணமதிப்பிழப்பால் முதலீடு - உற்பத்தி பாதிப்பு!
பண மதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தும் ஆபத்துகள் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்க அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து, நவம்பர் 9 முதல் புதிய முதலீடுகளுக்கான முன்மொழிதல்களில் சரிவு ஏற்படத் தொடங்கியது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
முன்னதாக புழக்கத்தில் இருந்த 86 சதவிகித ரூபாய் நோட்டுகளை தடை செய்த காரணத்தால், 2016-17 நிதியாண்டில், இந்தியாவின் வளர்ச்சி அளவீட்டில் 7 சதவிகிதம் வரை சரிவு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர்.
2015-16 ல் 7.6% வளர்ச்சி!
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், புதிய முதலீட்டுக்கான முன்மொழிதல்கள், ரூ.1.25 லட்சம் கோடியாக உள்ளது. நரேந்திர மோடி ஆட்சியில், கடந்த 9 காலாண்டுகளில் இதன் சராசரி ரூ.26 லட்சம் கோடி ஆகும். இதோடு ஒப்பிடும்போது, அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் புதிய முதலீடுகளின் சரிவை அறிந்து கொள்ளலாம்.
கடந்த டிசம்பரோடு முடிந்த காலாண்டுக்குப் பிறகும், முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு நீடித்துக் கொண்டிருந்தது. பணமதிப்பிழப்பு அறிவிப்புக்குப் முன்பும் பின்பும், முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இதை விளக்க முடியும். அக்டோபர் - டிசம்பர் காலாண்டில், நவம்பர் 8க்கு முன்பு வரை, ரூ.81,800 மதிப்பில் 227 புதிய முதலீட்டு முன்மொழிதல்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதன் பிறகு பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியான பின்னர் நவம்பர் 9 முதல் டிசம்பர் 31 வரை சுமார் 43,700 மதிப்பில் 177 முதலீடுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
“பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் உருவான நிச்சயமற்றத் தன்மை, புதிய முதலீடுகளின் சரிவில் மிகமுக்கிய இடத்தைப் பெறுகிறது. தற்போது, முதலீட்டுக்கான முன்மொழிதல்கள் சற்று மந்தமாகவே உள்ளது. இது மேலும் சில காலம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
புதிய முதலீடுகளைப் போலவே தயாரிப்பு பணிகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. முதன்முறையாக கடந்த 2016 டிசம்பரில் இந்தியாவின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. நவம்பரில் 52.3 புள்ளிகளாக இருந்த இதன் அளவீடு, டிசம்பரில் 49.6 புள்ளிகளாக குறைந்துள்ளது. 50 புள்ளிகளுக்கு கீழ் குறைவது சரிவையும், 50 புள்ளிகளை விட அதிகரிப்பது வளர்ச்சியையும் குறிப்பதாகும்.
கடந்த 2016ல் நிறுவனங்கள், உற்பத்தியில் கடுமையான பாதிப்பை சந்தித்தன. இதன் பின்னணியில் விற்பனை குறைவும், வேலையின்மையும் இருந்தன. பணமதிப்பிழப்பு அறிவிப்பால் உருவான பண நெருக்கடி, விற்பனை மற்றும் உற்பத்தியில் சரிவை ஏற்படுத்தியது.
வங்கிகள் கடன் கொடுப்பதை நிறுத்தியதும் இதன் ஒரு அங்கமாக இருந்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், வங்கிகள் கடன் கொடுப்பது நவம்பரில் 4.8% குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தியா ரேட்டிங் & ரிசர்ச் ஆய்வு நிறுவனத்தின் முதன்மை பொருளாதார நிபுணர் சுனில் குமார் சின்ஹா இது குறித்து பேசுகையில் , “பண மதிப்பிழப்பு அறிவிப்பு பொருளாதாரத்தை பாதித்திருப்பத்தில் எந்த ஆச்சரியமும் இருக்க முடியாது. வங்கிகளில் கடன் கொடுப்பது தடைபட்டுள்ளதால், புதிய முதலீடுகளுக்கான சாத்தியங்கள் குறைந்தன. ரொக்க பரிவர்த்தனையை மட்டுமே நம்பியிருந்த முறைசாரா நிறுவனங்கள் இதன் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரொக்க பரிவர்த்தனையை மட்டும் சார்ந்துள்ள நிறுவனங்களை மட்டுமல்லாது, தயாரிப்பு நிறுவனங்களையும் இந்த அறிவிப்பு நஷ்டமைடையச் செய்துள்ளது” என்று கூறினார்.
இக்ரா லிமிட்டட்(Icre ltd)-ன் முதன்மை பொருளாதார நிபுணரான அதிதி நாயர் இது குறித்து பேசுகையில், “நவம்பரில் சிமெண்ட், ஸ்டீல் போன்ற நிறுவனங்களின் தயாரிப்பும் முந்தைய மாதத்தை விட குறைந்துள்ளன. ரொக்கம் முக்கிய பங்காற்றும் கட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பண தட்டுப்பாடு, முதலீடு சரிவு, தொழிலாளர் ஊதிய பிரச்னை என பல்வேறு வகைகளில் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொகுப்பு : ரம்யா நாயர்
தமிழில் : பீட்டர் ரெமிஜியஸ்
நன்றி : லைவ்மின்ட்
பணமதிப்பிழப்பால் முதலீடு - உற்பத்தி பாதிப்பு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:49:00
Rating:
No comments: