அரசியல்வாதிகளை வெறுக்கும் இளைய சமுதாயம்!


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ள இளைஞர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்கவரும் அரசியல்வாதிகளை புறக்கணிப்பதோடு, தங்களை நாடி வரும் அரசியல்வாதிகளையும் இந்த இளைஞர்கள் விரட்டியடிக்கிறார்கள். “அரசியலும் வேண்டாம். அரசியல்வாதிகளும் வேண்டாம்” என்று இளைய சமுதாயம் வெறுத்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்களை சந்திக்க முயற்சி செய்த திமுக, செயல் தலைவர் ஸ்டாலின்திருப்பி அனுப்பப்பட்டார். திருச்சியில் போராட்டகாரர்களை சந்திக்க சென்ற கே.என்.நேருவை எதிர்கொண்ட இளைஞர்கள் எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துகொள்கிறோம் நீங்கள் கிளம்புங்கள் என்று வழி அனுப்பி வைத்தனர். அப்போது கிளம்பி சென்ற கே.என்.நேரு மீது தண்ணீர் பாக்கெட்டுகளை வீசியெறிந்து தங்கள் எதிர்ப்பையும், வெறுப்பையும் இளைஞர்கள் காண்பித்தனர். அலங்காநல்லுாரில் போராட்டக்காரர்களை சந்திக்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரும் திருப்பி அனுப்பப்பட்டார். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த திமுக-வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சுகவனம் மீது தண்ணீர் பாக்கெட் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வீசி விரட்டி அடித்தனர். மதுரையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்திக்க வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. நாமக்கல்லில் தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவனுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அரசியல்வாதிகளின்மீது ஏன் இளைஞர்களுக்கு வெறுப்பு வருகிறது என்றால், தங்களின் ஆதாயத்திற்காக மட்டுமே குறிப்பாக தங்கள் சுயநல ஆதாயத்திற்காக மட்டுமே கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் செயல்படுகின்றன என்பதை இளைய சமுதாயத்தினர் உணரத்தொடங்கியுள்ளனர். ஒரு பொதுநலப் பிரச்னைக்குகூட தமிழர்கள் என்ற முறையில் அனைத்துக் கட்சியினரும் ஓன்று கூட மறுத்து வேறுபட்டு செயல்படுவதால் தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான தேவைகளை கூட போராடியே அடைய வேண்டிய நிலையிருப்பதால் இளைய சமுதாயத்தினருக்கு அரசியல்வாதிகள்மீது வெறுப்பேற்பட்டதில் வியப்பில்லை.
உதாரணமாக முல்லை பெரியார் அணை விவகாரம், காவேரி நதிநீர் விவகாரம், பாலாறு நதிநீர் விவகாரம் , கச்சத்தீவு பிரச்னை என்று எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. அதுமட்டுமா, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய எய்ம்ஸ் மருத்துவமனை, விரைவு ரயில் திட்டங்கள், தமிழகம் முழுவதுமுள்ள ரயில் பாதைகளை மின்மயமாக்கும் திட்டம், சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரெட்டை ரயில் பாதை திட்டம் என்று இன்னும் எத்தனையோ திட்டங்கள் அரசியல்வாதிகளின் ஒற்றுமையின்மையால் தமிழகத்திற்கு கிடைக்காமல் இன்றுவரை ஜவ்வுமிட்டாயாக இழுத்து வருகிறது. இதைக்கேட்க எந்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கும் துப்பு இல்லாததால் அதன் வெறுப்பு அனைத்துக் கட்சியினர்மீதும் திரும்பியுள்ளது.
இன்று தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதியதாக உருவான தெலுங்கானா மாநிலங்களின் வளர்ச்சியை பார்க்கையில் தமிழகத்தின் வளர்ச்சி மிகவும் குறைவு என்பதை சிறுபிள்ளைகள் கூட தெரிவிக்கும் வகையில் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்பாடு இருப்பதால் இளைய சமுதாயத்தின் பார்வை தன் கையே தனக்கு உதவி என்ற ரீதியாக ஜல்லிக்கட்டு பிரச்னையில் மாநிலம் முழுவதும் தானாகவே ஒருங்கிணைத்துள்ளது. இதன் பிறகாவது, பொது பிரச்னைக்கு கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்தால் தமிழகம் இந்தியாவில் மட்டுமன்றி உலகளவிலும் நம்பர் 1 என்ற நிலைமையை நிச்சயம் எட்டும் என்பதில் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது என்பது உறுதி.
அரசியல்வாதிகளை வெறுக்கும் இளைய சமுதாயம்! அரசியல்வாதிகளை வெறுக்கும் இளைய சமுதாயம்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.